இன்ஸ்சூரன்ஸ் பணம் கிடைக்கும்னு நம்பிக்கிட்டு இருக்காதீங்க! சொந்த பணத்தை செலவு பண்ண வேண்டியதாகி விடும்!
தீபாவளி தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் மக்களை திக்குமுக்காட செய்து வருகின்றன. பார்க்கும் இடம் எல்லாம் பட்டாசு சத்தங்களும், வெடி மருந்து வாசனையும் பரவி காணப்படுகிறது. மற்ற விழாக்களிலும் பட்டாசுகளை வெடித்தாலும், தீபாவளி தினத்தின் போது பட்டாசு வெடிப்பது என்றாலே தனி உத்வேகம் வந்துவிடும். ஆனால், வழக்கத்தை காட்டிலும் தீபாவளி சமயத்தின் போதுதான் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், பட்டாசுகளை வெடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக, அவற்றை வெடிப்பதினால் விபத்துகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பைக் & கார்களில் பட்டாசு தீப்பொறிகள் படும்போது அவை வாகனங்களில் சேதாரத்தை உண்டாக்கலாம். ஆதலால், முடிந்தவரையில் தீபாவளி முடியும்வரையில் கார் & பைக்குகளை ஒரு ஓரமாக பட்டாசு தீப்பொறிகள் படாதவாறு நிறுத்தவும். வாகனத்தை முழுவதுமாக ஏதேனும் தீப்பிடிக்காத மறைப்பால் மூடி வைக்கவும்.

உங்களது கார் & பைக்கில் பட்டாசு தீப்பொறி பட்டால் அது வாகனத்தின் பெயிண்ட்டில் கீறல்களை ஏற்படுத்துவதில் இருந்து வாகனத்தை முழுவதுமாக தீப்பிடிக்க வைக்க கூட வாய்ப்புள்ளது. இவ்வாறு பட்டாசு தீயினால் கார் & பைக் விபத்தில் சிக்கினால் அதற்கு எவ்வாறு இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்வது என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம். அவற்றை மீண்டும் காண நமது செய்தித்தளத்தை பார்க்கவும்.
அதில் கூறப்பட்டதுபோல், பட்டாசு தீயினால் ஏற்படும் சேதங்களுக்கு 3ஆம் தரப்பினருக்கான இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் பணத்தை க்ளைம் செய்ய முடியாது. தெரியாமல் நாமாக ஏற்படுத்தும் சேதங்களுக்கான இன்ஸ்சூரன்ஸ் அல்லது விரிவான இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்திருந்தால் மட்டுமே பட்டாசு தீ விபத்துகளுக்கு இன்ஸ்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியும். ஒரு சில சமயங்களில், இவ்வாறான இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் கொண்டிருப்பினும் உங்களது க்ளைம் புறக்கணிக்கப்படலாம்.

இதற்கு, சில காரணங்களை வைத்து உங்களது இன்ஸ்சூரன்ஸ் க்ளைமை நிராகரிப்பார்கள். அதாவது, உங்களது கார் அல்லது பைக்கில் ஏற்கனவே ஏதேனும் பழுது இருந்து, சரியாக அந்த இடத்தில் பட்டாசு தீப்பொறி பட்டு விபத்து நடந்தால் நீங்கள் எந்தவொரு இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை கொண்டிருந்தாலும் அதற்கு உங்களால் இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், உங்களது காரின் பேட்டரியில் இருந்து ஏற்கனவே சிறு, சிறு தீப்பொறிகள் கார் இயக்கத்தில் இருக்கும்போது வெளிப்படுகிறது எனில், அதனுடன் பட்டாசு தீப்பொறியும் பட்டால் பேட்டரியில் தீப்பற்றிக் கொண்டு அது உங்களது மொத்த காரையும் தீயில் இரையாக்கிவிடும். ஆனால், பேட்டரியை முறையாக பராமரிக்காதது உங்களது தவறு என்பதால், அதற்கு இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாது.

அதாவது, இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்ய நீங்கள் முயற்சித்தாலும் உங்களது விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவர். அதேபோல், காரின் எலக்ட்ரிக் வயரிங் சிஸ்டத்தில் ஏதேனும் பழுது இருந்து, அதன் காரணமாக கார் தீப்பிடித்தால் அதற்கும் உங்களால் இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாது. இவை மட்டுமின்றி, காரின் ஏசி அல்லது எல்பிஜி கேஸ் சிலிண்டரை மாற்றும்போது உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் இன்ஸ்சூரன்ஸ் பணம் கிடைக்காது.
ஏசி கேஸ் அல்லது எல்பிஜி கேஸ் கசிந்தால் அதனை வாசனை மூலமாக எளிதாக கண்டுப்பிடிக்க முடியும். கண்டுப்பிடித்த பின்பும் அதனை பொருட்படுத்தாமல் இருந்தால், தீபாவளி பட்டாசின் தீப்பொறி எரிவாயு கசிவில் படும்போது தீப்பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், ஆயில் லீக் மற்றும் ஓவராக சூடாகும் கார் பட்டாசு தீப்பொறியினால் தீப்பற்றிக் கொள்ள நேர்ந்தால் அதற்கும் இன்ஸ்சூரன்ஸ் கவர் செய்ய முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் இருந்து பார்க்கும்போது, தீபாவளிக்கு முன்னரே காரை நன்றாக பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இல்லையேல் உங்களது அஜாக்கிரதையால் பட்டாசு தீ விபத்திற்கு உங்களது சொந்த பணத்தை செலவிட வேண்டியிருக்கும். காரை சர்வீஸ் செய்ய முடியவில்லை என்றால், சிம்பிளாக கார்/ பைக்கை வீட்டின் ஒரு ஓரத்தில் பத்திரமாக, எந்தவொரு பட்டாசும் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவிடுங்கள்.


Click it and Unblock the Notifications









