இளைஞர்களின் கனவு பைக்... குற்றவாளிகள் இனி எவ்வளவு வேகமாக போனாலும் பலனில்லை!! ஒவ்வொரு பைக்கின் விலையும் அதிகம்!
அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் விலையுயர்ந்த வாகனங்களை போலீஸார் பயன்படுத்துகின்றனர். ஏனெனில், குற்றவாளிகள் அதிவேகமான வாகனங்களில் செல்லும்போது, அவர்களுக்கு இணையாக போலீசாரும் அத்தகைய வாகனங்களில் சென்றால்தான் அவர்களை பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் நம் இந்திய போலீசார் சற்று பின்தங்கியே உள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் இந்தியாவில் போலீசார் சிலருக்கு விலையுயர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மற்ற பைக்குகளை காட்டிலும் அட்வென்ச்சர் ரக பைக்குகள் கொஞ்சம் ஸ்பெஷலானவை. ஏனெனில், அட்வென்ச்சர் பைக்குகளில் எந்தவொரு சாலையிலும் செல்ல முடியும். அதாவது, வழக்கமான சாலையில் மட்டுமின்றி, கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்க முடியும். இவ்வாறான அட்வென்ச்சர் பைக்குகள் போலீசாருக்கு மிகவும் ஏற்றவை ஆகும். ஏனெனில், போலீசார் தங்களது ரோந்து பணிகளுக்காக வெவ்வேறு விதமான இடங்களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.

இதனை மனதில் வைத்து, ஹரியானா அரசாங்கம் குருகிராம் நகர போலீசாருக்கு சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 என்கிற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை ரோந்து பணிகளுக்காக வழங்கியுள்ளனர். மொத்தம் 40 வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 பைக்குகள் குருகிராம் நகர போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. போலீசாரின் பயன்பாட்டிற்காக பைக்குகள் சற்று மாற்றப்பட்டுள்ளன.
குருகிராம் போலீசாருக்கு 40 சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்குகள் டெலிவிரி செய்யப்படுவதை ஓர் சிறிய நிகழ்ச்சி போன்று ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குருகிராம் நகர போலீஸ் கமிஷ்னர் விகாஸ் அரோரா மற்றும் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி உமேடா கொடியசைத்து பைக்குகளை போலீசாரின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

போலீசாரின் பயன்பாட்டிற்காக வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்று பார்த்தால், பைக்குகள் யாவும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், விண்ட்ஸ்க்ரீன் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளது. 'போலீஸ்' என்கிற ஸ்டிக்கர்கள் ஆங்கிலத்தில் பைக்கின் முன்பக்கத்திலும், பெட்ரோல் டேங்கிலும் ஒட்டப்பட்டுள்ளன.
போலீஸ் வாகனம் என்பதை குறிக்கும் விதத்தில் இருக்க வேண்டிய சிவப்பு மற்றும் நீல நிற பெக்கான் விளக்குகள் மற்றும் சைரன் இந்த பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளன. சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் சுஸுகி பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். இந்த பைக்கில் 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 9,300 ஆர்பிஎம்-இல் 25 பிஎச்பி மற்றும் 7,300 ஆர்பிஎம்-இல் 22 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7 விதங்களாக ப்ரீலோடு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. பிரேக் பணிகளை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன.
இவற்றுடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்புக்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பொருத்தப்படுகிறது. அட்வென்ச்சர் ரக பைக் என்பதால், முன் சக்கரம் சற்று பெரியதாக 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன. இந்த சக்கரங்களில் ட்யூயல்-பர்பஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரையை இந்த பைக்கில் சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. இந்த அட்வென்ச்சர் பைக்கின் எடை 167 கிலோ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போதைக்கு ரூ.2.12 லட்சமாக உள்ளது. ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் கிட்டத்தட்ட ரூ.3 லட்சமாக வந்துவிடும். இவ்வளவு விலையிலான பைக்குகளை இந்தியாவில் போலீசார் பயன்படுத்தவுள்ளனர் என்பது சற்று ஆச்சிரியமாக உள்ளது. இதில் இருந்து, பொருளாதாரத்தில் நம் இந்தியா எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









