டிரைவர்கள் பைலட் ரேஞ்சுக்கு இருக்காங்க! ஆம்னி பஸ் உரிமையாளர்களை கதற விட போகும் அரசு சொகுசு பஸ்கள் அறிமுகம்!
இந்தியாவில் அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் நிரம்பிய பஸ்களை அதிகளவில் இயக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா (Karnataka) உள்ளது. கர்நாடக மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC - Karnataka State Road Transport Corporation), தொடர்ச்சியாக பல்வேறு அதிநவீன பஸ்களை பயணிகளின் சேவையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது 20 புத்தம் புதிய அதிநவீன சொகுசு பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
நீங்கள் அடிக்கடி பெங்களூர் (Bangalore) நகருக்கு வந்து செல்பவர் என்றால், அம்பாரி உத்சவ் (Ambari Utsav) பஸ்களை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். உண்மையில் இது அரசு பஸ்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும், தனியார் சொகுசு ஆம்னி பஸ்களுக்கு இணையாகவும், இந்த அம்பாரி உத்சவ் பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டில்தான் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் முதல் முறையாக அம்பாரி உத்சவ் பஸ்களை அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் மொத்தம் 20 அம்பாரி உத்சவ் பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் கூடுதலாக 20 புத்தம் புதிய அம்பாரி உத்சவ் பஸ்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அம்பாரி உத்சவ் பஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோர் 20 புதிய அம்பாரி உத்சவ் பஸ்களின் சேவையை தொடங்கி வைத்துள்ளனர்.

பெங்களூர் நகரில் இருந்து ஹைதராபாத், விஜயவாடா, நெல்லூர், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த அம்பாரி உத்சவ் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இவை அனைத்துமே ஸ்லீப்பர் பஸ்கள் ஆகும். எனவே பயணிகள் சொகுசாக படுத்து கொண்டே பயணம் செய்ய முடியும்.
15 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ்களில் மொத்தம் 40 பெர்த்கள் உள்ளன. அவை 2x1 என்ற வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் ஸ்கான்டிநேவியன் ஸ்டைல் வெளிப்புற தோற்றம், வியக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த பஸ்களின் இன்ஜின் சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏரோடைனமிக் டிசைனும், செயல்திறன் மற்றும் மைலேஜிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அத்துடன் அவசர சூழல்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக தீயை அணைக்கும் அமைப்பும், அம்பாரி உத்சவ் பஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதால்தான், புதிதாக 20 அம்பாரி உத்சவ் பஸ்கள் சேவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அம்பாரி உத்சவ் பஸ்களில், சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என நாம் நம்பலாம். இந்த பஸ்களின் டிரைவர்களுக்கு, விமானங்களின் பைலட்களை போல், தலையில் தொப்பி உள்பட நேர்த்தியான சீருடை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெகு சமீபத்தில் 20 புத்தம் புதிய ஐராவத் க்ளப் க்ளாஸ் 2.0 (Airavat Club Class 2.0) பஸ்களை கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்திருந்தது.
இந்த வரிசையில் தற்போது புதிதாக 20 அம்பாரி உத்சவ் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பயண அனுபவத்தை இனிமையானதாக மாற்றும் இந்த தொடர் முயற்சிகளுக்காக கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தை கண்டிப்பாக பாராட்டலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








