வித்தியாசமான வாகன அருங்காட்சியகங்கள்
நடைமுறையில் காணக் கிடைக்காத அல்லது அரிய பொருட்களை அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வாகனங்களுக்கான அருங்காட்சியகங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன.
அதில், பல சுவாரஸ்யமான பின்னணி தகவல்கள் கொண்ட வாகனங்கள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில், அமரர் ஊர்திகள் உள்பட பல சுவாரஸ்யமான வாகனங்களையும் பின்னணிகளையும் தாங்கி நிற்கும் அமெரிக்காவின் வித்தியாமும், விசித்திரங்களும் நிறைந்த வாகன அருங்காட்சியங்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மான்ஸ்டர் டிரக் மியூசியம்
மான்ஸ்டர் டிரக் எனப்படும் வித்தியாசமும், பிரம்மாண்டமும் நிறைந்த டிரக்குகள் வடிவமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது வியத்தகு விஷயம்தான். மான்ஸ்டர் டிரக்குகளின் வரலாற்றை பேணி காக்கும் வகையில், இன்டியானா மாகாணத்தில் ஆபர்ன் என்ற இடத்தில் ஒரு மியூசியம் செயல்படுகிறது. 1990 முதலான மாடல்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன.

லேன் மோட்டார் மியூசியம்
டென்னிஸி மாகாணத்தில் நேஷ்வில்லி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. உலக அளவில் விசித்திரமாக வடிவமைக்கப்பட்ட 45 விண்டேஜ் கார் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிய வகை மைக்ரோ கார்கள் முதல் 20 அடி உயரமும், 9 அடி விட்டம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்ட ஆம்பிபியஸ் கார்கோ ஹாலர் டிரக்கையும் இங்கு பார்க்கலாம்.

ராணுவ மியூசியம்
போர்க்காலங்களில் பயன்படும் பீரங்கிகள் மற்றும் இதர ராணுவ வாகனங்களை பற்றி அறிந்து கொள்ள சிறந்த மியூசியம். கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க் பகுதியில் அமைந்துள்ளது. இதில், பல்வேறு வரலாற்று பின்னணி கொண்ட வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

வோலோ ஆட்டோ மியூசியம்
இல்லினாய்ஸ் நகரில் அமைந்திருக்கும் வோலோ ஆட்டோ மியூசியம் மிக தனித்தன்மை வாய்ந்த கார்களை தாங்கி நிற்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் பயன்படுத்திய கார்கள், ராணுவ வாகனங்கள், விண்டேஜ் கார்கள் என ஒரு கலவையான ரசனைகளை கொண்ட வாகன மியூசியமாக இருக்கிறது. இதில், பிரபல அமெரிக்க இசை கலைஞர் சுக் பெர்ரியை கவுரவிக்கும் வகையிலான படத்தில் நீங்கள் பார்க்கும் 24 அடி நீள கிதார் காரும் அடங்கும்.

அமரர் ஊர்திகளுக்கான மியூசியம்
ஹூஸ்டன் நகரில் அமரர் ஊர்திகளுக்கான அருங்காட்சியகம் உள்ளது. இதில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்டு ரீகன் மற்றும் ஜெரால்டு ஃபோர்டு ஆகியோரை சுமந்து சென்ற அமரர் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன. முன்பு குதிரைகளை பூட்டி இழுத்துச் செல்லப்பட்ட அமரர் ஊர்திகளும் இங்கு உண்டு.

தீயணைப்பு வாகன காட்சியகம்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்திருக்கும் தீயணைப்பு துறை வாகனங்களுக்கான அருங்காட்சியகத்தில் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 1970களில் பிரபலமான எமர்ஜென்ஸி டிவி ஷோவில் இடம்பெற்ற கிரவுன் ஃபயர்கோச் மற்றும் வார்டு லாபிரான்ஸ் ஆகியவையும் உள்ளன.

ஸ்டட்பெக்கர் தேசிய மியூசியம்
ஒவ்வொரு மியூசியமும் ஒரு தனித்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. அந்த வகையில், ஸ்டட்பெக்கர் கார்களுக்கான இந்த மியூசியம் பல சிறப்புகளை பெற்றது. ஸ்டட்பெக்கர் கார்கள் பற்றிய புத்தகங்கள், தகவல்கள் மற்றும் 50,000க்கும் அதிகமான புகைப்படங்களை இங்கு கண்டு ரசிக்க முடியும் என்பதோடு, 120 ஸ்டட்பெக்கர் விண்டேஜ் கார்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஹாஸ்டெட்லர் ஹஸ்டன் மியூசியம்
இன்டியானாவின் சிப்சேவானாவில் அமைந்துள்ளது ஹட்சன் பிராண்டு கார்களுக்கான இந்த மியூசியம். ரேஸ் உலகில் பிரபல்யமாக இருந்த ஹட்சன் கார் தயாரிப்பு நிறுவனம் 1954ல் மூடப்பட்டது. டெட்ராய்ட் நகரிலிருந்து சிகாகோவுக்கு வெறும் 3 மணி நேரத்தில் இன்டியானா போலீஸ் சென்றதாக இந்த மியூசியத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஹட்சன் கார்களும், ஹட்சன் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதில், படத்தில் காணும் 1947 மாடல் ஹட்சன் பிக்கப் டிரக் அனைவராலும் விரும்பப்படுகிறது.

டிராக் ரேஸ் கார் மியூசியம்
பிக் டாடி என்று அன்போடு அழைக்கப்படும் டிராக் ரேஸ் வீரரான டான் காலிட்ஸ் உருவாக்கிய மியூசியம். பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்ற அவர் தான் பயன்படுத்திய கார்களை இந்த மியூசியத்தில் வைத்துள்ளார். இதுதவிர, டிராக் ரேஸ் வீரர்கள் பயன்படுத்திய கார்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








