18 வருஷத்தில் வாழ்க்கையை மொத்தமா மாற்றிய கார்! குடும்பத்தில் ஒருவராக இருந்த காருக்கு கடைசியில் இதுதான் கதி!!
ஒரு சிலர் தங்களது கார்களுடன் மிகவும் நெருங்கிய பிணைப்பில் இருப்பதை பார்க்க முடியும். அதாவது, புதியதாக எத்தனை கார்களை வாங்கினாலும், குறிப்பிட்ட ஒரு கார் உடன் மட்டும் அவர்களுக்கு ஏனோ அதீத ஈர்ப்பு இருக்கும். நீங்கள் சற்று கவனித்து பார்த்தீர்கள் என்றால், அது அவர்கள் வாங்கிய முதல் காராக இருக்கும். அப்படித்தான், இங்கு ஒருவர் தான் 18 வருடங்கள் முன் வாங்கிய மாருதி வேகன்ஆர் காரை சகல மரியாதை உடன் ஓரங்கட்டி உள்ளார். ஓரங்கட்டி உள்ளார் என சொல்வதை காட்டிலும், மீண்டும் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மண்ணுக்கு அடியில் புதைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மாருதி சுஸுகி கார்களுக்கு என்றே நம் நாட்டில் பெரிய கஸ்டமர்ஸ் கூட்டம் உள்ளது. இந்த சாம்ராஜ்ஜியத்தை மாருதி சுஸுகி இன்றோ அல்லது நேற்றோ உருவாக்கவில்லை. இதற்கு பல வருடங்களாகின. மாருதி சுஸுகியின் இந்த அபரீதனமான வளர்ச்சிக்கு வேகன்ஆர் காரும் ஒரு காரணமாகும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக வேகன்ஆர் கார்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன.

21ஆம் நூற்றாண்டு துவக்கங்களில் இந்தியாவில் பலர் வாங்கிய முதல் கார் மாருதி சுஸுகி வேகன்ஆர் ஆகும். அவ்வாறு, குஜராத்தில் 18 வருடங்களுக்கு முன்னர் வேகன்ஆர் காரை வாங்கிய ஒருவர், காரின் சேவையை சகல மரியாதை உடன் நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார். பொதுவாகவே, நீண்ட வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் காரை யாராக இருந்தாலும் ஒரு கட்டத்திற்குமேல் ஓரங்கட்ட துவங்குவர். ஏனெனில், அதற்கேற்றவாறு காரில் சிறு, சிறு பிரச்சனைகள் அதிகளவில் ஏற்பட ஆரம்பிக்கும்.
அவ்வாறு ஓரங்கட்டப்படும் கார் ஒரு கட்டத்திற்கு மேல் பயன்படுத்தவே முடியாத நிலைக்கு சிதலடைய ஆரம்பிக்கும். இதனால், வேறு வழியில்லாமல் அதனை பழைய இரும்பு கடையில் மட்டுமே காசு பார்க்க முடியும் என்கிற நிலைமைக்கு ஆளாகுவோம். ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்கும் 18 வருட பழைய வேகன்ஆர் கார் ஓனர், ஒரு மனிதருக்கு செய்வதுபோல் தனது காருக்கு இறுதிச்சடங்கு செய்து, அதன் சேவையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்தில் உள்ள லதி தாலுகாவின் பதர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவர் 2006ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் ஒன்றை வாங்கினார். சஞ்சய் தனது வாழ்நாளில் வாங்கிய முதல் இது என கூறப்படுகிறது. ஆனால், தற்சமயம் சஞ்சயிடம் ஆடி கார் உள்பட மேலும் சில கார்கள் உள்ளன.
எத்தனை கார்களை வாங்கினாலும், இந்த 18 வருட வேகன்ஆர் காருடன் மட்டும் சஞ்சய்க்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஓர் நெருங்கிய பிணைப்பு இருந்து வந்துள்ளது. சஞ்சய்யின் முதல் கார் என்பதால், இந்த நெருங்கிய பிணைப்பு இருக்கலாம். இதனால், இந்த காரையும் தங்களது வீட்டில் ஒருவராக கருதிய சஞ்சய் குடும்பத்தார்களால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த வேகன்ஆர் காரை பயன்படுத்த முடியாமல் போகியுள்ளது.

இதனால், அதை ஓரங்கட்ட நினைத்தவர்கள், ஊரே பார்க்க சகல மரியாதை உடன் காரை 15 அடி ஆழ மண்ணுக்குள் புதைத்துள்ளனர். இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக சுமார் 1,500 பேர் சஞ்சய்யின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுள் சிலர், இறந்தவரின் உடலை சுற்றி ஆடுவதை போல், இந்த வேகன்ஆர் காரை சுற்றிலும் கர்பா நடனமாடி உள்ளனர். மேலும், வழக்கமாக இறந்தவரின் உடலுக்கு செய்யப்படும் பூஜை, பரிகாரங்கள் அனைத்தும் இந்த காருக்கும் செய்யப்பட்டன.
இறுதியாக, காரை புதைத்த இடத்தில் சஞ்சய்யின் குடும்பத்தினர் செடியை நட்டிவிட்டு சென்றுள்ளனர். 2006ஆம் ஆண்டில் சூரத்தில் நில தரகராக பணியாற்றிய சமயத்தில் சஞ்சய் இந்த வேகன்ஆர் காரை வாங்கினார். சவுராஷ்டிராவில் இருந்து வேலை தேடி சூரத்துக்கு வந்தவரின் வாழ்க்கையை இந்த வேகன்ஆர் கார் பெரிதும் மாற்றியுள்ளது. தற்சமயம், பெரிய பில்டராக ஆடி காருடன் சஞ்சய் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இறுதிச்சடங்குக்கு ரூ.4 இலட்சம் வரையில் சஞ்சய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செயல்களில் இருந்து, சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வேகன்ஆர் காரை எந்த அளவிற்கு தங்களது குடும்பத்தில் ஒருவராக பார்த்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், மண்ணில் புதைப்பதை காட்டிலும், இந்த வேகன்ஆரை வேறொருவருக்கு வழங்கியிருந்தால், அது அவருக்காகவது பயனுள்ளதாக இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications









