புல்லட் ரயில்லாம் ஓரமா போ! சீனா, ஜப்பான் பொழப்புல மண்ணை அள்ளி போடும் இந்தியா! உலகமே கை கட்டி நிக்குது!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 51 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி கொண்டுள்ளன.
இதில், 17 ரெகுலர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 34 மினி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் அடங்கும். ரெகுலர் என்பது 16 கோச்கள் கொண்டதாகும். மறுபக்கம் மினி என்பது 8 கோச்கள் கொண்டதாகும். தற்போதைய நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சராசரி வேகம் (Average Speed) மணிக்கு 75-77 கிலோ மீட்டர்களாக உள்ளது.

அதே நேரத்தில் அதிகபட்ச வேகம் (Maximum Speed) மணிக்கு 110-160 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடிய விரைவில் மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சீறி பாயவுள்ளன. சென்னை (Chennai) பெரம்பூர் (Perambur) பகுதியில் உள்ள ஐசிஎஃப் (Integral Coach Factory) தொழிற்சாலையில்தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அங்கு மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்க கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா (China) மற்றும் ஜப்பான் (Japan) ஆகிய நாடுகளை போன்று, இந்தியாவில் அதிவேக ரயில்களுக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கார்கோ (VBE Cargo) ரயில்களின் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் ஆகும். அத்துடன் வந்தே மெட்ரோ (Vande Metro) ரயில்களின் தயாரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று கொண்டுள்ளன. இவை எல்லாம் தவிர படுக்கை (Sleeper) வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் தயாரிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆனால் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை ஐசிஎஃப் தயாரிக்கவில்லை. தற்போதைய நிலையில் பிஇஎம்எல் (BEML - Bharat Earth Movers Limited) நிறுவனம்தான், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரித்து வருகிறது. இது இந்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும்.
பிஇஎம்எல் நிறுவனத்தின் தயாரிப்புகள், பாதுகாப்பு, விண்வெளி, கட்டுமானம், ரயில் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில்தான் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிஇஎம்எல் தயாரித்து கொண்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஐசிஎஃப் தொழிற்சாலையும், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்ய கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் சீறி பாயவிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு செய்திதான். இது நமது பயணங்களை இன்னும் வேகமானதாகவும், சௌகரியமானதாகவும் மாற்றும் என்பது உறுதி.
அத்துடன் இது இந்தியாவின் பொருளாதாரத்தையும் வலிமையாக்கலாம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை வாங்க ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இப்படியான ஒரு சூழலில் 200 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்க கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டால், ஏராளமான நாடுகள் அதை வாங்க முட்டி மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வலிமை அடையலாம். தற்போதைய நிலையில் அதிவேகத்தில் பயணிக்க கூடிய ரயில் தொழில்நுட்பங்களுக்கு, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளைதான், உலகின் பல்வேறு நாடுகளும் சார்ந்துள்ளன. இந்த நிலையை மாற்றி உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பவும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உதவி செய்யலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








