இன்சூரன்ஸ் கிடைக்கும்னு அசால்டா இருக்காதீங்க; மழை வெள்ளத்தில் கார் மூழ்கினால் இன்சூரன்ஸ் கிடைக்குமா?
தற்போது பெய்யும் மழையில் வெள்ளம் வந்து உங்கள் வாகனம் வெள்ளத்தில் மூழ்கினால் அதற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா? விரிவாகக் காணலாம்.
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் மனிதர்கள், விலங்குகள், கட்டிடம், வாகனங்களும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இப்படியான வெள்ளத்தில் நமது வாகனம் மூழ்கினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வாகனத்தை இன்சூரன்ஸ் செய்திருப்போமே அதன் மூலம் பலன் கிடைக்குமா? வாகனத்தின் ரிப்பேர் செலவை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. மழைக் காலங்களில் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பலருக்கு வெள்ளத்தில் மூழ்கி வாகனங்கள் அதிக செலவுகளை இழுத்துவிட்டுள்ளன.
இதனால் மக்களுக்குத் தெளிவான விளக்கம் கொடுக்கவே இந்த பதிவு. வெள்ளத்தால் பாதித்த வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா என்பது நீங்கள் வானகத்திற்கு என்ன வகையான இன்சூரன்ஸ் வாங்கியுள்ளீர்கள் என்பதைப் பொருத்து தான் இருக்கிறது. பொதுவாக அரசு வாகனங்களுக்கு மூன்றாம் நபருக்கான இன்சூர்ஸை மட்டுமே கட்டாயமாக்க வைத்திருக்கிறது. அந்த இன்சூரன்ஸை மட்டும் வாங்கியிருந்தால் நிச்சயம் வெள்ளச் சேதத்திற்கான பணம் எதுவும் கிடைக்காது.
ஆனால் காம்பிஹேன்ஸிவ் வகை இன்சூரன்ஸில் வாகனத்திற்கான இன்சூரன்ஸை எடுத்திருந்தால் வாகனத்திற்குப் புயல், நில நடுக்கம், வெள்ளம், உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களிலும், திருட்டு, தீ விபத்து, உள்ளிட்ட சம்பவங்களாலும் ஏற்படும் நஷ்டத்திற்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும். இந்த வகை இன்சூரன்ஸை நீங்கள் வாங்கியிருந்தால் இது நிச்சயம் மழை வெள்ளத்தில் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான நஷ்டத்தை ஈடு செய்யும்.
இந்த இன்சூரன்ஸ் சிறிய பாதிப்பு முதல் அதிக செலவு கொண்ட பாதிப்பு மற்றும் முற்றிலுமாக காரே பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று நஷ்டமானாலும் இந்த இன்சூரன்ஸ் உதவும், இந்த வகை இன்சூரன்ஸிற்கு பிரிமியம் தொகை மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையை ஒப்பிடும் போது மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் இது இவ்வாறாக எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் கால கட்டத்தில் நிச்சயம் உதவும்.
வெள்ளத்தால் உங்கள் கார்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
இன்ஜின் பாதிப்பு: மழை வெள்ளத்தால் கார் மூழ்கினால் காரின் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
கியர்பாக்ஸ் பாதிப்பு : மழை வெள்ளம் காருக்குள் வந்தால் கியர் பாக்ஸில் பிரச்சனை வரவும், அல்லது முற்றிலும் செயல்படாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பாதிப்பு: கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எலெக்டரிக்கல் பாகங்கள், சிப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பாகங்களும் காருக்குள் தண்ணீர் வந்தால் முற்றிலும் சேதமாக வாய்ப்புள்ளது.
உட்புற கட்டமைப்பு பாதிப்பு: காரின் சீட், உள்ளிட்ட உட்புற கட்டமைப்புகளும் மழை வெள்ளத்தால் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
மழை வெள்ளத்தால் உங்கள் கார் பாதிக்கப்பட்டால் அதற்கான இன்சூரன்ஸை பெற நீங்கள் செய்ய வேண்டியது. உடனடியாக நீங்கள் இன்சூரன்ஸ் எடுத்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு உங்கள் கார் எப்படி, எங்கே, எந்த நேரத்தில் பாதிக்கப்பட்டது என்பதைப் பதிவு செய்து விடுங்கள். பின்னர் உங்கள் கார் மழை வெள்ளத்தால் தான் பாதிக்கப்பட்டது என்பதற்கான போதுமான ஆதாரங்களையும் சேகரித்துவிடுங்கள். பின்னர் வாகனத்தின் பதிவுச் சான்று, லைசென்ஸ், மற்றும் இன்சூரான்ஸ் ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டிற்கு சென்று இன்சூரன்ஸ் பணத்திற்காக க்ளைம் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








