இதுலயும் கர்நாடகாவுக்கு அடுத்துதான் நம்ம தமிழ்நாடு!! மக்களவையில் உண்மைகளை போட்டுடைத்த மத்திய அமைச்சர்!
இந்தியாவில் இவி சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்த உள்ளதாக நாடாளுமன்றத்தில், மக்களவையில் கேள்வி ஒன்று பதில் அளிக்கையில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி எந்த மாநிலத்தில் இவி சார்ஜிங் நிலையங்கள் அதிகமாக உள்ளன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் உடன் அவற்றை சார்ஜ் செய்வதற்கு சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன என்றாலும், வீட்டு உபயோக மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்வது நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமெனில், நாடு முழுவதும் ஃபாஸ்ட் இவி சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவது அவசியமான ஒன்றாகும்.

ஏனெனில், அப்போதுதான் எலக்ட்ரிக் வாகனங்களை தைரியமாக நீண்ட தொலைவு பயணங்களுக்கு கொண்டு செல்ல முடியும். இதனாலேயே நம் இந்தியாவில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது சார்ஜிங் நிலையங்களை நிறுவி வருகின்றன. இருப்பினும், இன்னும் நிறைய பகுதிகளில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் வரவில்லை. இதுகுறித்து அவ்வப்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் மக்களவையில் எழுப்பப்பட்ட இவி சார்ஜிங் நிலையங்கள் குறித்த கேள்விக்கு மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, 2024 பிப்ரவரி 2ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் சுமார் 12,146 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதிகப்பட்சமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் 3,079 இவி சார்ஜிங் நிலையங்கள் செயல்படுகின்றன. அதற்கடுத்து, தலைநகர் டெல்லியில் 1,886 இவி சார்ஜிங் நிலையங்களும், கர்நாடகாவில் 1,041 இவி சார்ஜிங் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவைதான் இந்தியாவில் இவி சார்ஜிங் நிலையங்களை தற்போதைக்கு அதிகம் கொண்ட டாப்-3 மாநிலங்கள் ஆகும்.
இவற்றிற்கு அடுத்து, கேரளா (852), தமிழ்நாடு (643), உத்தர பிரதேசம் (582), ராஜஸ்தான் (500), தெலுங்கானா (481), குஜராத் (476) மற்றும் மத்திய பிரதேசம் (341) மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு மத்திய அரசு வழங்கிவரும் ஃபேம்-2 திட்டம் இவி சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவதையும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அத்துடன், எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தங்களது வீட்டு மின்சாரத்தை சார்ஜிங்கிற்கு பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தர நிலைகளும் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார். சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேபோல், இந்த பொது சார்ஜிங் நிலையங்களுக்கு மின்சார விநியோகமும் சம்பந்தப்பட்ட மாநில மின்சார துறை மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குர்ஜார் தெரிவித்துள்ளார். சூரிய ஒளி ஆற்றலில் பொது சார்ஜிங் நிலையங்கள் இயங்கும்போது மெதுவான ஏசி சார்ஜிங்கிற்கு யூனிட்டிற்கு ரூ.2.50-யும், சூரிய ஒளி ஆற்றலில் இயங்காத போது யூனிட்டிற்கு ரூ.3.50-யும் அதிகப்பட்ச கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களாக இவி சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பலர் கூறினாலும், அதுகுறித்த முறையான விபரங்கள் கிடைக்காமல் இருந்துவந்தது. இந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மாநிலம் வாரியாக இவி சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை தெரிவித்து இருப்பது இந்த விஷயத்தில் ஓர் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








