மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டபுள்-டக்கர் பேருந்தில் இந்த குறைகளை தவிர்த்து இருக்கலாம் - குமுறும் மக்கள்!!
மும்பையில் 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் சில பல குறைகள் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அவர்கள் கூறும் குறைகள் என்னென்ன என்பதை பற்றியும், மும்பையின் 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
டபுள்-டக்கர் பேருந்துகள் நமது இந்தியாவிற்கு ஒன்றும் புதியவை அல்ல. கடந்த பல வருடங்களுக்கு முன்பே சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட்டன. அதன்பின் நமது சென்னையில் சில காரணங்களினால் இவற்றின் சேவை நிறுத்தப்பட்டாலும், மும்பையில் பல வருடங்களாக இன்னமும் பயன்பாட்டில் உள்ளது. இதனாலேயே இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து சமீபத்தில் மும்பையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல் எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை தொடர்ந்து 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து மும்பையில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் முதல் பேருந்து வாஷி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் சமீபத்தில் தான் பதிவு செய்யப்பட்டு, சத்ரபதி சிவாஜி மஹாராஜா மும்பை இரயில் நிலையத்தில் இருந்து தென் மும்பையில் உள்ள பேக்பே பேருந்து டிப்போ வரையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டாலும், இதனை கொண்டாடும் மனநிலையில் மும்பைவாசிகள் இல்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் முதல் பேருந்தில் சில குறைகள் இருப்பதாக பயணிகள் சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் பயணிகளின் கருத்துகளுக்கு இணங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தங்களது புகார்களுக்கு இணங்க சில மாற்றங்களை மட்டுமே செய்துள்ளனர், பாதுகாப்பு மற்றும் சவுகரியம் விஷயத்தில் தாங்கள் கூறிய வேறு சில குறைப்பாடுகள் இந்த 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்திலும் தொடர்ந்துள்ளதாக பொதுமக்களில் சிலர் 2வது பேருந்தின் அறிமுக நிகழ்ச்சியில் குமுறுவதை பார்க்க முடிந்தது.
பொதுமக்கள் மட்டுமின்றி இந்த சில குறைப்பாடுகளை பேருந்து ஓட்டுனர்களும் அடையாளம் கண்டு தகுந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த பேருந்து ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், பேருந்தை நிறுத்த/ மீண்டும் இயக்க ஓட்டுனருக்கு நடத்துனர் கொடுக்கும் அலார மணி பேருந்தின் முன் கதவுக்கு அருகில் சற்று தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளது. இது சில உயரமான பயணிகளின் தலையில் இடிக்கிறது. இதனால் அவர்களுக்கு காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த அலார மணி 2வது எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது என்றாலும், அதே பிரச்சனை இந்த பேருந்திலும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாம். முதல் பேருந்திலேயே, பயணிகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்க ஓட்டுனருக்கு இடது புறத்தில் கம்பி ஒன்று பொருத்த ஓட்டுனர்கள் வேண்டுக்கோள் விடுத்தனர். இருப்பினும் இதனை 2வது பேருந்திலும் அதிகாரிகள் காதில் வாங்கியதுபோல் தெரியவில்லை
ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இவ்வாறு மும்பையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் உள்ள குறைப்பாடுகள் ஏராளம். இவற்றை எல்லாம் களை எடுத்துவிட்டு 2வது பேருந்தை அறிமுகம் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும், மக்களும் பாராட்டி இருப்பார்கள். ஏனெனில், இந்த புதிய அறிமுகங்கள் அனைத்தும் பொது மக்களுக்கானவை என்பதை அதிகாரிகள் மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








