முக்குக்கு முக்கு நிக்கறாங்க! 1,200 டூவீலர்களை கொத்தா தூக்கிய போலீஸ்! காரணத்த கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு
முன்பெல்லாம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாமல் இருந்தன. சாலையில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், சாலையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டாலும் கூட, நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
இதற்காக சாலைகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை ஆராய்ந்து, அதன் உரிமையாளருக்கு அபராத ரசீதை அனுப்பி வைத்து விடும். இந்த அபராத தொகை நீங்கள் செலுத்த தவறினால் பிற்காலத்தில், அதாவது வாகனங்களை விற்பனை செய்வது போன்ற நிகழ்வுகளின்போது பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே கேமரா கண்களில் இருந்து தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் பல்வேறு யுக்திகளை கையாள்கின்றனர். இதில், போலியான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவது ஒன்றாகும். அதாவது வாகனத்தின் உண்மையான பதிவு எண்ணிற்கும், நம்பர் பிளேட்டில் இருக்கும் எண்ணிற்கும் சம்பந்தமே இருக்காது. போலியாக ஒரு எண்ணை நம்பர் பிளேட்டில் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதுதவிர வேறு ஒரு வாகனத்தின் பதிவு எண்ணையும் கூட, தங்கள் வாகனத்தில் ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். அத்துடன் கேமரா கண்களில் இருந்து தப்பிப்பதற்காக மற்றொரு யுக்தியையும், வாகன ஓட்டிகள் கையாள்கின்றனர். அது மடித்து வைத்து கொள்ள கூடிய வகையிலான நம்பர் பிளேட் ஆகும். இந்த நம்பர் பிளேட்களை கேமராக்களால் கண்டறிய முடியாது.

ஆனால் இது போன்ற செயல்களில், ஒரு சில வாகன ஓட்டிகள் ஈடுபடுகின்றனர் என்பதை, காவல் துறை அறியாமல் எல்லாம் இல்லை. இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பெங்களூர் நகரில், காவல் துறை அதிகாரிகள் தற்போது சிறப்பு வாகன தணிக்கையை நடத்தி வருகின்றனர்.
இதில், 7 நாட்களில் மட்டும், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்பட 1,200க்கும் மேற்பட்ட டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்கள், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக, போலியான நம்பர் பிளேட்களை பயன்படுத்தியது, சோதனையில் தெரிய வந்தது. எனவே அதிரடியாக 1,200க்கும் மேற்பட்ட டூவீலர்களை பெங்களூர் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இது குறித்து NEWS9 Live செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் பெங்களூர் நகரில், போலி நம்பர் பிளேட்களை கண்டறிவதற்காக, சிறப்பு வாகன தணிக்கை இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் பெங்களூர் நகரில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர். எனவே இதன் முடிவில் இன்னும் ஏராளமான டூவீலர்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போலி நம்பர் பிளேட்கள் மிகவும் ஆபத்தானவை. ஒருவேளை ஏதேனும் ஒரு வாகனம் சாலை விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றால் கூட, அதில் போலி நம்பர் பிளேட் இருந்தால், அதை கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படும். அதேபோல் செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் கூட, போலி நம்பர் பிளேட் இருந்தால், வாகனத்தை கண்டறிய முடியாமல் போகலாம். எனவே போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிரான பெங்களூர் காவல் துறையின் நடவடிக்கையை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வரவேற்கிறது.


Click it and Unblock the Notifications








