84 வயதிலும் அசத்தும் முதியவர்!! 1969இல் தயாரிக்கப்பட்ட புல்லட் பைக் உடன்... இன்றைய கால இளைஞர்கள் கத்துக்கணும்!
பழமையான ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மோட்டார்சைக்கிளை சுமார் 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எளிதாக ஸ்டார்ட் செய்து அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் அந்த பெரியவர்? எவ்வாறு இதனை சாத்தியமாக்கினார்? என்பதை இனி பார்க்கலாம்.
சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. எப்படியாவது ஒரு ராயல் என்பீல்டு பைக்கை வாங்கி விட வேண்டும் என இன்றைய காலத்தில் மட்டுமல்ல, கடந்த 60 -70 வருடங்களுக்கு முன்பு இருந்தே இளம் தலைமுறையினரின் ஆசையாக இருந்து வருகிறது. அதற்கேற்றாற் போல், ராயல் என்பீல்டு பைக்குகள் இளம் வயதினராலும், நன்கு உடல் வலிமை கொண்ட சற்று வயதானவர்களினாலும் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக விளங்குகின்றன.

அதாவது, அந்த அளவிற்கு ராயல் என்பீல்டு பைக்குகள் எடைமிக்கவைகளாகவும், ஸ்டார்ட் செய்வதற்கு சற்று கடினமானவைகளாகவும் விளங்கி வருகின்றன. இன்றைய கால மாடர்ன் ராயல் என்பீல்டு பைக்குகள் எவரொருவராலும் உபயோகப்படுத்தக்கூடிய அளவிற்கு எடை குறைவானவைகளாக மாறிவிட்டாலும், இப்போதும் ராயல் என்பீல்டு பைக்குகள் என்றவுடனே நம் மனதில் முதலில் தோன்றுவது அவற்றின் கம்பீரமான தோற்றமும், அவற்றின் அதிகப்படியான எடையும் தான்.
குறிப்பாக, 1950- 1970ஆம் காலக்கட்டங்களில் உருவாக்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள் இன்னும் எடைமிக்கவைகளாக, கிக் ஸ்டார்ட் செய்வதற்கு கடினமானவைகளாக விளங்கின. ஆனால் உண்மையில், ராயல் என்பீல்டு பைக்குகளின் இத்தகைய பண்புகளினாலேயே மற்ற பிராண்ட் பைக்குகளில் இருந்து இவை தனித்துவமாக தெரிந்தது மட்டுமின்றி, பலரும் இந்த பைக்குகளை தேடி வந்தனர். மேலும், சிலர் இப்போதும் 50, 60 வருடங்கள் பழமையான ராயல் என்பீல்டு பைக்குகளை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

ராயல் என்பீல்டு பைக்குகளின் வலிமையான கட்டமைப்பையும் இதற்கு ஒரு காரணமாக சொல்ல வேண்டும். அவ்வாறு, இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் 1969ஆம் உருவாக்கப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை முதியவர் ஒருவர் எளிதாக ஸ்டார்ட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த முதியவரின் வயது 84 ஆகும்.
இந்த வயதிலும் உடலை நன்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இந்த முதியவர் ஒரு கிக்கில் அவ்வளவு பெரிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை ஸ்டார்ட் செய்திருப்பது பலரை ஆச்சிரியப்பட வைத்துள்ளது. இதனை வேறொருவர் தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். ராசி ரைடர் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவை கீழே காணலாம்.
வீடியோவில், சாவியை பைக்கினுள் நுழைக்கும் இந்த 84 வயது முதியவர், பின்னர் கிக்கரை வெளியே எடுத்து தனது வலது கால் மூலமாக ஒரேயொரு கிக் மட்டுமே அடித்தார், அவ்வளவுதான் பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பின்னர் சில வினாடிகளுக்கு பைக்கின் உறுமும் சத்தத்தை நமக்கு ஏற்படுத்திக் காட்டுகிறார். பழமையான 1969 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் உறுமும் சத்தம் எவ்வாறு இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன்.
புல்லட் பைக்குகளுக்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தில் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால், நம்மில் பலருக்கு முதலில் புல்லட் பைக் என்று மட்டும் தான் தெரிந்திருக்கும். அதன் பின்னர் சில காலம் கழித்தே இதனை தயாரிப்பது ராயல் என்பீல்டு என்கிற ஒரு நிறுவனம் என்பது தெரியவந்திருக்கும். ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகள் 1900ஆம் காலக்கட்டத்தில் இருந்து உருவாக்கப்படுகின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழமையான ராயல் என்பீல்டு பைக்குகளை இன்றைய கால இளைஞர்களே ஸ்டார்ட் செய்வதற்கு தடுமாறிவரும் நிலையில், இந்த 84 வயதான முதியவர் மிக எளிமையாக ஸ்டார்ட் செய்துள்ளார். 1969இல் இந்த புல்லட் 350 பைக் தயாரிக்கப்பட்ட போது இந்த முதியவருக்கு 30 வயது இருந்திருக்கும். அப்போது இருந்த அதே எனர்ஜி உடன் இப்போதும் இந்த பைக்கை ஸ்டார்ட் செய்துக் காட்டி அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications