துருப்பிடித்த காரை பளிச்சென மாற்றும் லேசர் டெக்னாலஜி சாதனம்...!!
பார்த்துப் பார்த்து வாங்கிய நமது வண்டியை, வாரம் ஒரு முறை வாட்டர் வாஷ் செய்தாலும், தினமும் துடைத்தாலும் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு அடிப்பகுதிகளிலும், பின்புறங்களிலும் துருப் பிடிப்பதைக் கண்கூடாகக் காண முடியும்.
பம்பர், சைலன்சர், பேஸ் மெட்டல் ஆகியவைதான் பெரும்பாலும் துருவுக்கு முதலில் இரையாகும் பாகங்கள். என்னதான் அழகாகத் துடைத்து வைத்தாலும் வண்டியில் சில இடங்களில் தென்படும் துருக்கள், அதன் மொத்த லுக்கையை கெடுத்து விடும். சொல்லப் போனால் ஏதோ பழைய வண்டியைப் போன்ற தோற்றத்தைத்தான் அது தரும்.
இதற்காக தேங்காய் எண்ணெய், எஞ்சின் ஆயில், மண்ணெண்ணெய் போன்றவற்றையெல்லாம் துடைத்துப் பார்த்தால் கூட பரி பூரண பலன் கிடைக்காது. இதற்கு தீர்வே இல்லையா? என்று வருத்தப்பட வேண்டியதில்லை.
தற்போது லேசர் முறைப்படி துருவை நீக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடியோவைப் பார்த்தீர்களேயானால், ஒரு பிரம்மிப்பு உங்களுக்கு ஏற்படுவது உறுதி. ஏனென்றால், இந்த சாதனத்தைப் பயன்படுத்தும் போது எந்த விதமான மாய வித்தைகளும் இல்லாமல் சில விநாடிகளில் துரு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடுகிறது.
க்யூ எஃப் 1000 எனப்படும் இந்த 1000 வாட் லேசர் சாதனம் மிகவும் கையடக்கமான ஒன்றும் கூட. மெட்டல்களின் மேல் படிந்திருக்கும் நாள்பட்ட தூசுகளையும், அழுக்குகளையும் இது உறிஞ்சிக் கொள்வதால், உடனடியாக துருவும் ஆவியாகிவிடுகிறது.
நவீன தொழில்நுட்பத்திலான இந்த சாதனம், கார் மற்றும் பைக்குகளில் ஏற்படும் துரு பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டுகளில் இதுபோன்ற டெக்னாலஜியில் துரு நீக்கும் சாதனங்கள் எதுவும் இல்லை. இந்த லேசர் கருவிக்கு இங்கு எதிர்பார்ப்பு இருக்கும் பட்சத்தில் அது இங்கு அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இந்த சாதனத்தில் உள்ள மிகப் பெரிய பாதகமான அம்சம் என்னவென்றால் அதன் விலை. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 36 லட்சமாக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெரிய அளவில் நடத்தப்படும் வாகன சர்வீஸ் நிலையங்களில் மட்டுமே இதை வாங்கி வைக்க முடியும். மற்றபடி இதன் விலை வேறு எங்கும் வாங்கி கட்டுபடியாகாது என்பது மட்டும் உறுதி...


Click it and Unblock the Notifications








