ஏகப்பட்ட பிரச்னை... இந்தியாவில் லாரி தொழிலை வெறுக்கும் டிரைவர்கள்... ஏன் தெரியுமா?
லாரி டிரைவர்கள் வெளிப்படையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

சாலை பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இங்கு வாகன ஓட்டிகளால் போக்குவரத்து விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்படுகின்றன. சாலை விபத்துக்களுக்கு இதுதான் மிக முக்கியமான காரணமாக உள்ளது.

டூவீலர் ரைடர்கள் மற்றும் கார் டிரைவர்களை போன்று, சாலை விபத்துக்களுக்கு லாரி டிரைவர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். இதன்படி மொத்த விபத்துக்களில், லாரிகளின் பங்கு மூன்றாவது இடத்தில் (12.3 சதவீதம்) உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் லாரிகள் மொத்தமாக 57,441 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன. இதில், 23,868 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 51,166 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் லாரி டிரைவர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. புது டெல்லியை சேர்ந்த சேவ் ஃலைப் பவுண்டேஷன் (SaveLIFE Foundation - SLF) எனும் அமைப்பு இந்த ஆய்வை நடத்தியது. மஹிந்திரா அண்டு மஹிந்திராவுடன் இணைந்து, 1,200க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஜெய்ப்பூர், அகமதாபாத், கவுஹாத்தி, கான்பூர் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஒரு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதன்படி இந்தியாவில் ஐந்தில் ஒரு லாரி டிரைவர், வாகனம் ஓட்டும்போது குடிபோதையில் இருப்பதை ஒப்பு கொள்கிறார். பெரும்பாலான டிரைவர்கள் சோர்வாக இருந்தாலும், தூக்கம் வந்தாலும் கூட தொடர்ச்சியாக லாரியை ஓட்டுகின்றனர் என்பதும் இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. சராசரியாக லாரி டிரைவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் டிரைவிங் செய்கின்றனர்.

இதில், 50 சதவீதம் பேர் தொடர்ச்சியாக லாரியை ஓட்டுகின்றனர். சோர்வாகவோ அல்லது தூக்கம் வருவது போன்று உணர்ந்தாலும் அவர்கள் லாரியை ஓட்டுகின்றனர். ஏற்கனவே கூறியபடி ஐந்தில் ஒருவர் லாரி ஓட்டும்போது மது அருந்துவரை ஒப்பு கொள்கிறார். இதுபோன்ற லாரி டிரைவர்களின் விகிதம் மிகவும் அதிகமாக இருப்பது கொல்கத்தாவில்தான்.

இதற்கு அடுத்தபடியாக கான்பூர் மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவை வருகின்றன. இந்த ஆய்வு லாரி டிரைவர்களின் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான அம்சங்களை ஆராய்ந்துள்ளது. அவர்களது தொழில், உடல்நலம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவை முதலாவது. லாரி தொழில் துறையில் நடைபெறும் ஊழல் இரண்டாவது.

இதன்படி 53 சதவீத லாரி டிரைவர்கள் தங்கள் தொழிலில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறைவான மற்றும் ஒழுங்கற்ற வருமானம், அதிகாரிகளின் தொல்லை மற்றும் திட்டமிடப்படாத வேலை நேரம் ஆகியவற்றை அவர்கள் இதற்கு காரணமாக கூறியுள்ளனர். உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் காரணமாகவும், லாரி டிரைவர்களுக்கு தொழிலில் அதிருப்தி ஏற்படுகிறது.

கடுமையான முதுகு வலி, கழுத்து வலி மற்றும் வயிற்று உபாதைகளால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற உடல் நல பாதிப்புகளும், சமூக பாதுகாப்பு இல்லாமை ஆகியவையும் அவர்களுக்கு தொழிலில் அதிருப்தி ஏற்பட முக்கியமான காரணங்களாக உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








