குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) தற்போது கடுமையான குடிநீர் பஞ்சத்தை (Water Crisis) எதிர்கொண்டு வருகிறது. காவிரி நதி (Cauvery River) மற்றும் போர்வெல்கள் (Borewells) மூலமாகதான் பெங்களூர் நகரம் தனது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. ஆனால் தற்போது பெரும்பாலான போர்வெல்கள் வறண்டு விட்டன.
பெங்களூர் நகரில் மொத்தம் 14 ஆயிரம் போர்வெல்கள் இருக்கின்றன. இதில், 6,900 போர்வெல்கள் வறண்டு விட்டன. இது கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா (Siddaramaiah) கூறிய அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும். போர்வெல்கள் வறண்டு போனதுதான், பெங்களூர் குடிநீர் பஞ்சத்திற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர அதிகரித்து கொண்டே வரும் மக்கள் தொகை, மெட்ரோ மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது, போதிய மழை இல்லாதது என பெங்களூர் நகரின் குடிநீர் பிரச்னைக்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஒட்டுமொத்தத்தில் பசுமை மற்றும் குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற பெங்களூர் நகரம் படிப்படியாக அதன் இயல்பை இழந்து கொண்டே வருகிறது.
தற்போதைய குடிநீர் பஞ்சம் காரணமாக, பெங்களூர் நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கார்களை கழுவுதல், தோட்டங்களை பராமரித்தல் மற்றும் பெரிய கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல், களத்திலும் இறங்கி அதிரடி காட்டியுள்ளனர் பெங்களூர் அதிகாரிகள். ஆம், பெங்களூர் நகரில் கார்களை கழுவ குடிநீரை பயன்படுத்திய 22 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக 1.10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தது மற்றும் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தது ஆகியவற்றின் மூலம்தான் இந்த 22 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரவுள்ளது. எனவே பெங்களூரில் வசிப்பவர்கள், கவனமாக நடந்து கொள்வது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டியதிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காரை சுத்தமாக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், ட்ரை கார் வாஷ் (Dry Car Wash) முறையை முயற்சி செய்யலாம். இது தண்ணீரே பயன்படுத்தாமல், காரை சுத்தம் செய்யும் ஒரு முறையாகும். இந்த முறையில் தண்ணீர் செய்ய வேண்டிய வேலையை ரசாயனங்கள் (Chemicals) செய்யும்.
இது குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருவதால், பெங்களூரை சேர்ந்த கார் உரிமையாளர்கள் பலரும் தற்போது ட்ரை வாஷ் முறைக்கு மாறி வருகின்றனர். வீடுகளுக்கே வந்து கார்களை ட்ரை வாஷ் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் கூட பெங்களூர் நகரில் உள்ளன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால், கார்களை ட்ரை வாஷ் செய்யும் நிறுவனங்களின் காட்டில் தற்போது அடைமழை என்று சொன்னால் மிகையாகாது.
தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக பெரிய நிறுவனங்கள் கூட தற்போது ட்ரை வாஷ் முறைக்கு மாறி வருகின்றன. இதற்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் ஒரு உதாரணம். கடந்த 5 ஆண்டுகளில், ட்ரை வாஷ் முறை மூலம், 650 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








