முதல்வர் கேட்பதை பார்த்தால் பல கோடி ரூபாய் ஒதுக்கனும் போலயே... பட்ஜெட்டை வாசித்தால்தான் எல்லாம் தெரியவரும்!!
மத்திய அரசின் பொது பட்ஜெட் இன்று (ஜூலை 23) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியீடு செய்யப்பட உள்ளது. தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பாஜக அரசின் இந்த ஆட்சி காலத்திற்கான முதல் பட்ஜெட் என்பதால், நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுவாக, மத்திய அரசின் பட்ஜெட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், சற்று தாமதமாக இந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்படுகிறது. புதிய அரசு ஆட்சியை அமைத்தவுடன் குறுகிய காலத்தில் வெளிவரும் பட்ஜெட்டாக இது விளங்குகிறது.
இருப்பினும், இதற்கு முன்பும் பாஜக அரசு தான் ஆட்சியில் இருந்ததாலும், இன்னும் 5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி செய்ய உள்ளதாலும் நிறைய தொலைநோக்கு சிந்தனை உடைய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த பட்ஜெட்டில் தங்களது மாநிலத்திற்கான அறிவிப்புகள் இருக்க வேண்டும் என நிறைய மாநில அரசுகள் தங்களது பரிந்துரைகளை தெரிவித்துள்ளன.

அந்த வகையில், நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் 2024-25 பட்ஜெட்டில் தங்களது மாநிலத்திற்காக எதிர்பார்க்கப்படும் திட்டங்களை சமீபத்தில் தெரிவித்தார். வருமான வரி குறைப்பு, பிரதமரின் வீடு திட்டங்கள் உள்ளிட்டவற்றில் தமிழ்நாட்டு மாநில அரசின் விருப்பங்களை பட்டியலிட்டு கூறியுள்ளார். ஆட்டோமொபைல் துறை தொடர்பாக பெரியதாக எந்த பரிந்துரைகளையும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என்றாலும், மாநில போக்குவரத்து குறித்து சில விருப்பங்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்க பணிகளுக்காக தேவையான நிதியை 2024-25 பட்ஜெட்டின் மூலம் மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும், கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது எனவும் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தற்போதைக்கு 54கிமீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது. விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து செண்ட் தாமஸ் மௌண்ட் வரையிலும் இரு பாதைகளாக மெட்ரோ இரயில்கள் இயங்கப்படுகின்றன.
இதனை இந்திய மற்றும் ஜப்பானிய அரசாங்கங்கள் இணைந்து செயல்படுத்துகின்றன. அதாவது, இதில் ஜப்பானிய அரசாங்கத்தின் கடனுதவியும் உள்ளது. சென்னை மெட்ரோ இரயில் சேவையின் 2ஆம் கட்ட பணிகள் சுமார் 118.9கிமீ தொலைவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போது செயல்பாட்டில் இருப்பதை காட்டிலும் டபுள் மடங்கு அதிகம். இதற்கான மத்திய அரசின் நிதியை தான் தமிழ்நாடு முதல்வர் தற்போது 2024-25 பட்ஜெட்டின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
மாதாவரத்தில் இருந்து சிப்கோட் வரையில் 45.8கிமீ தொலைவிற்கும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரையில் 26.1கிமீ தொலைவிற்கும், மாதாவரத்தில் இருந்து சோளிங்க நல்லூர் வரையில் 47கிமீ தொலைவிற்கும் 3 லைன்களாக மெட்ரோ இரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் அரசின் கடனுதவி மற்றும் மத்திய அரசின் நிதியுதவி மட்டுமின்றி மாநில அரசின் சார்பிலும் மெட்ரோ இரயில் சேவைக்காக நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கத்திற்கான நிதி உடன், தமிழ்நாட்டிற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோவிற்கு நிதியுதவி செய்துவரும் ஆசியன் கட்டுமான முதலீட்டு வங்கி (AIIB) கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்காகவும் முதலீடு செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட சில முக்கியமான விரைவுச்சாலைகளுக்காகவும் முதல்வர் குரல் கொடுத்துள்ளார். அதன்படி, தாம்பரம்- செங்கல்பட்டில் அமைக்கப்படும் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை பணிகளை விரைந்து முடித்திட முதல்வர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மொத்தம் 27 கிமீ தொலைவிற்கு மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த விரைவுச்சாலைக்கான திட்ட மதிப்பு ரூ.3,523 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ள இந்த திட்டங்களில் எத்தனை 2024-25 பட்ஜெட்டில் இடம்பெறும் என்பது தெரியவில்லை. ஆனால், மாநிலத்தில் மெட்ரோ இரயில் சேவையை விரிவாக்கம் செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளதை மட்டும் தெளிவாக அறிய முடிகிறது. 3 வருட காத்திருப்புக்கு ஒரு முடிவாக இந்த முறையாவது சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








