இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் உலகின் மிக வயதான ஓட்டுனர்!
உலகின் மிக வயதான ஓட்டுனர்களில் ஒருவராக கூறப்படும் மங்களூரை சேர்ந்த சார்லஸ் மைக்கேல் டிசோஸா இன்று தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது மங்களூரில் செட்டிலாகியிருக்கிறார்.
அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் டிசோசா தனது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறார். வீட்டை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்கிறார்.

1914ம் ஆண்டு அக்டோபர் 16ந் தேதி ஊட்டியில் பிறந்த இவரது மூதாதையர்கள் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். இவரது பெற்றோருக்கு மொத்தம் 13 பிள்ளைகள். அதில், 10வதாக பிறந்தவர்தான் மைக்கேல் டிசோசா. 1932ம் ஆண்டு தனது 18வது வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்த இவர் ஆந்திரா, அஸ்ஸாம், காஷ்மீர் போன்ற இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
1942ம் ஆண்டு ராணுவத்திலிருந்து விலகிய இவர் முழு நேர ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். பின்னர் கர்நாடக பொதுப்பணித்துறையில் ஓட்டுனராக சேர்ந்த இவர் 1982ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு மங்களூரில் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி இறுந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை. சகோதரர்களின் பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகள் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வர் என்று கூறுகிறார். ஊட்டியில் உள்ள செயிண்ட் மேரீஸ் சர்ச் வழங்கிய பிறப்பு சான்று மூலம் இவரது வயது உறுதிப்படுத்தப்படுகிறது. இதுதவிர, பள்ளி, ராணுவ சான்றிதழ்கள் போன்றவற்றையும் வைத்திருக்கிறார்.
தற்போது வங்கி ஊழியர்கள் இருவருக்கு கார் டிரைவராக இருந்து வருகிறார். வரும் 2019ம் ஆண்டு வரை இவரது ஓட்டுனர் உரிமம் செல்லத்தக்கதாக உள்ளது. தற்போது உலகின் வயதான ஓட்டுனராக டிசோசா குறிப்பிடப்படுகிறார்.
106 வயது வரை ஓட்டுனராக இருந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எட்வர்ட்ஸ் குறிப்பிடப்படுகிறார். ஆனால், அவர் 1998ல் இறந்துவிட்டார். எனவே, நூறு வயதில் கார் ஓட்டும் உலகின் ஒரே ஓட்டுனர் டிசோசாதான் என்று கருதப்படுகிறார்.
டிசோசாவின் உழைப்பை போற்றவும், நூறாவது பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், இன்று மங்களூர் கனரா கல்லூரி ஆடிட்டோரியத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Source: IBN Live


Click it and Unblock the Notifications








