பயப்படாம இந்த விஷயத்தை எல்லாம் செய்யுங்க... காலேஜ் ரீ-ஓபனுக்கு புதிய பைக்கில் போகலாம்!!
செமஸ்டர் முடிந்து மூடப்பட்ட கல்லூரிகள் மீண்டும் திறக்கும் நாள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. கல்லூரியில் நுழைந்தவுடன் எப்படியாவது ஒரு பைக்கை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை பல இளைஞர்கள் மனதில் உதிக்க ஆரம்பித்துவிடும். கல்லூரி படிப்பை தொடரும் இளைஞன் ஒருவனால் சொந்தமாக ஒரு பைக் வாங்குவது என்பது முடியாத காரியம். ஆதலால் பெற்றோர்கள் மூலமாகவே வாங்க வேண்டியிருக்கும். பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது எப்படி என்பதை பற்றியே இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: நண்பர்களுடன் கலந்துரையாடியதால் பைக்குகளை பற்றி சிறிது தெரிந்திருந்தாலும், மார்க்கெட்டில் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பைக்குகளை பற்றி இணையத்தில் தேடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதேபோன்று போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். பைக்கை ஓட்டுவதற்கு ஏதேனும் பயிற்சிகள் வேண்டுமா என்பதையும் சுய பரிசோதனை செய்து பார்க்கவும்.

பைக்குகளின் பாதுக்காப்பை எடுத்துரைக்கவும்: கார்களை காட்டிலும் பைக்கில் செல்வது பாதுகாப்பு குறைவானதுதான் என்றாலும், இன்றைய கால பைக்குகளில் பல மாடர்ன் பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டி-லாக் பிரேக்குகள் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்றவற்றை யமஹா ஆர்15 வி4 போன்ற பைக்குகளில் இருந்தே பெறலாம். இதனை உங்களது பெற்றோர்களிடம் கட்டாயம் தெரிவியுங்கள்.
பட்ஜெட்: மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்குவது என்பது ஒரு பொருளின் மீது லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்வது போன்றதே. வாங்க விருப்பப்படும் பைக்கின் விலைகள் உடன் இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம், எதிர்காலத்தில் எந்த அளவிற்கு பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உள்ளிட்ட விபரங்களையும் ஆராய்ந்து தெரிவித்தால் உங்கள் மீது உங்களது பெற்றோர்களுக்கு ஓர் நம்பிக்கை உருவாகும்.

மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்: பைக் போன்ற பெரிய பொருளை தனது மகன்/ மகள் எவ்வாறு கையாள்வார்கள்? என்கிற பயம் சில பெற்றோர்களுக்கு இருக்கலாம். அந்த பயத்தை போக்கும் வகையில் சில பல காரியங்களை செய்து பெற்றோர்களின் நம்பிக்கையை பெறலாம். அதாவது, ஏற்கனவே சைக்கிள் வைத்திருந்தால் அதனை முறையாக பராமரிப்பது, பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யலாம்.
முதலுதவி தயாராக இருக்கும் என்பதை உறுதியளியுங்கள்: ஏற்கனவே கூறியதுபோல், பெற்றோர் அல்லது மற்றவர்களின் உதவியில் பைக்கை வாங்குகிறீர்கள் எனில், அவர்களது நம்பிக்கையை பெறுவது முக்கியமான ஒன்று. பைக் வாங்கி கொடுத்தால், விபத்தில் சிக்கி விடுவானோ என்கிற பயம் தான் மற்றவர்களுக்கு இருக்கும். அதனை கலைய முதலுதவிக்கு தேவையான பொருட்களை எப்போதும் பைக்கில் வைத்திருப்பேன் என அவர்களிடம் உறுதியளிக்கவும்.

பேராசை வேண்டாம்: இளம் வயதில் எந்த விலையுயர்ந்த பைக்கை பார்த்தாலும் வாங்க தோன்றும். ஆனால் ஆசையை கட்டுப்படுத்தி கொண்டு, உங்களது டிரைவிங் ஸ்டைல், உடலமைப்பு மற்றும் வாழும் பகுதிக்கு ஏற்ப மோட்டார்சைக்கிளை பெற்றோரிடம் கேட்கவும். பெற்றோரின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டும் பைக்கை தேர்வு செய்வது முக்கியமாகும்.
சண்டை, பிடிவாதங்கள் வேண்டாம்: பெரும்பாலான பெற்றோர் உடனடியாக சம்மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கும் பைக்கை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இந்த விஷயத்தை பற்றி மற்றவர்களிடம் விவாதிக்கவும், மறுத்தால் நீங்கள் என்ன செய்யவுள்ளீர்கள் என்பதை அறிவதற்காகவும் சில பெற்றோர் உங்களது ஆசையை மறுப்பர். அந்த நேரத்தில், பிடிவாதமாகவோ அல்லது கோபமாகவோ இல்லாமல், அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த விஷயங்களில் இளைஞர்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது குடும்பத்தின் பொருளாதார சூழலை ஆகும். ஏனெனில் அடுத்த சில வருடங்களில் நீங்கள் தான் குடும்பத்தை சுமக்க வேண்டிவரும். அதாவது, பைக்கின் மாதத்தவணையும் உங்களது தலையில் வந்தே விழும். ஆதலால், நீங்களும் குடும்பத்தின் ஓர் உறுப்பினர் தான் என்பதை உணர்ந்து புதிய பைக்கை கேளுங்கள்.


Click it and Unblock the Notifications









