உ.பி அரசுக்கு ரொம்ப தாராள மனசுங்க... மீண்டும் மோட்டோஜிபி? இப்போதே எல்லா வேலையும் ஸ்டார்ட் ஆயிடுச்சு!!
மோட்டோ ஜிபி (Moto GP), உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பந்தயம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் மோட்டோ ஜிபி பந்தயங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது. தலைநகர் டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது. இதனால், வரும் காலங்களில் நொய்டாவில் மீண்டும் மோட்டோ ஜிபி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 2023 பாரத் மோட்டோஜிபி நடத்தப்பட்டு இன்னும் 1 வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில், மீண்டும் பாரத் மோட்டோஜிபி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோட்டோஜிபி போன்ற சர்வதேச பந்தயங்கள் ஒரு நாட்டில் நடத்தப்படுவது அந்த நாட்டை பெருமைப்படுத்துவது மட்டுமின்றி, அந்த நாட்டின் சாலை தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உலகிற்கு காட்டக்கூடியதாகவும் அமைகின்றன. இதன் காரணமாகவே, மோட்டோஜிபி பைக் பந்தயத்தை இந்தியாவில் நடத்திவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தது.

ஃபார்முலா கார் பந்தயங்கள் இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து மோட்டோ ஜிபி பந்தயமும் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தியாவில் மீண்டும் மோட்டோஜிபி பந்தயம் அடுத்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. டெல்லிக்கு அருகே நொய்டாவில் மோட்டோ ஜிபி நடத்தப்படுகிறது என கூறினாலும், உண்மையில் இந்த பந்தயம் உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் நடத்தப்படுகிறது.
ஆகையால், இந்த பந்தயத்தை நடத்தி கொடுக்கும் பொறுப்பு உத்திர பிரதேச மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. 2025 மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடத்தப்பட உள்ள பாரத் மோட்டோ ஜிபிக்கான பணிகளில் இப்போதே உ.பி மாநில அரசு ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இதன்படி, உத்திர பிரதேச மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் மோட்டோ ஜிபிக்கான இ-டெண்டர் துவங்கப்பட்டுள்ளது.

ஏலம் நடத்துவதற்கான கட்டண தொகையாக இந்திய நிறுவனங்களுக்கு ரூ.20,000 + ஜிஎஸ்டி-யும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 250 அமெரிக்க டாலர்கள் + மற்ற வரிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள நிறுவனங்களது பணி என்னவென்றால், 2025 பாரத் மோட்டோ ஜிபி -ஐ நாடு முழுவதும் விளம்பரம் செய்வதாகும்.
2023இல் நடத்தப்பட்டதை போன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் நடத்தப்பட உள்ள 2025 பாரத் மோட்டோ ஜிபிக்கான செலவில் 50%-க்கும் அதிகமான நிதியை உத்திர பிரதேச மாநில அரசு வழங்க உள்ளது. 2025 பாரத் மோட்டோ ஜிபியை நடத்துவதற்கான ஒட்டு மொத்த செலவாக ரூ.150 கோடி தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.80 கோடியை உபி முதலீடு வாயிலாக உபி அரசாங்கம் வழங்க உள்ளது.

மீதி செலவில், 37.5 கோடி ரூபாய் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா விரைவுச்சாலை துறையின் வாயிலாக பெறப்பட உள்ளது. மீதி செலவிற்கு தனியார் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பை உபி அரசு எதிர்ப்பார்க்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் ஏறக்குறைய 200 கார்ப்பிரேட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் பெறப்பட உள்ள நிதிகளை எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி கையாள எஸ்க்ரோ கணக்கு விரைவில் துவங்கப்பட உள்ளது.
புத் சர்வதேச பந்தய களத்தை ஒவ்வொரு வருடத்திற்கும் 35 நாட்களுக்கு தயார் நிலையில் வைத்திருப்பதை யமுனா விரைவுச்சாலை துறையினர் உறுதி செய்கின்றனர். பந்தய சாலைகளும், நிகழ்ச்சி அரங்குகளும் பயன்படுத்துவதற்கு நல்ல நிலையில் உள்ளன என்பதை பந்தயம் நடைபெறும் 90 நாட்களுக்கு முன்னதாகவே உறுதி செய்ய வேண்டியது யமுனா விரைவுச்சாலை துறை அதிகாரிகளின் பணியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2023 பாரத் மோட்டோ ஜிபிக்கு உ.பி மாநில அரசு ரூ.18.5 கோடி நிதியை அளித்து இருந்தது. ஆனால், இந்த நிதி தொகை 2025 பாரத் மோட்டோ ஜிபிக்கு 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில் இருந்து, மோட்டோஜிபி பந்தயத்திற்கு உத்திர பிரதேச அரசும், மத்திய அரசும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









