லைசன்ஸ் வாங்கும் வயதை கூட இன்னும் எட்டல, அம்மா உடன் ஷோரூமில்!! யூடியூபில் பணம் கொட்டுது போல!
திருப்பூர் மாவட்டத்தின் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த பிரபலமான இளம் யூடியூபரும், சமூக ஊடகப் பிரபலமுமான 'கொடுவாய் அன்பு' (Koduvai Anbu), புதிய 2026ஆம் ஆண்டை பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) வாகனத்துடன் ஆரம்பித்துள்ளார். யார் இந்த கொடுவாய் அன்பு என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொடுவாய் அன்பு, தனது துடிப்பான, நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் தமிழ் டிஜிட்டல் தளத்தில் வேகமாக வளர்ந்துவரும் இளம் யூடியூபர் (Youtuber). தனிப்பட்ட கணக்குகளில் தன்னை 'அன்பு செல்வம்' என்று குறிப்பிடுகிறார். அவரது முக்கிய யூடியூப் சேனல் 2024ஆம் ஆண்டின் மத்தியில் 9 இலட்சம் சப்ஸ்கிரைபர்களை எட்டியதை பெரிய கொண்டாட்டமாக கொண்டாடி அதன் மூலமும் இணையத்தில் கவனத்தை ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து, கொடுவாய் அன்புவின் யூடியூப் சேனல் தற்போதைய 2026ஆம் ஆண்டு தொடக்க நிலவரப்படி, 29.8 இலட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது. நகைச்சுவையான காணொளிகள், வாழ்க்கை முறை பதிவுகள் மற்றும் 'சேலஞ்ச்' வீடியோக்கள் மூலம் இவரது பெயர் அடிக்கடி ட்ரெண்டிங்கில் வருவதால், ரசிகர்கள் இவரை 'வைரல் பாய் கொடுவாய் அன்பு' என்று அழைக்கின்றனர்.
இது இவரது பரந்த மக்கள் தொடர்பைப் பிரதிபலிக்கிறது. வாகன பிரியரான அன்பு, மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறன்கள், 10.25-இன்ச் தொடுதிரை, பனோரமிக் சன்ரூஃப் போன்ற நவீன அம்சங்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். 15 வயதிலேயே தனது மேம்பட்ட நிதி இருப்புக்குச் சான்றாக, 2024இல் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான அவரது புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் பற்றிய 'ஹோம் டூர்' வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் கொங்கு பகுதியைச் சேர்ந்தவரான கொடுவாய் அன்பு, தனது வீடியோக்களில் பெரும்பாலும் உள்ளூர் இடங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் இடம்பெறச் செய்கிறார். அவரது தாய்க்காக "கொடுவாய் அன்பு அம்மா" என்ற தனி யூடியூப் சேனலையும் அவர் தொடங்கி நிர்வகித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், தற்போது பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் வாகனத்தை கூட தனது அம்மாவுக்காக தான் வாங்கியதாக கொடுவாய் அன்பு தெரிவிக்கிறார்.
வழக்கம்போல், புதிய தார் வாகனத்தை டெலிவரி பெறும் கொண்டாட்டங்களையும் அன்பு தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். டெலிவிரியின் போது, டீலர்ஷிப்பில் பாரம்பரிய பூஜை மற்றும் கேக் வெட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன. மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மார்க்கெட்டில் 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் என இரு தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், தார் ராக்ஸ் என்கிற 5-கதவு தாரை கொடுவாய் அன்பு வாங்கியுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தின் போது மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் வாகனம், அதன் வலுவான வடிவமைப்பு மற்றும் நவீன வசதிகள் நிறைந்த கேபினுக்காக அறியப்படுகிறது. இந்தியாவில், பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (body-on-frame Chassis)-இல் உருவாக்கப்பட்ட எஸ்யூவி ரக வாகனங்களில் 5-நட்சத்திர பாரத் என்சிஏபி (Bharat NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் கார் என்கிற சிறப்பை தார் ராக்ஸ் பெற்றுள்ளது.
2.2 லிட்டர் எம்ஹாவ்க் (mHawk) டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் (mStallion) டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில், ஆட்டோமேட்டிக், மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் மஹிந்திரா தார் ராக்ஸ் எம்.எக்ஸ்1 முதல் ஏஎக்ஸ்7எல் வரையிலான பல வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சம் முதல் டாப்-எண்ட் ஏஎக்ஸ்7எல் 4-வீல்-டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.22.49 லட்சம் வரை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ் நடிகர், நடிகைகளை தாண்டி, இந்தியா முழுவதும் பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ள நிலையில், கொடுவாய் அன்புவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்த மஹிந்திரா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை வாங்கிய ராசி, கொடுவாய் அன்புவின் வாழ்வில் இனி என்னென்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









