2023 ஆட்டோ உலகின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள்: ஆட்டோ எக்ஸ்போ, மாருதியின் 25 மில்லியன் கார் உற்பத்தி...
நடப்பு 2023 ஆம் ஆண்டில் ஆட்டோ உலகில் தலைப்பு செய்தியாக மாறிய முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். நிறைய சம்பவங்கள் வாகன உலகையே திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் அரங்கேறி இருக்கின்றன. மிக முக்கியமாக உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023ம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றது.
அதுதவிர, 25 மில்லியன் கார் உற்பத்தி சாதனை, ஆர்டிஇ புதிய விதி அமல்படுத்துதல், மின்சார வாகன விற்பனையில் டாடா புதிய சாதனை, சீன நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் கூட்டணி என ஏகப்பட்ட தரமான அம்சங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதுகுறித்த விரிவான தொகுப்பையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2023 (Auto Expo 2023): நடப்பாண்டை அலங்கரிக்கும் விதமாக தொடக்கத்திலேயே முதல் சம்பவமாக ஆட்டோ எக்ஸ்போ அரங்கேறியது. இந்த நிகழ்வின் வாயிலாக எண்ணற்ற கார்கள் இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டன. அந்தவகையில், மாருதி சுஸுகியின் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கான்செப்ட் தொடங்கி டாடா சீரா கான்செப்ட் வரை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஜிம்னி, ஃப்ரான்க்ஸ் ஆகிய கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி புதுமுக எலெக்ட்ரிக் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பல ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டன. அந்தவகையில், டாடாவின் ஹாரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட்டும் இந்த வாகன கண்காட்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது முதல் முறையாகும்.

மாருதி சுஸுகி 25 மில்லியன் வாகன உற்பத்தி சாதனை: இந்த மாபெரும் சாதனையை மாருதி சுஸுகி 2023-லேயே படைத்திருக்கின்றது. இதுவே இத்தகைய சாதனையை இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். வேறு எந்த நிறுவனமும் இத்தகையை சாதனையை இந்தியாவில் படைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி முதன் முதலில் இந்தியாவில் உற்பத்தி செய்த கார் மாடல் மாருதி 800 ஆகும்.
இதன் உற்பத்தி பணிகள் 1983 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனம் 23 ஆண்டுகளுக்கு பின்னர் 5 மில்லியன் வாகன உற்பத்தி எனும் மைல் கல்லை எட்டியது. இதற்கு அடுத்தபடியாக 2006 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் வாகன உற்பத்தி எனும் சாதனையைப் படைத்தது. இந்த நிலையிலேயே தற்போது அது 25 மில்லியன் வாகன உற்பத்தி என்கிற மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

ஆர்டிஇ விதி (RDE norms): இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையாக புதிய நிகழ் நேர காற்று மாசுபாட்டை அளவிடும் கருவியை அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்குவதற்கான விதியை அரசு அமல்படுத்தியது.
பிஎஸ்6 கட்டம் இரண்டு எனும் பெயரிலேயே புதிய மாசு உமிழ்வு அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய விதியின் காரணமாக இந்தியாவில் இருந்து ஏகப்பட்ட கார் மாடல்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக ஹோண்டா தன்னுடைய அனைத்து டீசல் கார்களையும் விற்பனையில் இருந்து வெளியேற்றயது.

ஆகையால், ஜாஸ் மற்றும் சிட்டி ஜென்-4 உள்ளிட்டவை விற்பனைக்குக் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கின்றது. இதுதவிர, ஆல்டோ 800 கார் மாடலும் இந்தியாவில் இருந்து அகற்றப்பட்டது. மேலும், ஸ்கோடாவின் ஆக்டேவியா, சூப்பர்ப் போன்ற கார் மாடல்களும் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றன.
டாடா மின்சார கார் உற்பத்தியில் சாதனை (Tata EV sales): இந்தியா மின்சார வாகன உலகின் மிகப் பெரிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உருவெடுத்து இருக்கின்றது. இந்த நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டிலேயே அது ஒரு லட்சம் யூனிட் விற்பனை என்கிற மாபெரும் சாதனையைப் படைத்து இருக்கின்றது. ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாகவே மின்சார வாகன விற்பனை இருந்திருக்கின்றது. மின்சார வாகன உற்பத்தியில் நிறுவனம் களமிறங்கி 44 மாதங்கள் ஆன நிலையிலேயே 10 ஆயிரம் யூனிட் விற்பனையை அது எட்டியது.
இதைத்தொடர்ந்து பதினைந்து மாதங்களில் மற்றுமொரு 40 ஆயிரம் யூனிட் விற்பனையை எட்டியது. இதைத்தொடர்ந்து, அடுத்த வெறும் ஒன்பது மாதங்களில் இதுவரை இல்லாத அளவிலான எண்ணிக்கை என கூறும் அளவிற்கு சுமார் 50 ஆயிரம் யூனிட் விற்பனையை அது பெற்றது. இந்த எண்ணிக்கையானது அடுத்தடுத்து வரும் மாதங்களில் மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்ஏஐசி மற்றும் ஜேஸ்டபிள்யூ இணைவு: இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜேஎஸ்டபிள்யூ சீன நிறுவனத்தின் பெரும் பங்கினை வாங்கி இருக்கின்றது. எஸ்ஏஐசி மோட்டார் குழுமத்திற்கு சொந்தமான பங்குகளையே அது வாங்கி இருக்கின்றது. ஆகையால், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்து வரும் நாட்களில் நாட்டில் மின்சார கார்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான வித்தே நடப்பாண்டில் போடப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்திகளில் ஒன்றாக இது மாறி இருக்கின்றது.
பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கான தடை: இந்தியாவில் காற்று மாசு என்பது தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களின் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விதி டெல்லி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. மேலும், அங்கு மிகக் கடுமையாக இது பின்பற்றப்படுகின்றது. இந்த விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
பாரத் என்சிஏபி அமல்படுத்துதல்: குளோபல் என்சிஏபி வாயிலாக இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள் ஆய்வு செய்யப்பட்டு வந்தநிலையில், குளோபல் என்சிஏபி-யை இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கின்றது. அக்டோபர் 1 ஆம் தேதியே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், சமீபத்தில்தான் முதல் நிறுவனமாக டாடாவின் தயாரிப்புகள் இதன் வாயிலாக கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டன. இந்த மோதல் ஆய்வில் டாடாவின் இரண்டு கார் மாடல்களும் 5க்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று பல முக்கிய சம்பவங்கள் வாகனம் உலகம் சார்ந்து அரங்கேறி இருக்கின்றது. டொயோட்டா தன்னுடைய கார் உற்பத்தி திட்டத்தை விரிவாக்கம் செய்தது, ரெனால்ட் புதிய திட்டத்தின்கீழ் இந்தியாவில் செயல்பட இருப்பதாக அறிவித்தது மற்றும் பினின்ஃபரினா பட்டிஸ்டா கார் வேக இயங்குவதில் உலக சாதனைப் படைத்தது என பல்வேறு சம்பவங்கள் 2023-லேயே அரங்கேறி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









