கார் கண்ணாடியில் கருப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக இருக்கிறதே இது என்ன தெரியுமா?
தினந்தோறும் கார்களை பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கு கார்களில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி தெரிவதில்லை. பல நேரங்களில் தினமும் நாம் ஒரு விஷயத்தைப் பார்த்துக்கொண்டிருப்போம். இது ஏன் வழங்கப்பட்டிருக்கிறது? இதன் பயன் என்ன என்று எல்லாம் நாம் யோசித்திருக்க மாட்டோம். அதன் பயன் நமக்குத் தெரிய வரும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இது இவ்வளவு நாளாக தெரியாமல் போய்விட்டதே எனத் தோன்றும்.
இப்படியாக இன்று கார் பயன்படுத்தும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றித் தான் காணப்போகிறோம். கார் வைத்திருக்கும் பலர் இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போல கார் கண்ணாடியில் கருப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது ஏன் வழங்கப்பட்டுள்ளது என நாம் பெரியதாக யோசித்திருக்க மாட்டோம். பலர் இதை ஏதோ டிசைன் என நினைத்திருப்பார்கள். ஆனால் இது உண்மையில் டிசைன் இல்லை. இதற்குப் பின்னால் அறிவியல் காரணங்கள் இருக்கிறது.

இந்த கருப்பு நிறம் கார் கண்ணாடிகளின் விளிம்புகளில் மட்டுமே இருக்கும். கண்ணாடி என்றால் காரின் விண்ட் ஹீல்டு, பின்பக்க கண்ணாடி, சைடு மிரர் அருகே இருக்கும் கண்ணாடி பகுதி ஆகிய இடங்களில் இதைக் காண முடியும். இது காரின் பாதுகாப்புக்காகவும், உங்களின் பாதுகாப்பிற்காகவும் தான் வழங்கப்பட்டுள்ளது எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? அது தான் உண்மை. இப்படியாகக் கருப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக இருக்கும் இதன் பெயர் ஆங்கிலத்தில் Frits என அழைக்கப்படுகிறது.
இது கண்ணாடியின் விளிம்பு பகுதியில் பட்டையாகவும், அதன் பின் புள்ளி புள்ளியாகவும் இருக்கும். இந்தப்புள்ளி கருப்பு பட்டை பகுதியில் பெரியதாகவும் அடுத்தடுத்த புள்ளிகள் படிப்படியாக சிறியதாகவும் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது கண்ணாடி தயாரிக்கப்படும் போதே இந்த கருப்பு நிறமும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இது காருக்கு 4 விதமான பலன்களைத் தருகிறது.
முதல் பலன் இந்த Frits என்பது காரின் ஃபிரேமிற்கும் காரின் கண்ணாடிக்கும் இருக்கும் கான்டேக்ட் பகுதியில் இடம் பெறும் ஒரு விஷயமாகும். அந்த இடத்தில் காரில் இந்த கண்ணாடியைப் பொருத்த ஒரு விதமான பசையைப் பயன்படுத்துவார்கள். இது நேரடியாகக் கண்ணாடி வழுவழுப்பாக இருந்தால் பசை பிடிக்காது. மாறாக இந்த கருப்பு நிற எனாமல் இருப்பதால் கார் ஃபிரேமுடன் கண்ணாடி பலமாகப் பிடித்துக்கொள்ளும்.
இரண்டாவது பலன் இது கார் கண்ணாடியை ஒட்டும் பகுதியில் மட்டுமல்ல வெளியில் தெரியும் பகுதியிலும் இந்த கருப்பு நிறம் இருக்கும். இது கார் வெயிலில் நிற்கும் போது சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தால் கார் கண்ணாடி ஒட்டப்பட்ட பசை உருகிப் போக வாய்ப்பிருக்கிறது. இப்படி நடந்தால் கண்ணாடியின் பிடித்தம் குறைந்துவிடும். ஆனால் வெளியில் உள்ள இந்த கருப்பு நிற Frits இந்த வெப்பத்தைப் பசைக்குக் கடத்தாமல் தடுக்கும். இதனால் கார் கண்ணாடி ஒட்டப்பட்ட பசை இன்னும் பிடித்ததுடனேயே இருக்கும்.
மூன்றாவது பலன் இந்த கருப்பு நிற பட்டை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பிறகு புள்ளி புள்ளியாக மாறிவிடும். இதன் முக்கியமான பலன் கார் கடுமையான வெயிலில் செல்லும் போது காரின் கண்ணாடியில் உள்ள கருப்பு பட்டையில் விழும் வெயிலின் அளவு சரியாக எல்லா பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கும். புள்ளிகளுக்கு இடையே உள்ள இடைவெளி இந்த வெப்பத்தைக் கடத்தி அனைத்து பகுதியும் ஒரே அளவிலான வெப்பத்தில் வைக்க உதவும், இதனால் கண்ணாடியின் ஒரு பகுதி மட்டும் அதிக வெப்பமாகி உடைவதைத் தவிர்க்க முடியும்.
நான்காவது பலன், இந்த கருப்பு புள்ளிகள் ஒரு அழகிற்காகவும் பயன்படுகிறது. இந்த கருப்பு வெறும் பட்டை வடிவில் மட்டும் இருந்தால் காரின் லுக்கையே அது கெடுத்துவிடும். ஆனால் இப்படி புள்ளி புள்ளியாக இருப்பதும், இந்த புள்ளிகள் கண்ணாடியின் உள்வரிசையில் படிப்படியாக அளவு குறைவாக இருப்பதும் காருக்கே ஒரு நல்ல லுக்கை கொடுக்கும். பார்ப்பதற்கும் முகம் சுழிக்காத அளவிற்கு இருக்கும். இந்த 4 விஷயங்குளக்கா தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கண்ணாடியில் கருப்பு நிறத்தில் புள்ளி புள்ளியான ஒரு டிசைன கொடுக்கின்றனர்.
இந்த Frits பல ஆண்டுகளாக கார்களில் இல்லை. ஆனால் இன்று பெரும்பாலான கார்களில் வந்துவிட்டது. பல கார்களில் இதை வித விதமாக கிரியேட்டிவாக எல்லாம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் செய்யத் துவங்கிவிட்டனர். சிலர் இதிலேயே அவர்கள் பிராண்ட் லோகோ அல்லது மற்ற ஏதாவது விஷயங்களைக் கொடுக்கின்றனர். இது பலரது கவனத்தை ஈர்க்கிறது. இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








