ஈசியா கிண்டல் பண்ணிடுறோம்!! வந்தே பாரத் இரயில் ஒன்றை உருவாக்க எவ்ளோ கஷ்டப்படுறாங்க - சென்னை ICF-இல் இருந்து...
ஆளும் மத்திய பாஜக அரசின் சிறப்பான திட்டங்களுள் ஒன்றாக வந்தே இரயில் விளங்குகிறது. ஆரம்பத்தில் சில பல பிரச்சனைகள் வந்தே பாரத் இரயில்களை சுற்றி நடந்தாலும், இன்று நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் இரயில் சேவைகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு வந்தே இரயில்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும். இதற்கு தமிழர்களாகிய நாம் மிகவும் பெருமிதப்பட வேண்டும்.
ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லும் வந்தே பாரத் இரயில்கள் சென்னை ஐ.சி.எஃப் (Integral Coach Factory)-இல் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை ஐ.சி.எஃப்-இல் வந்தே பாரத் இரயில்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பார்வையிட சமீபத்தில் எங்கள் ஒன் இந்தியா குழுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்தியவற்றை பதிவுகளாக இனி பார்க்கலாம்.

"இது வேகத்தின் பிரதிபலிப்பு மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சியின் அளவீடு" என ஹைலைட் படுத்தி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய வந்தே பாரத் இரயில்கள் இந்தியாவிலேயே சென்னையில் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னை ஐ.சி.எஃப்-இல் மொத்தம் 7 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றினாலும், அதில் சில ஆயிரம் பேர் மட்டுமே வந்தே பாரத் இரயில்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
மற்ற இரயில்களை போல் 24 பெட்டிகளை கொண்டில்லாமல், சற்று குறைவாக 16 பெட்டிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் ஒரு வந்தே பாரத் இரயிலை முழுமையாக உற்பத்தி செய்வதற்கு 2 மாத காலம் தேவைப்படுகிறது. எந்தவொரு வந்தே பாரத் இரயிலை உருவாக்குவதற்கு முன்பும், முதலில் அந்த இரயில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெட்டியாக காகிதத்தில் ஸ்கெட் செய்யப்படுகிறது. பின்னர், கார், பேருந்து, லாரிகளை போல் இரயிலும் அடியில் இருந்துதான் உருவாக்க துவங்கப்படுகிறது.

அதாவது, முதலில் இரயில் பெட்டிகளுக்கான சேசிஸ் உருவாக்கப்படுகிறது. சேசிஸை உருவாக்கும் அதே வேளையில் மற்றொரு குழு இரயில் பெட்டிகளுக்கான பக்கவாட்டு சுவர்களை உருவாக்கும். 21 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயிலின் பக்கவாட்டு சுவரை லேசரில் கட் செய்து, பின்னர் ரோபோடிக் ஸ்பாட் வெல்டிங் என்ற மிக பெரிய இயந்திரத்தை கொண்டு வெல்டிங் செய்து ஒட்ட வைக்கின்றனர். இந்த இயந்திரம் வந்தே பாரத் இரயிலை உருவாக்கும் குறிப்பிட்ட குழுவினரிடையே 2 மட்டுமே உள்ளது.
வெல்டிங் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பெட்டிகளின் பக்கவாட்டு சுவர் பகுதி, சோதனைகளில் தேறினால் மட்டுமே அசெம்பிள் லைனுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதேபோன்று மற்றொரு குழு பெட்டிகளுக்கான மேற்கூரைகளை உருவாக்க, பின்னர் இவை அனைத்தும் அசெம்பிள் லைனில் ஓர் இரயில் பெட்டியாக உருமாறுகின்றன. இருப்பினும் அப்போதும் கூட சில வெல்டிங் வேலைகள் இருக்கும் என தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, இருக்கை உள்ளிட்டவற்றை பொருத்துவதற்கான ஹேங்கர்களும் ஓர் பெட்டி உருவான பின்பே ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வேலைகள் முடிந்த பின், அந்த பெட்டி பெயிண்ட் செய்யும் இடத்திற்கு அனுப்பப்படுகிறது. பெயிண்ட் வேலை எல்லாம் முடிந்தவுடன், என்ஜின், இருக்கைகள் உள்பட மற்ற பேனல்கள் பொருத்தும் வேலைகள் துவங்கும். இந்த பணிகளை மற்றொரு குழு மேற்கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு குழுவாக சென்ற பின்பே ஓர் முழுமையான வந்தே பாரத் இரயில் உருவாகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மற்ற இரயில்களும் இவ்வாறுதான் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும் வந்தே பாரத் இரயில்களுக்கு மட்டும் மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளிப்பதற்கு காரணம், இந்த இரயில்களை உற்பத்தி செய்வதற்கான மூல பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்தே பெறப்படுகின்றன, வெளிநாடுகளிடம் கையேந்த தேவையில்லை. இவ்வளவு சிறப்புமிக்க வந்தே பாரத் இரயில்கள் சென்னை ஐ.சி.எஃப்-இல் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை கீழேயுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.


Click it and Unblock the Notifications









