ஷங்கர் படத்தை விட பிரம்மாண்டமாக நடக்கப்போகும் பாரத் மொபிலிட்டி குலோபல் எக்ஸ்போ 2025! முழு விபரங்கள் இதோ!
இந்த ஆண்டு நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேதிகள் தற்போது உறுதியாகி உள்ளது. இதன்படி 2025-ம் ஆண்டில் இது மிகப்பெரிய அளவில் நடைபெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை டெல்லியில் வைத்து பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி என்பது நடந்தது. யாரும் எதிர்பாராத வகையில் இதில் ஏராளமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன. பல முக்கியமான தயாரிப்புகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன. மக்கள் மத்தியில் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆட்டோமொபைல் விரும்பிகள் இந்த கண்காட்சியில் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு முதல் ஆண்டாக வெற்றிகரமாக நடந்த நிலையில், அடுத்த 2025-ம் ஆண்டு இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியை நடத்துவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதிகளையும் தற்போது உறுதி செய்துள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
2025-ம் ஆண்டு இந்த கண்காட்சி டெல்லி என்சிஆர் பகுதியில் 3 இடங்களில் நடைபெறுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரகதி மைதான் பகுதியில் உள்ள பாரத் மண்டபம், துவாரகா பகுதியில் உள்ள யசோபூமி மற்றும் நொய்டா பெருநகர பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் ஆகிய இடங்களில் இந்த கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் பல்வேறு கமர்ஷியல் மற்றும் பயணிகள் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது போக எலெக்ட்ரிக் வாகனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், டயர்கள், பேட்டரி, சாப்ட்வேர், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து விதமான பொருட்களும் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கு பயணிகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்துவதற்காக மிகப்பெரிய அரங்குகள் மற்றும் மேடைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் டூவீலர்களை காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் இடம்பெறவில்லை 2025-ம் ஆண்டு நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சியில் அந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள பல்வேறு வாகனங்கள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதில் சர்வதேச அளவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஈர்க்கவும் இந்த கண்காட்சியில் பல்வேறு திட்டங்கள் போடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏராளமான ஆட்டோமொபைல் கண்காட்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதில் பிரபலமாக இருந்தது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி தான். இதுபோக ஆட்டோ உதிரிபாகங்களுக்கான கண்காட்சி, ஆட்டோமெக்கானிக்கா, என்ற கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் எக்ஸ்கான் என்ற கண்காட்சி ஆகியவை முக்கியமான நிகழ்வுகளாக இருந்தன. இதில் பிரபலமாக உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடந்து வந்தது.
2025-ம் ஆண்டு நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி இன்று ஆட்டோமொபைல் விரும்பிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்காட்சிக்காக பலர் காத்திருந்த நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது, அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வெளியூரிலிருந்து இந்த கண்காட்சியை காண விரும்புவர்கள் தற்போதைய டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி அடுத்த அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இதில் பல்வேறு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சியில் ஏகப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இது ஆட்டோமொபைல் விரும்பிகளுக்கு பெரிய விருந்துதான்.


Click it and Unblock the Notifications








