இதுவரை அறிந்திராத 10 சுவாரஸ்யமான ஆட்டோமொபைல் உண்மைகள்!
ஆட்டோமொபைல் வரலாற்றை புரட்டுகையில், எண்ணிலடங்கா சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதில், சிலவற்றை அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறோம்.
அதேபோன்று சில பிரத்யேகமான சுவாரஸ்ய தகவல்களை இன்றும் தொகுத்திருக்கிறோம். ஹார்ஸ்பவர் பற்றியும், கார் கடன் கேட்ட ஹிட்லர் உள்ளிட்ட பல சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குதிரைசக்தி திறன்
எந்திர திறனை குதிரைசக்தி அலகால் குறிப்பிடுகிறோம். ஆனால், ஒரு குதிரை எவ்வளவு ஹார்ஸ்பவரை வெளியிடும் தெரியுமா? ஆம், ஒரு குதிரை வெறும் 0.7 ஹார்ஸ்பவரை மட்டுமே அதிகபட்சமாக கொடுக்குமாம்.

எரிபொருள் டேங்க் மூடி
கார்களில் எரிபொருள் டேங்க் மூடி அமைந்திருக்கும் இடம், ஒவ்வொரு கார் மாடலுக்கும் வேறுபடும். இதனை எளிதாக தெரிந்துகொள்ளும் விதத்தில் காரின் எரிபொருள் மானியில் ஒரு அம்புகுறி கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து எரிபொருள் டேங் மூடி எந்த பக்கம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதைவைத்து எரிபொருள் மூடி காரின் வலது பக்கம் உள்ளதா அல்லது இடது பக்கம் உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு விடலாம். படத்தில் பெட்ரோல் பம்ப் குறியீடுக்கு அருகில் அந்த அம்புகுறி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கார் மாடல்களில் இதனை காணலாம்.

டேஷ்போர்டு
காரில் பொருத்தப்பட்டிருக்கும் டேஷ்போர்டு அமைப்பு முதல்முதலாக குதிரை வண்டிகளின் முன்பகுதியில் சாணம் அடிக்காமல் இருப்பதற்காக பொருத்தப்பட்டது. மரத்தாலான டேஷ்போர்டுகளாக அவை இருந்தன.

அபராதம்
உலகிலேயே போக்குவரத்து விதிமீறலுக்காக அதிக அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு சுவிட்சர்லாந்தில் நடந்தது. மணிக்கு 289 கிமீ வேகத்தில் காரை ஓட்டியதற்காக ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் வருமானத்தின் அடிப்படையில், அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.

அப்படியா...
காரின் ரிமோட் கீயை தலைக்கு அருகில் பிடித்தால், அதன் ரேஞ்ச் அதிகரிக்குமாம். காரணம் என்ன தெரியுமா? நம் மண்டை ஓடு ஒரு ஆம்பிளிபயர் போன்று செயல்படும் சக்தி கொண்டதாம்.

மறுசுழற்சி
தற்போது வரும் கார்களில் 95 சதவீத பாகங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும். ஸ்டீல், தரைவிரிப்புகள், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், அலுமினியம் ஆகிய அனைத்தும் மறுசுழற்சி செய்து புதிய கார்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்க முடியுமாம்.

கார் கடன் கேட்ட ஹிட்லர்
1924ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அடால்ஃப் ஹிட்லர் மெர்சிடிஸ் பென்ஸ் டீலரிடம் கார் கடன் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஒரு லிமோசின் காருக்கு அந்த கடனை அவர் கேட்டுள்ளார்.

முதல் விபத்து
1771ம் ஆண்டு நிக்கோலஸ் - ஜோஸப் தயாரித்த நீராவி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த சேதமடைந்த வாகனம் தற்போது பாரிஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட பயணம்
உலகிலேயே முதல்முறையாக மோட்டார் வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தவர் என்ற பெருமை கார்ல் பென்ஸின் மனைவி பெர்தா பென்ஸையே சாரும். 1888ம் ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி தெற்கு ஜெர்மனியிலுள்ள மான்ஹெயிம் என்ற இடத்தில் இருந்து ஃபார்ஸிம் என்ற இடத்திற்கு அவர் சென்றுள்ளார். மொத்தம் இரண்டு நாள் அந்த பயணம் நீடித்தது. நாள் ஒன்றுக்கு 106 கிலோமீட்டர் அவர் பயணித்துள்ளார்.

ஆயுள் கெட்டி
உலகின் நீண்ட ஆயுள் கொண்ட காரை ஆலன் ஸ்விஃப்ட் என்பவர் பயன்படுத்தியுள்ளார். 1928ம் ஆண்டு பட்டம் பெற்றதற்காக ஆலன் ஸ்விஃப்ட்டிற்கு, அவரது தந்தை ரோல்ஸ்ராய்ஸ் பிக்காடில்லி பி1 ரோட்ஸ்டெர் காரை பரிசாக வழங்கியுள்ளார். தனது தந்தையின் அன்பு பரிசான அந்த காரை அவர் தனது 102 வயதில் மரணிக்கும் வரை பயன்படுத்தியுள்ளார். அந்த காரை மொத்தம் 82 ஆண்டுகள் அவர் ஓட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications








