கார் வாங்கும் முன்ன நிறைய பேர் இதையெல்லாம் யோசிக்குறதே இல்ல! எல்லாத்தையும் கணக்குல சேர்க்கணும்!
கார் வாங்கும் போது, மொத்த செலவைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதுவும் முதல்முறையாக கார் வாங்குகிறீர்கள் என்றால், இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டும். செய்திகளில் பெரும்பாலும் குறிப்பிடப்படுவது காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ஆகும். ஆனால், கார் வாங்குவது என்பது எக்ஸ்-ஷோரூம் விலையை மட்டும் பற்றி அல்ல.
காப்பீடு (Insurance), பராமரிப்பு, எரிபொருள் மற்றும் வரிகள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. நாம் நினைப்பதை காட்டிலும் எந்தவொரு காரின் ஆன்-ரோடு (On-Road) விலையும் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக உள்ளது. இந்த இடைப்பட்ட செலவுகளை அறிந்து கொள்வதால் கார் வாங்குவதை நீங்கள் சிறப்பாகத் திட்டமிடலாம்.

ஆரம்ப செலவுகள்: ஆரம்ப செலவில் முன்பணம் மற்றும் ஆர்டிஓ (RTO) பதிவு கட்டணம் அடங்கும். முன்பணம் உங்கள் கடன் தொகையை தீர்மானிக்கிறது. அதாவது, காரை புக் (Book) செய்யும்போது செலுத்தப்படும் தொகையை பொறுத்து உங்களது கார் கடனுக்கான வட்டி, செலுத்த வேண்டிய காலம் அமையும். பதிவு கட்டணம் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். துல்லியமான தொகையை அறிய அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
காப்பீட்டுச் செலவுகள்: இந்தியாவில் கார் காப்பீடு கட்டாயமாகும். வாங்கப்படுவது எந்த மாதிரியான கார், எப்போது உருவாக்கப்பட்டது மற்றும் உரிமையாளர் வசிக்கும் பகுதியை பொறுத்து காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை மாறுப்படும். சிறந்த காப்பீடு திட்டத்தைக் கண்டறிய வெவ்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஆண்டுதோறும் உங்களுக்குப் பணத்தை மிச்சப்படுத்தும்.

பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு: வழக்கமான பராமரிப்பு உங்கள் காரை சீராக இயங்க வைக்கும். எந்த பிராண்ட் காராக இருந்தாலும், காரில் ஆயில், டயர்களை அவ்வப்போது மாற்றுவது மற்றும் தகுந்த மெக்கானிக் (Mechanic) மூலம் காரின் பிரேக்குகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிப்பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பழுதுகளும் ஏற்படலாம். ஆதலால், இதற்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் செலவு செய்ய முடியுமா என்பதையும் கார் வாங்கும் முன்னரே உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
எரிபொருள் செலவுகள்: பெட்ரோல்/ டீசல் விலைகள் அடிக்கடி ஏற்ற இறக்கமாக இருக்கும். காரின் மைலேஜ் மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் மாதாந்திர எரிபொருள் செலவைக் கணக்கிடுங்கள். இது உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை திறம்பட நிர்வகிக்க உதவும். எலக்ட்ரிக் கார் (Electric Car) வாங்குவதையும் யோசித்து பார்க்கலாம்.

வரிகள் மற்றும் கட்டணங்கள்: இந்தியாவில் சாலை வரி என்பது வாகனம் வாங்கும் போது ஒரு முறை செலுத்தப்படும் கட்டணம் ஆகும். இது இல்லாமல், குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை கார் எந்த அளவிற்கு மாசுக்களை வெளியேற்றுகிறது என்பதை அறிவதற்கான சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறுவதற்கான செலவு மற்றும் பார்க்கிங் பகுதியை உபயோகிப்பதற்கான செலவு உள்ளிட்ட மற்ற கட்டணங்களும் உள்ளன. இவை சட்டப்பூர்வமாக காரை பயன்படுத்துவதற்கு அவசியம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அனைத்து செலவுகளையும் புரிந்து கொள்வது, காரை பயன்படுத்துவதற்கு பொருளாதார ரீதியாக நீங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது. டென்ஷன் இல்லாத ஓட்டுநர் அனுபவத்தை அனுபவிக்க பட்ஜெட்டை கவனமாக திட்டமிடுங்கள். வருகிற செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பல கார்களின் விலைகள் குறைய உள்ளதால் அதன்பின் காரை வாங்க திட்டமிடுவது சரியான முடிவாக இருக்கும்.
சில நிறுவனங்கள் இப்போதே தங்களது கார்களின் விலைகளை குறைத்துள்ளன. அதுமட்டுமின்றி, தசரா, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கார் நிறுவனங்கள் சலுகைகளை அறிவிக்கும் என்பதால் அவற்றை பயன்படுத்தியும் கார் வாங்கலாம். அதேநேரம், நீண்ட நாட்களுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பழைய ஸ்டாக் கார்களை சலுகையில் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









