22 வயசு மட்டும் தான் ஆகுது! யூடியூப் மூலம் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியும்னு காட்டிட்டாரு!!
லம்போர்கினி (lamborghini) கார் வாங்க வேண்டும் என்பதில் நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஆனால், லம்போர்கினி கார் ஒன்றை சாலையில் காண்பதே அரிதான ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் வெறும் 22 வயதான இளைஞர் ஒருவர் விலையுயர்ந்த லம்போர்கினி காரை வாங்கி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளார். யார் அவர்? எவ்வாறு இவ்வளவு காஸ்ட்லீயான காரை இந்த சிறிய வயதில் வாங்கியுள்ளார்? அவர் வாங்கியிருக்கும் லம்போர்கினி கார் என்ன? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இன்றைய உலகை யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன என சொன்னால் அது மிகையில்லை. இவற்றின் மூலமாக பலர் அதிகமான வருவாயை சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக, இளம் தலைமுறையினரை கவரும் வகையிலான கேமிங் வீடியோக்களுக்கு நிறைய பார்வையாளர்களும், அதன் மூலம் கணிசமான வருவாயும் கிடைக்கிறது.

அவ்வாறு, கேமிங் வீடியோக்கள் மூலம் யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் சேனல், 'ஜோனாதன் கேமிங்' ஆகும். ஜோனாதன் என்கிற 22 வயதான இளைஞர் ஒருவர் இந்த யூடியூப் சேனலை கவனித்து வருகிறார். தனது பெயரையே ஜோனாதன் தனது யூடியூப் சேனலுக்கு சூட்டியுள்ளார். இவரது சேனலுக்கு 65 இலட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். யூடியூப் மூலம் பலரது வாழ்க்கை வேற லெவலுக்கு மாறியுள்ளது.
ஆனால், ஜோனாதன் ஒருபடி மேலே சென்று இதன் மூலம் கிடைத்த வருவாயில் விலையுயர்ந்த லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். விமர்சையாக நடந்த இந்த லம்போர்கினி கார் டெலிவிரி நிகழ்ச்சியையும் ஜோனாதன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். ஜோனாதன் வாங்கியிருப்பது லம்போர்கினி ஹூராகென் (Huracan) கார் ஆகும். ஜோனாதனின் குடும்பத்திடம் ஏற்கனவே சில விலையுயர்ந்த கார்கள் உள்ளன.

இதனால், சிறு வயதில் இருந்தே கார்கள் மீதான ஆர்வத்துடன் ஜோனாதன் வளர்ந்தவர். குறிப்பாக, அதிவேகமான கார்கள் மீது ஜோனாதனுக்கு தனி ஆர்வம் உண்டு. இவர் முன்னதாக பிஎம்டபிள்யூ மற்றும் ஃபோர்டு மஸ்டங் உள்பட பல்வேறு சொகுசு கார்களை பயன்படுத்தி வந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், லம்போர்கினி ஹூராகென் காரை டெலிவிரி பெறுவதற்காக இவர் ஷோரூமுக்கு வந்ததே மெர்சிடிஸ் ஜி.எல் காரில் ஆகும்.
ஜோனாதன் வாங்கியிருப்பது புத்தம் புதிய லம்போர்கினி ஹூராகென் கார் கிடையாது. ஏற்கனவே, ஒரு ஓனர் பயன்படுத்தியது ஆகும். இருப்பினும், இதன் விலையும் சில கோடிகள் வரையில் இருக்கலாம். கார் வாங்க டீலர்ஷிப் ஷோரூமுக்கு வந்த ஜோனாதன் அங்கிருந்த ஃபோக்ஸ்வேகன் பீட்லி, பெண்ட்லீ மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற தனித்துவமான கார்களை பார்வையிட்ட பின்னரே இந்த லம்போர்கினி ஹூராகென் காரை வாங்கியுள்ளார்.

அந்த கார்களை பார்வையிட்டதை வீடியோவாக காட்சிப்படுத்தி யூடியூப்பில் ஜோனாதன் வெளியிட்டுள்ளார். இதில், 2017ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் பீட்லி காருக்கு ரூ.36.5 லட்சமும், பெண்ட்லீ காருக்கு ரூ.1.85 கோடியும், லம்போர்கினி உருஸ் காருக்கு ரூ.4 கோடியும் விலையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோனாதன் வாங்கியுள்ள லம்போர்கினி ஹூராகென் கார் சாடின் கிரே நிறத்தில், கருப்பு நிற சக்கரங்கள் உடன் உள்ளது.
ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் என 2 விதமான வெர்சன்களில் ஹூராகென் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எதை ஜோனாதன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இவை இரண்டிலும் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்படுகிறது. கூபே மற்றும் ஸ்பைடர் பாடி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த லம்போர்கினி காரை கூபே வெர்சனில் ஜோனாதன் வாங்கியுள்ளார். 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த லம்போர்கினி கார் வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ப்ரீ-ஓண்டு காராக இருப்பினும் இந்த லம்போர்கினி ஹூராகென் காரின் விலை சில கோடி ரூபாய்களாக இருக்கும். 22 வயதில் இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்குவதற்கு யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டும் போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆதலால் இந்த காரை வாங்குவதற்கு வேறு வழிகளிலும் ஜோனாதன் பணத்தை தயார் செய்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









