சொல்லி வைத்த மாதிரி கார் கண்ணாடியை உடைத்த ஆர்சிபி வீராங்கனை!! கப்பை ஆர்சிபி பெயரில் எழுத வேண்டியதுதான் போல!
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை அடித்த பந்து, மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியுள்ளது. மைதானத்தில் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்திய இந்த சம்பவத்தை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை அடுத்து, அதேபாணியில் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய 2024 பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 11வது போட்டி மார்ச் 4ஆம் தேதி, திங்கட்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உத்தர பிரதேஷ் வாரியர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

முதலாவதாக பேட் செய்த பெண்கள் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 198 ரன்களை குவித்தது. ஆனால், உத்தர பிரதேஷ் வாரியர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 23 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியை ஆர்சிபி அணி வென்றது. பெண்கள் ஆர்சிபி அணி தரப்பில் கேப்டன் ஸ்மிருத்தி மந்தனா 80 ரன்களை குவித்தார். கேப்டனுக்கு உறுதுணையாக எல்லிஸ் பெர்ரி 58 ரன்களை குவித்தார்.
பெங்களூரின் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 51 ரன்கள் எடுத்திருந்த போது எல்லிஸ் பெர்ரி பந்தை சிக்ஸருக்கு அடித்தார். இந்த பந்து நேராக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் மீது பட்டு காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தது. எல்லிஸ் பெர்ரி சிக்ஸர் அடித்த சந்தோஷத்தில் ரசிகர்கள் ஆராவாரம் செய்துக் கொண்டிருந்தனர்.
சரியாக அந்த நேரத்தில், பந்து காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய சத்தம் ரசிகர்களை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது. இதனால், இந்த சிக்ஸருக்கு மட்டும் ரசிகர்களிடம் இருந்து கூடுதலாக சத்தம் வெளிவந்தது. இதன் காரணமாக அந்த நேரத்தில், ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ந்தது. எல்லிஸ் பெர்ரி அடித்த இந்த சிக்ஸரின் நீளம் 80 மீட்டர்கள் ஆகும்.
ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி உடைத்த டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஸ்மார்ட், ஸ்மார்ட்+, அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் பஞ்ச் இவி விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

டாடா மோட்டார்ஸின் அளவில் சிறியதான மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச்சின் எலக்ட்ரிக் வெர்சனாக பஞ்ச் இவி அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.14.49 லட்சம் வரையில் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் உள்ளன. 25kWh மற்றும் 35kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இந்த டாடா எலக்ட்ரிக் காரில் கொடுக்கப்படுகின்றன.
2024 பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் போட்டி தொடரின் அதிகாரப்பூர்வ கார் பஞ்ச் இவி ஆகும். ஏனெனில் இந்த கிரிக்கெட் தொடரின் முதன்மை ஸ்பான்சராக டாடா குழுமம் உள்ளது. ஆண்கள் ஐபிஎல் தொடருக்கும் டாடா குழுமம் தான் ஸ்பான்சராகும். இதன் காரணமாகவே, கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளின் போதும் டாடா கார்கள் மைதானத்தில் நிறுத்தப்படுகின்றன. இந்த முறை ஐபிஎல் போட்டியின் போது பஞ்ச் இவி நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, கிரிக்கெட் மைதானத்தில் கார்கள் பந்து அடிக்கடி வராத பகுதியில்தான் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். ஏனெனில், அப்போதுதான் காரை விளம்பரம் செய்தவாறும் இருக்கும், அதேநேரம் காரின் மீதும் பந்து படாது. ஆனால், மிகவும் சில நேரங்களில் அரிதாக இவ்வாறு நடந்துவிடுகிறது. ஆதலால் இந்த நிகழ்வுக்கு, பந்து மட்டையில் பட்ட விதம் மற்றும் மைதானத்தில் வீசிய காற்றின் திசை காரணமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









