டெல்லியில் மிக முக்கிய புள்ளி... மத்திய அரசு எதை பற்றியும் கவலை படல!! கார்கள் எல்லாத்தையும் புடுங்கியாச்சு!
பாரத தலைநகர் டெல்லியில் செல்வ செழிப்பில் மிதப்பவர்கள் ஏராளம். அத்தகைய மல்டி-மில்லியனர்களுள் ஒருவர் தான் ஷிவம் மிஷ்ரா. ஆனால் இவர் இனி மல்டி-மில்லியனராக இருக்க போவதில்லை. ஏனெனில், இவர் நடத்திவரும் பான்ஷிதர் டொபாகோ நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரி துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர்.
இதில் கணக்கில் காட்டாத சொத்துக்கள் நிறைய இருந்ததை அடுத்து ஷிவம் மிஷ்ராவின் சில சொத்துக்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சொத்துகளில் ஷிவம் மிஷ்ரா பயன்படுத்திய லக்சரி கார்களும் அடங்குகின்றன. ஷிவம் மிஷ்ராவிடம் இருந்த ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம், மெக்லாரன் 720எஸ், ஃபெராரி 812 ஜிடிஎஸ் மற்றும் லம்போர்கினி உருஸ் லக்சரி எஸ்யூவி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.50 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இல்லாமல், ரூ.4.5 கோடி பணத்தையும் ஷிவம் மிஷ்ராவிடம் இருந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஷிவம் மிஷ்ராவின் பான்ஷிதர் டொபாகோ நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் உள்ள பல்வேறு பான் மசாலா நிறுவனங்களுக்கு செல்கின்றன.
பான்ஷிதர் டொபாகோ நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் இந்தியாவில் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வட இந்தியாவில் இந்த பான் மசாலா நிறுவனத்தின் நெட்வொர்க் பரவி காணப்படுகிறது. ஆனால், பான்ஷிதர் நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.20 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரையில் மட்டுமே வருவாய் கிடைப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.
ஆனால், உண்மையில் கிடைப்பதோ ரூ.100 கோடி - ரூ.150 கோடி. இந்த உண்மையை ஆவணங்கள் மூலம் வருமான வரித்துறையினர் கண்டறிந்ததை அடுத்து, ஷிவம் மிஷ்ராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. லக்சரி கார்கள் அனைத்தும் டெல்லியில், வசந்த் விஹார் என்ற பகுதியில் உள்ள ஷிவம் மிஷ்ராவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய கார் என்றால், அது ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் ஆகும்.
ஏனெனில், அதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.16 கோடியாக உள்ளது. ஷிவம் மிஷ்ராவிடம் இருப்பது கருப்பு நிறத்திலான ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 8 மாடல் ஆகும். லக்சரி செடான் காரான இதில் ஆற்றல்மிக்க 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 563 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், இதனுடன் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் ஜிடிஎஸ் காரையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த இத்தாலியன் ஸ்போர்ட்ஸ் காரின் ரூஃப் உலோகத்தால் நன்கு வலிமையானதாக உருவாக்கப்பட்டதாக உள்ளது. இருப்பினும், இந்த காரில் ரூஃப்-ஐ தேவைக்கேற்ப திறந்தும், மூடியும் கொள்ளலாம். ஷிவம் மிஷ்ராவின் மெக்லாரன் 720எஸ் கார் வெர்மிலியன் சிவப்பு நிறத்தில் உள்ளது.
இந்த மெக்லாரன் காரில் பட்டாம்பூச்சி டிசைனில் கதவுகள் வழங்கப்படுகின்றன. ஷிவம் மிஷ்ராவின் லம்போர்கினி காரான உருஸ் கருப்பு நிறத்தில் உள்ளது. கார்களை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினருக்கு ஆச்சிரியமாக இருந்த விஷயம் என்னவென்றல், ஷிவம் மிஷ்ராவின் வீட்டில் இருந்த அனைத்து கார்களிலும் '4018' என்கிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் லக்சரி கார்கள் தகுந்த அனுமதி கிடைத்தவுடன் ஏலத்தில் விற்கப்படுவது வழக்கம். ஆனால், இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் லக்சரி கார்கள் பெரும்பாலான நேரங்களில் மீட்கப்பட்டு விடுகின்றன என்பதுதான் உண்மை. தொழிலதிபர் ஷிவம் மிஷ்ராவின் விஷயத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








