சங்கிலியை இழுத்தால் டிரைவர் ரயிலை நிறுத்துவார்னு தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கோம்! பின்னால் இருக்கும் அறிவியல்
இந்திய ரயில் பெட்டிகளில் அவசரகால சங்கிலிகள் வழங்கப்படுகின்றன என்பது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய போவது இல்லை. இவை, பயணிகள் அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவதற்கு உதவுகின்றன. இரயில் ஓட்டுநரும் (லோகோ பைலட்), கார்டும் ரயிலின் எதிரெதிர் முனைகளில் இருப்பதால், இந்த அமைப்பு மிகவும் அவசியமாகிறது.
ரயிலின் பிரேக் பைப்பில் இருந்து காற்றழுத்தத்தை வெளியிடுவதன் மூலம் அவசரகால சங்கிலி அமைப்பு செயல்படுகிறது. காற்றழுத்தம் வெளியானதும் பிரேக்குகள் ஆக்டிவேட் ஆகி, ரயில் நின்றுவிடும். இதை கொஞ்சம் விரிவாக பார்த்தோமேயானால், இதன் பின்னால் சில மெக்கானிசம் முறைகள் உள்ளன. அவற்றை இனி ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

நியூமேட்டிக் பிரேக் மெக்கானிசம்: இந்திய ரயில்வேயில் நியூமேட்டிக் (காற்று அடிப்படையிலான) பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. பிரேக் பைப் ரயிலின் முழு நீளத்திற்கும் பொருத்தப்பட்டுள்ளது. இது தோராயமாக ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 5 கிலோ என்ற நிலையான காற்றழுத்தத்தில் வைக்கப்படுகிறது. இதனால், பிரேக்குகள் எப்போதும் ரிலீஸ் நிலையில் இருக்கும்.
பிரேக்கை செயல்படுத்துதல்: ஒரு பயணி அவசரகால சங்கிலியை இழுக்கும்போது, அந்த குறிப்பிட்ட பெட்டியில் உள்ள பிரேக் பைப்புடன் இணைக்கப்பட்ட வால்வு திறக்கும். இதனால் காற்றழுத்தம் வெளியேறி, ரயிலின் பிரேக்குகள் தானாகவே செயல்பட்டு, ரயில் நிற்கும். பிரேக் பைப்பின் காற்று அழுத்தத்தில் திடீர் குறைவு ஏற்பட்டால், லோகோ பைலட்டின் கேபின் மற்றும் கார்டின் பெட்டியில் ஒலி அலாரம் ஒலிக்கும். லோகோ பைலட் ஹார்னை மூன்று முறை ஒலிக்கச் செய்து, கார்டு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை எச்சரிப்பார்.

பெட்டியைக் கண்டறிதல்: அவசரகால சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டியைக் கண்டறிய, நவீன கால ரயில் பெட்டிகளில் வெளிப்புற ஃபிளாஷர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சங்கிலி இழுக்கப்பட்டால் இவை ஒளிரும். முந்தைய காலங்களில், திறந்த வால்வைக் கண்டறிய கார்டு ஒவ்வொரு பெட்டியையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.
அவசரகால சங்கிலியை ரயிலில் பயணிக்கும் அனைவராலும், எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது. சங்கிலியை இழுப்பதற்கான சரியான காரணங்கள் இருக்க வேண்டும். ஏனெனில், அவசரகால சங்கிலி ஒரு முக்கியமான பாதுகாப்புச் சாதனம். பெயருக்கேற்ப இது உண்மையான அவசர காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பயன்படுத்த அனுமதிக்கப்படும் காரணங்கள்:

மருத்துவ அவசர நிலைகள்: மாரடைப்பு அல்லது வலிப்பு போன்ற திடீர், தீவிர மருத்துவ நிலை ஏற்பட்டால்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்: பெட்டிக்குள் கொள்ளை, திருட்டு அல்லது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தால்.
தீ: பெட்டியில் தீ அல்லது புகை கண்டறியப்பட்டால்.
ஏறுவதில் சிக்கல்கள்: முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி ஒருவர் ரயில் புறப்படும்போது ஏறுவதில் சிரமப்பட்டால்.
பயணிகள் பாதுகாப்பு: ரயில் புறப்படும்போது ஒரு பயணி அல்லது அவரது உடமைகள் கதவில் சிக்கிக்கொண்டால்.
இந்திய ரயில்வே சட்டம், 1989-இன் பிரிவு 141-இன் கீழ், அவசரகால சங்கிலியை அங்கீகரிக்கப்படாத மற்றும் தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்துவது கடுமையான மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஏனென்றால், தவறான பயன்பாடு ரயில்கள் தாமதமாவதற்கும், மற்ற சேவைகளின் அட்டவணையை சீர்குலைப்பதற்கும், ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.

முறையான மற்றும் போதுமான காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்ததாகக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் என இரண்டையும் அனுபவிக்க வேண்டி வரும். ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்கள் அவசர சங்கிலியை சட்டவிரோதமாக இழுப்பவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்வது தொடர்கதையாகி வருகிறது. உதாரணமாக, தெற்கு ரயில்வே 2023-2024 நிதியாண்டில் மட்டும் சுமார் 2,600-க்கும் மேற்பட்ட இத்தகைய வழக்குகளையும் கைதுகளையும் பதிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அவசரகால சங்கிலியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எவருக்கும் ஏற்படக் கூடாது என்பதுதான் இந்தியன் இரயில்வேயின் விருப்பமும் கூட. இருப்பினும், ரயில் பயணங்களின் போது நம்மை மீறி அறியாமல் ஏற்படும் சம்பவங்களை கையாளுவதற்காக தான் இத்தகைய அவசர கால சங்கிலிகள் அனைத்து விதமான இரயில்களில் வழங்கப்படுகின்றன. இந்த சங்கிலிகள் நேரடியாக இரயிலின் இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வசதியை முறையான காரணங்களுடன், பாதுகாப்பாக பயன்படுத்துவோம்.


Click it and Unblock the Notifications









