டோல் கேட் மூலம் ஒரே மாதத்தில் மத்திய அரசுக்கு இவ்வளவு கோடி பணம் குவிகிறதா?
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் ஃபாஸ்டேக் மூலம் ரூ4218.89 கோடி பணம் வசூலாகியுள்ளது. இது குறித்த முழு ரிப்போர்ட்டை கீழே காணலாம் வாருங்கள்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க மத்திய அரசு டோல்கேட்களை அமைத்து அதற்கான கட்டணங்களை வசூலித்து வருகிறது. ஆரம்பத்தில் கட்டணங்களைப் பணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஃபாஸ்ட் டேக்கை கட்டாயமாக்கி அனைத்து வாகனங்களும் ஃபாஸ்ட் டேக் முறையிலேயே கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் பல முக்கியமான நகரங்கள் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் மூலம் மக்கள் ஒரு இடத்திலிருந்து வேகமாக இடையூறுகள் இல்லாமல் வேறு இடத்திற்குப் பயணிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதே தேசிய நெடுஞ்சாலைகள்.

2000வது ஆண்டில் துவங்கிய இந்த திட்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைகளில் பல விதமான நெடுஞ்சாலைகள் உள்ளன. ஒரு இடத்தில் எவ்வளவு வாகனங்கள் பயணிக்கிறது என்பதைப் பொறுத்து எவ்வளவு லேன்களுடன் சாலைகள் கட்டமைக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. பல முக்கிய நகரங்களில் 8 வழி, 14 வழி சாலைகள் வரை இந்தியாவில் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலைகளில் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் ஃபாஸ்ட் டேக் மூலம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 30 ம் தேதி வரை மொத்தம் ரூ4218.89 கோடி வசூலாகியுள்ளது.

இந்த ரூ4218.89 கோடி என்பது கடந்த மார்ச் மாதம் வசூலான தொகையிலிருந்து 3.02 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மார்ச் மாதம் மொத்தம் ரூ4095.30 கோடி வசூலாகியிருந்தது. அதே போலக் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ2776.90 கோடி வசூலாகியுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 51.93 சதவீதம் அதிகரித்துள்ளது.

இப்படி அதிரடியாக வசூல் உயர்ந்ததற்கு முக்கியமான காரணம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கியது தான் முக்கியமான காரணம் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 26.5 கோடி முறை வாகனங்கள் சுங்கச்சாவடியை பணம் கட்டி கடந்துள்ளனர். அதே கடந்த 2021 ஏப்ரல் மாதம் 16.43 கோடி முறை தான் வாகனங்கள் டோல் கேட்டை கடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள டோல்களில் அத்தனை லேன்களையும் ஃபாஸ்ட்டேக்களாக மாற்றியது. முன்னதாக பணம் மட்டும் கொடுத்துச் செல்லக்கூடிய லேன்கள் நடைமுறையிலிருந்தது. இன்று கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் ஃபாஸ்ட் டேக்களுக்கு மாறிவிட்ட நிலையில் இந்த முடிவை மத்திய அரசு அறிவித்தது.

கடந்த 2021-22 ம் நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ38,084 கோடி பணம் வசூலாகியிருந்தது. இந்த பணம் நாட்டின் உட்கட்டமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல நெடுஞ்சாலைகளில் பல நாடுகள் சுங்கச்சாவடியை வைத்து வசூலித்து வருகின்றனர். இந்தியா போலவே அந்தந்த நாடுகளிலும் டோல்கேட் வசூலுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் டேக் முறையில் பணம் வசூலிக்கும் பொறுப்பைத் தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்நிறுவனம் தேசிய எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் என்ற ஒரு புரோகிராமை உருவாக்கி அதன் மூலம் பணத்தை வசூலித்து வருகின்றனர்.

இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் முறையிலான டோல் கட்டணம் மொத்த விற்பனை விலைக் குறியீட்டிலிருந்து நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல் டோல் பிளாஸாக்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வரையிலான மொத்த விற்பனை விலைக் குறியீட்டைப் பொருத்து ஏப்ரல் மாதம் டோல் கேட் விலை உயர்வு மற்றும் குறைவு ஏற்படும். சராசரியாக ஆண்டிற்கு 5-6 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும். என்பது கூடுதல் தகவல்


Click it and Unblock the Notifications








