டிரைவர் எல்லாம் தேவையே இல்ல!! ட்ரோன் செய்யாததை எல்லாம் செய்யும்... 2023 துபாய் ஏர்ஷோவில்!
துபாயில் நடைபெற்றுவரும் 2023 ஏர்ஷோவில் எட்ஜ் குழுமத்தின் சார்பில் எச்.டி-100 என்ற பெயரில் மனிதர்கள் இல்லாமல் இயங்கக்கூடிய மல்டி-ரோல் பெர்ஃபார்மன்ஸ் ஹெலிகாப்டர் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஏர்ஷோவில் கலந்துக் கொண்டுள்ள நமது டிரைவ்ஸ்பார்க் குழு எச்.டி-100 ஹெலிகாப்டரை நேரில் பார்வையிட்டு, படங்களை வெளியிட்டுள்ளது.
மனிதன் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கக்கூடிய வாகனங்களை பயன்படுத்துவது உலகில் பல நாடுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வானில் பறக்கக்கூடிய ஆளில்லா ஹெலிகாப்டர்களை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன. அவற்றுள் ஒரு ஹெலிகாப்டரான எச்.டி-100 நடைபெற்றுவரும் 2023 துபாய் ஏர்ஷோவில் பார்வையாளர்களின் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.

அமீரகத்தின் பாதுகாப்பு & தொழிற்நுட்ப கூட்டு நிறுவனமான எட்ஜ் குழுமம் எச்.டி-100 ஹெலிகாப்டரை உருவாக்கி உள்ளது. இந்த ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டர் பல்வேறு விதமான வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் செயல்திறன்மிக்கதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டரை எட்ஜ் குழுமத்துடன் இணைந்து, அபுதாபி கப்பல் கட்டுமான நிறுவனம் (ADSB) துபாய் ஏர்ஷோவில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது.
சில எச்.டி-100 அன்மேண்டு ஹெலிகாப்டர்களை மிக பெரிய கப்பல் ஏற்றுமதிகளில் பாதுகாப்பிற்காக பயன்படுத்த ADSB திட்டமிட்டுள்ளது. இந்த ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டர் எட்ஜ் குழுமத்தின் கீழ் துபாய் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டாலும், இந்த ஹெலிகாப்டரை உருவாக்கியது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அனாவியா என்ற நிறுவனம் ஆகும்.

எப்படியாவது தன்னிச்சையாக இயங்கக்கூடிய வான் வாகனங்கள் துறையில் முன்னணியில் வரவேண்டும் என்பதற்காக அனாவியா நிறுவனத்தின் 52% பங்குகளை சமீபத்தில்தான் எட்ஜ் குழுமம் வாங்கி இருந்தது. எச்.டி-100 ஹெலிகாப்டரில் சிங்கிள்-ஷாஃப்ட் டர்பைன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.1 பிஎச்பி (15 கிலோவாட்ஸ்) வரையிலான இயக்க ஆற்றலை ஹெலிகாப்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
அளவில் சிறியதாக இருப்பினும், இந்த ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டர் மணிக்கு 120கிமீ (அ) 65 க்னாட்கள் வேகத்திற்கு இயங்கக்கூடியது. அனாவியா நிறுவனம் உருவாக்கிய எச்.டி-100 ஹெலிகாப்டரால் அதிகப்பட்சமாக 250 நிமிடங்களுக்கு (4 மணிநேரம் 10 நிமிடங்கள்) பறக்க முடியும். இந்த ஹெலிகாப்டரின் நீளம் 2.82 மீட்டர்கள், அகலம் 0.72 மீட்டர்கள் மற்றும் உயரம் 1 மீட்டர் ஆகும்.

ஹெலிகாப்டரின் ரோட்டாரின் விட்டம் 3.75 மீட்டர்கள் ஆகும். அதிகப்பட்சமாக 10 ஆயிரம் அடி உயரத்தில் எச்.டி-100 ஹெலிகாப்டரால் பறக்க முடியும். பல்வேறு பாகங்களின் உதவியுடன் இயங்கும் இந்த ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டரின் எடை (எரிபொருள் இல்லாமல்) வெறும் 55 கிலோ மட்டுமே என்றால் நம்ப முடிகிறதா. இதனால்தான், இந்த ஹெலிகாப்டரின் ரேஞ்ச் 100கிமீ ஆக உள்ளது.
100கிமீ தொலைவிற்கு ஹெலிகாப்டரை இயக்கி செல்ல வேண்டுமெனில், ஹெலிகாப்டரில் 50 கிலோவுக்கு மேல் சுமையை ஏற்றக் கூடாது. அதுவே, இன்னும் குறைவாக 20 கிலோவுக்கு மேல் சுமையை ஏற்றவில்லை எனில், 400கிமீ தொலைவிற்கு கூட எரிபொருளை நிரப்பாமல் இந்த ஹெலிகாப்டரை இயக்கி செல்லலாம் என்கிறது எட்ஜ் குழுமம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டர் எதிர்காலத்திற்கானவை என நாம் கூறிக்கொண்டே, மெல்ல மெல்ல எதிர்காலத்திற்குள் நுழைந்து விட்டோம். ஆளில்லாமல் இயங்குவதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும், உயிர் சேதங்கள் ஏற்படாது. ஆதலால், எட்ஜ் எச்.டி-100 போன்ற ஆளில்லா-இயங்கும் ஹெலிகாப்டர்களின் பயன்பாடுகளை ஊக்குவிப்பது நல்லது.


Click it and Unblock the Notifications









