பூட்டிய காருக்குள் இருந்த குழந்தை மூச்சுத் திணறி பலி!

ஆல்வார் மாவட்டம், ராம்கர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் இஸ்தக் கான். இவரது மனைவி உன்னாஸ். இருவரும் ராம்கரில் ஷாப்பிங் செய்வதற்காக காரில் வந்தனர். தனது குழந்தைகளான மஹிமா(2), பர்வானா(3) மற்றும் உறவினர் குழந்தை பர்ஹான்(5) ஆகியோரையும் காரில் அழைத்து வந்திருந்தனர்.
இந்த நிலையில், ராம்கர் வந்தவுடன் காரை விட்டு இறங்கிய இஸ்தக் மற்றும் உன்னஸ் குழந்தைகளை காருக்குள்ளேயே பூட்டி விட்டு ஷாப்பிங் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் காருக்குள் இருந்த குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
காரின் கண்ணாடியை தட்டி குழந்தைகள் அழத் துவங்கினர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் குழந்தைகளின் அலறலை கேட்டு காரின் கதவை உடைத்து குழந்தையை மீட்க முயன்றுள்ளனர். அதற்குள் இஸ்தக் கானும் அவரது மனைவியும் ஷாப்பிங் முடித்துவிட்டு அங்கு வந்தனர். உடனடியாக, காரை திறந்து பார்த்தபோது குழந்தைகள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மூச்சுத் திணறி மஹிமா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், பர்வானா மற்றும் பர்கான் ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், ஆல்வார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து, ஆல்வாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரு குழந்தைகளும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாப்பிங் செல்லும்போது குழந்தைகளை உடன் அழைத்துச் சென்றால் தொந்தரவாக இருக்கும் என கருதி காருக்குள் பூட்டிச் சென்றதாக அந்த பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரே ஜாக்கிரதை
காருக்குள் குழந்தைகளை வைத்து பூட்டிச் செல்வது மிகவும் ஆபத்தானது. கடந்த ஆண்டு சென்னையில் கூட இதுபோன்று பூட்டிய காருக்குள் இருந்த 2 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியானது நினைவிருக்கலாம். எனவே, காருக்குள் குழந்தைகளை பூட்டிச் செல்வதை கண்டிப்பாக தவிருங்கள்.


Click it and Unblock the Notifications








