முதலமைச்சருக்கே மொட்டையை போட பார்த்து இருக்காய்ங்க! நமக்கே தெரியாம காரில் இந்த தப்பை பண்ணிட்டு இருக்கோம்!!
இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் நீர் கலந்து மோசடியாக விற்பனை செய்யப்படுவதாக கடந்த பல காலமாகவே வாகன ஓட்டிகளிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், சில பெட்ரோல் பங்க் நிலையங்கள் செய்யும் மோசடிகளை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெட்ரோல் பங்க்குகள் செய்யும் இந்த மோசடி அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில் மாநில முதலமைச்சரின் தலையிலேயே கை வைத்துள்ளனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சருக்கு சமீபத்தில் என்ன நடந்தது என்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நமது செய்தித்தளத்தில் கூட அதனை பற்றி விரிவாக பதிவிட்டு இருந்தோம்.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர், பாஜக (BJP) கட்சியை சேர்ந்த மோகன் யாதவ் (Mohan Yadav) ஆவார். பொதுவாகவே, முதலமைச்சரின் கான்வேயில் பல கார்கள் இருக்கும் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்ததே. தமிழ்நாடு முதலமைச்சரின் கான்வேயை கூட நம்மில் நிறைய பேர் நேரில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அந்த வகையில், மத்திய பிரதேச முதலமைச்சரின் கான்வேயிலும் பல்வேறு விலையுயர்ந்த புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) கார்கள் மற்றும் வேன்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறு, ம.பி முதலமைச்சரின் கான்வேக்காக பயன்படுத்தப்படும் 19 கார்கள் மத்திய பிரதேசத்தின் ரட்லம் (Ratlam) என்கிற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு டீசல் நிரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு, மாநில முதலமைச்சரின் கார்கள் என்றும் பார்க்காமல் நீர் கலக்கப்பட்ட டீசலை அங்கிருந்த பணியாளர்கள் நிரப்பி உள்ளனர். இதனால், 19 கார்களும் பெட்ரோல் பங்க்கில் இருந்து வெளியே வந்ததுமே ஸ்டார்ட் ஆகாமல் நின்றுள்ளன. பங்க்கிற்கு கொண்டுவரப்பட்ட அனைத்து 19 கார்களிலும் பழுது ஏற்பட்டதால், இது பங்க்கின் டீசலை நிரப்பியதால் ஏற்பட்டுள்ளது என்பது உடனே கண்டறியப்பட்டது.

இதனை தொடந்து தகுந்த அதிகாரிகளுடன் பெட்ரோல் பங்க்கின் எரிபொருட்களின் தரத்தை சோதனை செய்து பார்த்ததில், எரிபொருள்களில் அவர்கள் நீர் கலந்திருப்பதை உறுதி செய்ததை அடுத்து, அரசாங்கத்தால் பெட்ரோல் பங்க் இழுத்து மூடப்பட்டது. பெட்ரோலை போலவே, டீசலும் நீரின் தன்மைக்கு முற்றிலும் எதிரானது ஆகும். டீசல் உடன் நீரை கலந்து பயன்படுத்துவதினால், காரின் மொத்த என்ஜின் சிஸ்டமும் பழுதடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நீரினால் காரின் என்ஜின் சிஸ்டம் பாதிக்கப்படுவதற்கு முன்னர், முதலாவதாக நீர் கலக்கப்பட்ட டீசல் காரின் எரிபொருள் டேங்கையும், எரிபொருளை என்ஜினுக்கு கொண்டு செல்லும் குழாய்களை அரிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக, காருக்கு அடியில் நீர் கலக்கப்பட்ட டீசல் கசிய துவங்கும். நீர் கலக்கப்பட்ட டீசலாக இருப்பினும், அதுவும் தீப்பற்றும் தன்மை கொண்டது என்பதை மறவாதீர்கள்.

எரிபொருள் குழாயை தாண்டி, என்ஜின் சிஸ்டத்தில் இருக்கும் இன்ஜெக்டர்கள், ஃபில்டர்கள் உள்ளிட்டவற்றையும் நீர் கலந்த டீசல் அரிக்க ஆரம்பித்து என்ஜினின் சிஸ்டத்தை முற்றிலுமாக செயலிழக்க செய்யும். டீசலுடன் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை யாரும் கலக்க போவதில்லை. அந்த சமயத்தில் கிடைத்த நீரை தான் கலப்பர் என்பதால், அந்த நீரில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத பாக்ட்ரீயாக்கள் மற்றும் பூஞ்சைகள் என்ஜின் ஃபில்டரில் சிக்கி, ஃபில்டரை சேதமடைய வைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, நீர் கலக்கப்பட்ட டீசலை ஒருமுறை பயன்படுத்தினாலே நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், அந்த கலப்படம் செய்யப்பட்ட டீசலை காரில் இருந்து மொத்தமாக வெளியேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவிற்கு அது பெரிய வேலை ஆகும். நீர் கலக்கப்பட்ட டீசலை பயன்படுத்தும்போது மேற்கூறப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சில வினாடிகளிலேயே ஏற்பட ஆரம்பித்துவிடும். அதனால்தான், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சரின் கான்வேயில் பயன்படுத்தப்படும் கார்கள் பங்க்கில் இருந்து சில மீட்டர் தொலைவு வெளியே வருவதற்குள் பழுதாகி நின்றுள்ளன.


Click it and Unblock the Notifications









