சத்தியமா நம்பவே முடியல... மூன்றே வயதில் இப்படியொரு திறமையா!! துருக்கியில் பிறந்திருக்கும் அதிசய குழந்தை...
கார்களை ஓட்டுவது நிச்சயம் ஒருவிதமான கலை என்றுதான் சொல்ல வேண்டும். அதனை கற்று கொண்டுவிட்டோம் என்றால், விலையுயர்ந்த கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் என அதில் பரிணாம வளர்ச்சியை அடைய துவங்கிவிடலாம். ஆனால் எவரொருவரும் கார் டிரைவிங்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதிற்கு பின்பே கற்று கொள்வது நல்லது.
மோட்டார்சைக்கிள் ரைடிங் ஆக இருந்தாலும், 18 வயதிற்கு மேல் ஓட்ட துவங்கினால் தான் ரைடிங்கின் போது எவ்வாறான ஆபத்துகள் எல்லாம் உருவாகுகின்றன என்பதை உணர முடியும். மேலும் அதற்கேற்ப திறம்பட செயல்பட முடியும். மோட்டார்சைக்கிள்களுக்கே இப்படியென்றால், கார்களை ஓட்டுவதை பற்றி சொல்லவே வேண்டாம். இந்தியாவில் கார்களை ஓட்டுவதற்கும் குறைந்த வயது வரம்பாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றாலும், 21 வயதுக்கு பின்பே ஓட்ட துவங்குவது நல்லது.

அப்படியிருக்கையில், துருக்கி நாட்டில் 3 வயது மட்டுமே ஆன ஒரு குழந்தை அசத்தலாக காரை ஓட்டுவதுடன், காரை பார்க் செய்தும் பிரமிக்க வைத்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஹைலைட் என்னவென்றால், ஸாய்ன் சோஃபோக்லு என பெயர் கொண்ட இந்த 3 வயது குழந்தை ஓட்டியிருப்பது சுமார் 769 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஃபெராரி எஸ்.எஃப்90 என்ற ஸ்போர்ட்ஸ் காரை ஆகும்.
ஃபெராரி எஸ்.எஃப்90 கார் ஆனது பிரபல இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் பிராண்டான ஃபெராரியின் தனித்துவமான கார்களுள் ஒன்று. ஃபெராரி நிறுவனத்திற்கு பல்வேறு பந்தயங்களில் முதல்முறையாக பரிசுகளை வென்று கொடுத்துள்ள இந்த காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ரூ.7.50 கோடியாக தற்சமயம் உள்ளது. இத்தகைய விலைமிக்க ஃபெராரி காரை தான் துருக்கியை சேர்ந்த இந்த 3 வயது குழந்தை ஓட்டி அசத்தியுள்ளது.

கார்களையே ஓட்டும்போது, ஸாய்ன் சோஃபோக்லு-விற்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் உள்ளது என்றால் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றால், இந்த ஃபெராரி எஸ்.எஃப்90 கார் மட்டுமின்றி, கியர் இல்லா இருசக்கர வாகனங்கள், ஏடிவி-கள், ஸ்டீமர்ஸ் உள்பட பல்வேறு வாகனங்களை இதற்குமுன் அவர் ஓட்டியுள்ளது குறித்த பதிவுகளை காணலாம். ஸாய்ன் சோஃபோக்லு-வின் இத்தகைய ஆர்வத்திற்கு முக்கிய காரணம் அவரது தந்தை ஆகும்.
ஏனெனில் அவரது கெனன் சோஃபோக்லு, உலக மோட்டார்சைக்கிள் சூப்பர் ஸ்போர்ட் பந்தயத்தில் 5 முறை வெற்றி பெற்றவர் ஆவார். மோட்டார்சைக்கிள் ரேஸராக கெனன் இருக்க, அவரது மகன் ஒருபடி மேலே போய் இந்த வயதிலேயே ஃபெராரி போன்ற ஆற்றல்மிக்க காரை ஓட்ட ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஃபெராரி எஸ்.எஃப்90 காரை ஓட்டும்போது ஸாய்ன் சோஃபோக்லு-விற்கு காரின் ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்கள் சரியாக எட்டவில்லை என்பதை தெளிவாக காண முடிகிறது.

ஆஸ்லரேட்டர் & பிரேக் கொடுக்க இருக்கையில் இருந்து சற்று சரிந்து கால்களை நன்கு எட்டியே அவற்றிற்கான பெடல்களை மிதிக்கிறார். அதேபோல் டேஸ்போர்டிற்கு மேலே உள்ளவற்றை மட்டுமே அவரால் காண முடிகிறதே தவிர்த்து, சாலையை அவரால் நேரடியாக காண முடியவில்லை. இதற்காக காரின் மேற்கூரையில் ஒரு கேமிராவை பொருத்தியுள்ளனர். அது காட்டும் காட்சிகளை இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் அவ்வப்போது பார்த்தவாறே காரை ஸாய்ன் சோஃபோக்லு ஓட்டுகிறார்.
இணையத்தில் லைக்ஸ் மற்றும் சேர்-க்காக மட்டுமே இவ்வாறு செய்யலாமே தவிர்த்து, இவ்வாறான டிரைவிங்குகள் உண்மையில் ஆபத்தானவை. இதனால் தான் கெனன் தனது மகன் ஸாய்னின் இந்த டிரைவிங்கை மூடிய தனது வீட்டின் வளாகத்திற்குள் வைத்து கொண்டுள்ளார். 38 வயதான கெனன் சோஃபோக்லு துருக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர் என்பது கூடுதல் தகவல் ஆகும். வி8 என்ஜின் மற்றும் 120 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் இந்த ஃபெராரி கார் இயங்குகிறது.


Click it and Unblock the Notifications
