1 கோடி ரூபாய் காருக்கே இந்த நிலைமை என்றால்... டாடா காருக்கு 5-ஸ்டார் ஏன் கிடைக்குதுனு இதை பார்த்தால் புரியும்!
கார் வாங்குவது பெருசு இல்ல... அதை முறையாக பராமரிப்பதுதான் முக்கியம் என பலர் கூற கேட்டிருப்போம். தினந்தோறும் செய்திகளில் கார் விபத்துகளை பார்க்கும்போது தான் அது எந்த அளவிற்கு உண்மையான வரி என்பது நமக்கு தெரிய வருகிறது. இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் விலை கொண்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்று விலை குறைவான டாடா கார் ஒன்றுடன் மோதலுக்கு உள்ளாகி உள்ளது. விபத்துக்கு பின் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. என்ன நடந்தது? வாருங்கள் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கார் விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதற்கு அதிவேக பயணமும், சாலையில் கவன குறைவும் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. இதனால், கார்களை நல்ல உடல் தரத்துடன் உருவாக்கவும் என கார் நிறுவனங்களை அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். மேலும், கடந்த சில வருடங்களாகவே கார்களில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், ஒருபக்கம் கார் விபத்துகள் நடப்பது தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அவ்வாறு, தலைநகர் டெல்லியில் இந்தியன் கேட்டிற்கு அருகே நடந்த பிஎம்டபிள்யூ கார் விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏனெனில், இந்த விபத்தில் சேதமடைந்த பிஎம்டபிள்யூ கார் ஆனது டாடா பஞ்ச் கார் ஒன்றுடன் மோதலுக்கு உள்ளாகி உள்ளது. ஆனால், அவ்வளவு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் இந்த விபத்தில் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது.

குறிப்பாக, காரின் முன்பகுதி இதற்குபின் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு சிதலடைந்து கிடப்பதை படங்களில் காணலாம். இதில் இருந்து, டாடா பஞ்ச் கார் உடன் இந்த சிவப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ கார் முன்பக்கமாக மோதி உள்ளதை அறிய முடிகிறது. இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களில் விபத்திற்குள்ளான டாடா பஞ்ச் காரை காண முடியவில்லை.
டாடா பஞ்ச் காருக்கு க்ளோபல் என்சிஏபி-யிலும் சரி... பாரத் என்சிஏபி-யிலும் சரி... 5க்கு 5 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு முழு 5 நட்சத்திரங்களை சாதாரணமாக தூக்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்த அளவிற்கு, வலிமையான உடலமைப்பையும், அதிநவீன பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும் கொண்டதாக பஞ்ச் கார் உருவாக்கப்படுகிறது. இதனால், இந்த விபத்திற்கு பின் சம்பந்தப்பட்ட டாடா பஞ்ச் காரின் நிலை என்ன என்பதை அறிய முடியாமல் போனது சற்று ஏமாற்றமாக உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பிஎம்டபிள்யூ கார் இழுத்து செல்லப்பட்டுள்ளது. விபத்திற்கு பின் கார் இயங்காததால், கிரேனை வரவழைத்து சேதமடைந்த பிஎம்டபிள்யூ காரை கொண்டு சென்றுள்ளனர். ஓட்டுனருக்கு பெரியதாக காயமில்லை. போலீசார் முதற்கட்ட விசாரணையில், பிஎம்டபிள்யூ கார் டிரைவர் அதிவேகமாக வந்ததினாலேயே இந்த விபத்து நடந்திருக்கலாம் தெரிவிக்கின்றனர்.
வேகமாக வந்த கார் இடித்ததினால் முற்றிலுமாக காரின் கண்ட்ரோலை இழந்துவிட்டதாக விபத்தில் சிக்கிய டாடா பஞ்ச் கார் டிரைவர் கூறியதை வைத்து போலீசார் தற்போதைக்கு இந்த முடிவுக்கு வந்துள்ளனர். டாடா பஞ்ச் கார் நன்கு வலிமையான, பாதுகாப்பான காராக இருப்பினும், அளவில் சிறியதாகும். டாடா பஞ்ச், ஓர் மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். பவர்ஃபுல்லான கார் வேகமாக வந்து மோதினால், ரோல் ஆகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியதான காராக இருப்பினும், இந்த விபத்தில் பஞ்ச் காரில் இருந்த அனைவரும் உயிர் தப்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தில் பஞ்ச் கார் அவ்வளவு பெரிய மற்றும் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரையும் பெரிய சேதாரத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதில் இருந்து பஞ்ச் காரின் உடல் வலிமையை அறிய முடிகிறது. என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் டாடா பஞ்ச் காருக்கு முழு 5 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டது ஏன் என்பது இப்போது புரிகிறது.


Click it and Unblock the Notifications









