முன் இருக்கையில் குழந்தை இருக்கும்போது, பிரச்சனை இல்லாதது போல தான் தெரியும்! இந்தியாவில் இந்த சட்டம் வரணும்ங்க
துபாய் (Dubai)-இல் ஒருவர் தனது குழந்தையை மடியில் அமர வைத்துக்கொண்டு கார் ஓட்டியதற்காக போலீசாரிடம் சிக்கியுள்ளார். சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் கேமரா மூலமாக பிடிப்பட்ட அந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஓட்டிக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊரில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய இவ்வாறான சம்பவத்திற்கு துபாயில் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதா என அதிர்ச்சியாக வேண்டாம். ஏனெனில், நம் நாட்டிலும் இந்த சட்டத்திற்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னர், துபாயில் இந்த சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
துபாய் நகரத்தை கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நாட்டில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கார் உள்பட எந்தவொரு வாகனத்தின் முன் இருக்கையிலும் அமர வைக்கக் கூடாது என்கிற சட்டம் உள்ளது. 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர், சிறுமியரும் 145செ.மீ-க்கு மேல் இல்லை என்றால் வாகனத்தை முன் இருக்கையில் அமர வைக்கக் கூடாது.

மீறுவோர்க்கு 400 யுஏஇ திர்ஹாம் அபராதம் ஆகும். இந்திய ரூபாயில் தற்சமயம் இதன் மதிப்பு சுமார் ரூ.9,500 ஆகும். இந்த சட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே யுஏஇ-இல் அமல்படுத்தப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த சட்டத்தை வாகன ஓட்டிகள் பலரும் மதிப்பது இல்லை எனவும், இதுதொடர்பான சாலை விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன எனவும் யுஏஇ போலீசார் குமுறுகின்றனர்.
சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றும் வாகன ஓட்டிகளை அதிகம் கொண்ட நாடுகளுள் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இருப்பினும், 10 வயதிற்கும் கீழ் உள்ள 145செமீ-க்கும் உயரம் குறைவான குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் அழைத்து சென்ற குற்றம் தொடர்பாக சுமார் 3,802 வழக்குகளை யுஏஇ நாட்டின் போலீசாரின் பதிவு செய்துள்ளனர். இதில் ஷார்ஜாவின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது.
ஷார்ஜாவில் மட்டும் இதுதொடர்பாக 2,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து அஜ்மனில் 896 வழக்குகளும், அபுதாபியில் 161 வழக்குகளும், துபாயில் 118 வழக்குகளும், ஃபுஜைராவில் 14 வழக்குகளும், ராஸ் அல் கைமாவில் 7 மற்றும் உம் அல் குவைனில் 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்ற சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றக்கூடிய வாகன ஓட்டிகளை அதிகம் கொண்ட யுஏஇ-இல் இவ்வாறு அதிக வழக்குகள் பதிவாகி இருப்பது அங்கிருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது. யுஏஇ போன்ற நாட்டிலேயே இந்த அளவிற்கு இருக்கும்போது, நம் இந்தியாவில் சொல்லவா வேண்டும். இந்தியாவில் இதுபோன்ற சட்டம் எதுவும் கிடையாது.
ஆனால், குழந்தைகளை வாகனத்தின் முன் வரிசை இருக்கையில் அமர வைக்க வேண்டாம் என்பது வலுகட்டாயமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது, யாரேனும் குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைத்து அழைத்து சென்றால், நீங்கள் தைரியமாக முன்வந்து அவரிடம் கேட்கலாம். யுஏஇ அரசாவது பரவாயில்லை, 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முன் இருக்கையில் அமர வைக்கலாம் என கூறுகிறது.
ஆனால், நம் இந்தியாவில் 13 வயது கீழ் உள்ள சிறுவர், சிறுமியரை கூட வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், யுஏஇ நாட்டில் உள்ளதை போன்று இந்த விஷயத்தில் குழந்தைகளின் உயரத்தில் நம் நாட்டில் எந்த பரிந்துரைப்பும் இல்லை. இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் தீவிரமாகவோ அல்லது முனைப்புடனோ இல்லையென்றாலும், காரில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் கடந்த பல வருடங்களாகவே உறுதியாக உள்ளது.
