சாகா வரம் பெற்ற ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் சுவாரஸ்யங்கள்!
இன்று மார்க்கெட்டில் ஒரு கார் மாடல் 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்பதே பெரிய காரியமாகிவிட்டது. ஆனால், தலைமுறைகளை தாண்டி விற்பனையில் சரித்திர சாதனைகள் புரிந்த ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் உலகில் மிக நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டு வரும் மாடலாக குறிப்பிடலாம்.
இந்தநிலையில், 21ம் நூற்றாண்டு மாடலாக புதிய ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தனித்துவமான டிசைனால், பல மில்லியன் வாடிக்கையாளர்களை கவர்ந்த இந்த கார், உலகின் மிக பழமையான கார் மாடல்களில் ஒன்று.
மிக நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்து வரும் இந்த பாரம்பரிம் மிக்க கார் மாடல் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

01. முதல் டிசைனர்
1925ம் ஆண்டு ஹங்கேரியை சேர்ந்த பெலா பரேனி என்பவர் மக்கள் காருக்கான சேஸியை வடிவமைத்து கொடுத்தார். அதன் அடிப்படையாகக் கொண்டே பீட்டில் கார் உருவாக்கப்பட்டது.
Photo Source: Wiki Commons

02. ஹிட்லரின் கனவு கார்
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர், தனது நாட்டு மக்களுக்கு தோதுவான விலையில் 4 பேர் செல்லக்கூடிய ஓர் சிறப்பான கார் மாடலை உருவாக்க எண்ணி, ஆஸ்திரிய நாட்டு எஞ்சினியர் பெர்டினான்ட் போர்ஷே வசம் மக்களுக்கான கார் ஒன்றை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

03. ஆட்டோபான் சாலை
புதிதாக உருவாக்கப்பட்ட ஆட்டோபான் சாலையில் ஜெர்மானியர்கள் தங்களது சொந்த காரில் செல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்தே மக்கள் கார் திட்டத்தை ஹிட்லர் கையிலெடுத்தார்.

04. காப்புரிமை பிரச்னை
இரண்டாம் உலகப்போருக்கு முன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது செக்கோஸ்லோவாக்கியாவை சேர்ந்த தத்ரா நிறுவனம் காப்புரிமை வழக்கு தொடர்ந்தது. பீட்டில் கார், தத்ராவின் டி97 காரின் டிசைனை ஒத்திருந்ததாக தகராறு ஏற்பட்டது. 1938ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியா மீது ஜெர்மனி படையெடுத்ததையடுத்து, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

05. முதல் மாடல்
1934ம் ஆண்டு முதல் புரோட்டோடைப் பீட்டில் கார் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1938ம் ஆண்டு பீட்டில் கார் உற்பத்தி துவங்கப்பட்டது.

06. மருவிய பெயர்
இந்த காரை கேடிஎஃப் வேகன் என்று ஹிட்லர் அழைத்தார். ஆனால், ஜெர்மானியர்கள் இதனை ஃபோக்ஸ்வேகன் என அழைத்தனர். ஜெர்மானிய மொழியில் ஃபோக்ஸ்வேகன் என்றால் மக்கள் கார் என்ற பொருள்படுகிறது.

07. செல்லப்பெயர்
1938ம் ஆண்டு ஜூலை 3ந் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் முதல்முறையாக, இந்த காரின் டிசைன் வண்டு போல இருந்ததால், பீட்டில் என குறிப்பிட்டது. அதுவே, பின்னாளில் அதிகாரப்பூர்வ பெயராகவும் மாறியது.
Photo Source: Wikipedia

08. கன்வெர்ட்டிபிள் மாடல்
1940ல் திறந்து மூடும் கூரை அமைப்புடைய பீட்டில் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அப்போதைக்கு அந்த தசாப்தத்தின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையையும் பெற்றது. 1939ம் ஆண்டு ஏப்ரல் 20ந் தேதி ஹிட்லர் பிறந்தநாள். அன்று டைப் 1 பீட்டில் காரின் கேப்ரியோலே மாடல் ஹிட்லருக்கு வழங்கப்பட்டது.

09. ஆம்பிபியஸ் மாடல்
அதிக இடைவெளி இல்லாமல் கட்டமைக்கப்பட்டதால், அந்த கார் சில நிமிடங்களில் தண்ணீரில் மிதக்கும் அம்சம் கொண்டிருந்தது பீட்டில். இரண்டாம் உலகப்போரின்போது ராணுவத்திற்காக, தண்ணீரிலும், தரையிலும் செல்லும் அம்சம் கொண்ட ஆம்பிபியஸ் பீட்டில் கார் உருவாக்கப்பட்டது. மொத்தம் 14,000 கார்கள் போரில் பயன்படுத்தப்பட்டன.

10. விற்பனை சாதனை
1972ம் ஆண்டு பிப்ரவரி 17ந் தேதி அமெரிக்காவின் மக்கள் காராக குறிப்பிடப்படும் ஃபோர்டு மாடல் டி காரின் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் விஞ்சியது. அப்போது 15,007,034 பீட்டில் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

11. மற்றொரு சாதனை
உலக அளவில் விற்பனையில் 20 மில்லியனை தாண்டிய முதல் கார் பீட்டில். மேலும், அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை பெற்றிருந்தது. 2002ம் ஆண்டு அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை கோல்ஃப் பெற்றது.

12. ஒரிஜினல் மாடல்
1938ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை அதிக மாற்றங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட கார் மாடல் என்ற பெருமையும் பீட்டில் காருக்கு உண்டு. ஃபோக்ஸ்வேகன் வரலாற்றில் நீண்ட காலம் தயாரிக்கப்பட்ட மாடல் இந்த கார் 65 ஆண்டுகளில் 21,529,464 பீட்டில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
Photo Source

13. பாதுகாக்கப்படும் உடல்கூடு
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஒரிஜினல் பீட்டில் கார்களின் உடல்கூடுகள் இன்றும், ஃபோக்ஸ்வேகன் மில்டன் கேனிஸ் பார்ட்ஸ் ஸ்டோரில் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.

14. பிரபல கதாபாத்திரம்
டிஸ்னி தயாரித்த கார்ட்டூன் படங்களில் 1963ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இடம்பெற்றதுடன், அது மிகவும் பிரபலமாகவும் விளங்கியது.
Photo Source

15. பிரபல வண்ணம்
ஒயிட் #53 என்ற வண்ணம்தான் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் பிரபலமான வண்ணமாக வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. டிஸ்னி படங்களில் இடம்பெற்ற அந்த பேசும் பீட்டிலின் வண்ணம்தான் இது.
Photo Source

16. வழித்தோன்றல்கள்
பல தலைமுறை கண்டுவிட்ட பீட்டில் கார் பல வாரிசுகளையும் உருவாக்க தவறவில்லை. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கார் மாடல்கள் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப், ஜெட்டா மற்றும் புதிய பீட்டில் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

17. செலிபிரிட்டி கார்கள்
இன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் செல்லப்பிள்ளையாக கைகளில் தவழ்ந்து வருகிறது.

01. சர்வாதிகாரிகளின் சொகுசு கார்கள்...
02. ஆட்டோபான் விரைவு சாலையின் சுவாரஸ்யங்கள்
03. ஆட்டோபான் சாலையின் சுவாரஸ்ய விதிகள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்


Click it and Unblock the Notifications








