அம்பானியே இந்த காரை இன்னும் வச்சிருக்காரு.. ஆனா ஒருத்தரு இந்த காரை வேணாம்னு ரோட்டுல போட்டு போயிட்டாரு..
உயரிய வகை கார் மாடல் ஒன்று சாலையோரத்தில் கை விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கார் மாடலின் இப்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாக உள்ளது. இந்த மாதிரியான கார்கள் எப்போதும் சாலையில் கெத்தாக வலம் வருவதை மட்டுமே பார்த்து வந்த நமக்கு, இப்படி பார்த்தால் மன வேதனை வருவது இயல்புதான்.
குறிப்பாக, இந்த காரின் நிலையைப் பார்த்து கார் காதலர்கள் மிகுந்த வேதனைக்கும், வருத்தத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 டபிள்யூ220 (Mercedes Benz S600 W220) சொகுசு காரே சாலையோரத்தில் ஆதரவற்று கை விடப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிமோசைன் கார் மாடல் ஆகும்.

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி 2006 மாடல் இது என கூறப்படுகின்றது. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சாலையிலேயே இந்த கார் கை விடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த கார் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 53 வயதான நபருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்திருக்கின்றது.
இவர் கருப்பு பண விவகாரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது அவர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டிற்கு தப்பியதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் தன்னுடைய இந்த விலை உயர்ந்த காரை சாலையோரத்தில் கை விட்டு சென்றிருக்கின்றார்.
ஆகையால், 2009 ஆம் ஆண்டு முதல் இந்த கார் கேட்பாரற்று சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றது. மழை, வெயில் மற்றும் பிற தாக்கங்களால் தற்போது அந்த கார் மிகப் பெரிய சேதமடைந்துக் காட்சியளிக்கின்றது. சேதங்கள் மிக மோசமானதாகக் காட்சியளிக்கின்றது. காரின் அனைத்து டயர்களும் முழுமையாக சேதமடைந்திருக்கின்றன.
அதுவிர, முன் பக்க பம்பர், க்ரில், பக்கவாட்டு பகுதி, பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள் என அனைத்தும் சேதமடைந்திருக்கின்றன. இதுதவிர கார் முழுக்க தூசி நிரம்பிக் காணப்படுகின்றது. இதுதவிர, மரங்களில் இருந்து விழுந்த இலைகள் மற்றும் குச்சிகளும் காய்ந்த அதன் மீது படர்ந்திருக்கின்றன.

இதுதவிர, வெயிலில் நீண்ட காலமாக நின்றுக் கொண்டிருந்த காரணத்தினால் அக்காரின் பெயிண்டும் பொலிவிழந்துக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக காரின் சில பாகங்கள் துருவிற்கு இரையாதத் தொடங்கி இருக்கின்றன. எனவே சீக்கிரமே முழுமையாக இந்த கார் சேதமடையக் கூடும். இந்தியாவின் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இந்த கார் பயன்பாட்டில் இருந்தது.
அந்தவகையில், முகேஷ் அம்பானியின் அப்பா திருபாய் அம்பானியிடம் பயன்பாட்டில் இருந்தது. மேலும், இப்போதும் இந்த காரை அம்பானி குடும்பத்தினர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. 6.0 லிட்டர் வி12 எம்137 எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 367 பிஎஸ் மற்றும் 530 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்தியாவில் சொகுசு கார்கள் இதுபோன்று கை விடப்படுவது முதல் முறையல்ல. இதுபோன்று இன்னும் பல கார்கள் இந்தியாவில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ, பென்ச்ஸ் மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்கள் சாலையோரத்தில் கைவிடப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான கார்கள் சாலையோரத்தில் கை விடப்பட்டு இருப்பதற்கு பின்னால் அதன் உரிமையாளர்கள் பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை வெளியேறியதே காரணமாக உள்ளது. இதுமட்டுமில்லைங்க, ஒரு சிலர் காரில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய முடியாத காரணத்திற்காக கைவிட்டவர்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அந்தவகையில், உயரிய விலைக் கொண்ட கார்கள் மட்டுமல்ல பைக்குகளும் சாலையோரத்தில் கைவிடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலேயே இந்த பென்ஸ் லிமோசைன் கார் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