இதன்படி, இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக இருக்கைகளை காருடன் சேர்த்து கொடுக்குமாறு கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன் இருக்கையில் அமர தடைவிதிக்கப்படும் குழந்தைகளை காரின் பின் இருக்கையில் அமர வைத்து அழைத்து செல்லலாம். அவ்வாறு பின் இருக்கையில் அமர வைக்கப்படும் 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அவர்களுக்கான பிரத்யேக குழந்தை இருக்கையில் அமர வைக்கப்படவில்லை என்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், 7- 8 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் அவர்களுக்கான பிரத்யேக இருக்கையில் அமர வேண்டிய அவசியமில்லை. முறையாக சீட் பெல்ட் அணிந்தாலே போதுமானது. 7 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளை தான் பிரத்யேக குழந்தைக்கான இருக்கையில் அழைத்து வேண்டும். இவ்வாறு செயல்முறைக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதினால்தான், இந்த விஷயத்தில் நம்ம ஊர் போலீஸார் குழப்பமடைகின்றனர்.
14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது சீட் பெல்ட் அல்லது குழந்தை இருக்கையை பயன்படுத்துவது கட்டாயம் என மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 பி(2) கூறுகிறது. ஆனால், எந்த வயது வரையில் கட்டாயம் குழந்தைகளை அவர்களுக்கான பிரத்யேக இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. அதனை வகுத்து, இந்த விஷயத்தில் போலீசார் முனைப்பு காட்டினால்தான் காரில் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம் என்கிற நம் மக்களின் எண்ணம் மாறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அன்றைய கால கார்களில் இருந்து இன்றைய கால மாடர்ன் கார்கள் வரையில் எல்லாமே பெரியவர்களுக்கு ஏற்ற மாதிரிதான் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளை பயணத்தின்போது பாதுகாக்கும் வகையில் தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டாலும், காரை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தில் இருந்து சஸ்பென்ஷன், பிரேக், டயர் என எல்லாமே பெரியவர்களுக்கு ஏற்றதுபோலவே உருவாக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு, பின் வரிசை இருக்கைகள் பெரியவர்கள் அமர்வதற்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. விபத்து ஏற்படும் நேரத்தில் அவர்களால் பெரிய சேதத்தில் இருந்து ஓரளவிற்கு சமாளிக்க முடியும்; தப்பிக்க முடியும். அதுவே, அதே இருக்கையில் குழந்தைகளை அமர வைத்தால், விபத்தின்போது அவர்கள் காருக்குள் தூக்கி வீசப்படுவர்கள். இது நீங்கள் நினைப்பதை காட்டிலும் அவர்களுக்கு அதிக காயத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதற்குதான், அவர்களுக்கென்ற பிரத்யேக இருக்கையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய இருக்கையில் அமர்த்தப்படும் அளவிற்கு சிறிய உருவத்தை கொண்டில்லாத குழந்தைகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். காரின் முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்கக்கூடாது என ஏன் சொல்கிறார்கள் என்றால், முன் இருக்கையில் அமர வைக்கப்படும் குழந்தைகள் விபத்தின்போது பலத்த காயம் அடையக்கூடும்.
இத்தனைக்கும் அந்த குழந்தை சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் கூட. இதற்கு காரணம், ஏர்பேக் (Airbag) ஆகும். பயணிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக வழங்கப்படும் இந்த அம்சம் தான் விபத்தின்போது குழந்தைகளின் உயிரை எடுக்க கூட வாய்ப்புள்ளது. விபத்தின்போது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடையக்கூடிய ஏர்பேக்கின் விசை அதிகம் ஆகும். அதனை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது.


Click it and Unblock the Notifications








