ரயில்களுக்கு ஏசி பெட்டிகளுக்கு டிக்கெட் விலை குறைப்பு! ஆனா சில கண்டிஷன்கள் இருக்குது!
இந்திய ரயில்வே நிர்வாகம் ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிக்யூடிவ் கிளாஸ்களுக்கான டிக்கெட் விலையை 25 சதவீதம் வரை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. போதுமான அளவுக்கு டிக்கெட் புக்கிங் இல்லாததால் இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் சேவை மிக முக்கியமான பொது போக்குவரத்து சேவையாக இருக்கிறது. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ரயில் சேவையை மேம்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் ரயில்வேயில் ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூடிவ் கிளாஸ் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படும் எண்ணிக்கை சில ரூட்களில் மிக குறைவாக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. இதனால் அந்தப் பெட்டிகளுக்கான டிக்கெட் விலையை மட்டும் 25 சதவீதம் வரை தள்ளுபடி செய்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தில் இந்த புதிய அறிவிப்பின்படி குறிப்பிட்ட இந்த ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் ரயில் பெட்டிகளுக்கு மட்டும் அடிப்படை விலையிலிருந்து 25% தள்ளுபடி வழங்கப்படும். இதுபோக ரிசர்வேஷன் கட்டணம் சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் சர்சார்ஜ், ஜிஎஸ்டி என அனைத்தும் வழக்கம் போலவே விதிக்கப்படும்.

இந்த தள்ளுபடி கட்டணம் ரயில்களில் கடைசி 30 நாட்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இந்த தள்ளுபடிக்கு அனுமதி வழங்கப்படும். இந்த 50 சதவீத டிக்கெட் முன்பதிவு என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை மற்றும் குறிப்பிட்ட லெக்களுக்கு என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும் வகையிலேயே இதுவும் பொருந்தும்.
இந்த தள்ளுபடி உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த தள்ளுபடிக்கான காலம் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு முன்னதாகவே நிறுத்த வேண்டும் என்றால் அதை ரயில்வே நிர்வாகத்தின் தலைமை கமர்சியல் மேலாளர் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதுபோக இந்த தள்ளுபடி அனைத்து நாட்களுக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கோ, மாதவாரியாகவோ அல்லது சீசன் நேரங்களில் மட்டுமோ அல்லது வார நாட்கள் அல்லது வார இறுதியை அடிப்படையாக என ஒவ்வொரு ரயிலின் டிமாண்ட் பேட்டனை வைத்து எந்தெந்த ரயிலுக்கு எப்பொழுது எப்படி தள்ளுபடி வழங்க வேண்டும் என்பதை ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என்பதை அறிவித்துள்ளது.
இப்படியாக ஒரு ரயிலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் அந்த ரயிலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படும் முன்னரே ஒருவர் டிக்கெட் புக் செய்திருந்தால் அவருக்கு எந்தவிதமான பணமும் திரும்ப தரப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. இனிமேல் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கட்டணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் ரயில்கள், விடுமுறை கால ரயில்கள் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட ரயில்களுக்கு இந்த சலுகை கட்டணம் பொருந்தாது. மேலும் தட்கல் கோட்டா மூலம் புக் செய்தால் ரயில் கிளம்பிய இடம் முதல் சென்று சேரும் இடம் வரை டிக்கெட் எடுத்தால் மட்டுமே இந்த சலுகை கட்டணம் பொருந்தும் இடைப்பட்ட இடங்களுக்கு டிக்கெட் எடுத்தால் இந்த சலுகை கட்டணம் கிடைக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் உள்ளிட்ட ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் பெட்டிகளுக்கான டிக்கெட் விலையை ரயில்வே நிர்வாகம் குறைத்துள்ளது. நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது இதன் மூலம் அதிகமான பயணிகள் இனி இந்த ரக பெட்டிகளை பயன்படுத்த துவங்குவார்கள்.


Click it and Unblock the Notifications









