மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு செக்... அபராதம் எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
பியூசி சர்டிஃபிகேட் இல்லாத வாகனங்களுக்கு அதிகாரிகள் செக் வைத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. எனவே பியூசி சர்டிஃபிகேட் (PUC Certificate) இல்லாத வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி நவம்பர் 1ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை சுமார் 3,500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 8,25,681 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் பியூசி சர்டிஃபிகேட் இல்லாத 9,522 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 9.5 கோடி ரூபாய் மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பியூசி சர்டிஃபிகேட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகன சட்டம், 1993-க்கு ஏற்ப, உரிய பியூசி சர்டிஃபிகேட் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு பிரிவு 190(2)-ன்படி 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுனர் மூன்று மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை இழக்க நேரிடும். கடந்த அக்டோபர் மாதத்தின் மத்திய நிலவரப்படி டெல்லியில் 17.71 லட்சம் வாகனங்கள் முறையான பியூசி சர்டிஃபிகேட் இல்லாமல் இயங்கி கொண்டுள்ளன. டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 1.34 கோடி ஆகும்.

டெல்லியில் பியூசி சர்டிஃபிகேட் இல்லாமல் இயங்கும் வாகனங்களில் பெரும்பாலானவை டூவீலர்கள்தான். தோராயமாக 13 லட்சம் இரு சக்கர வாகனங்களுக்கு பியூசி சர்டிஃபிகேட் இல்லை. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் தோராயமாக 4.20 லட்சம் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பியூசி சர்டிஃபிகேட் இல்லாமல் உள்ளது.

நவம்பர் 1ம் தேதியில் இருந்து நவம்பர் 17ம் தேதி வரை பியூசி சர்டிஃபிகேட் இல்லாத காரணத்திற்காக டெல்லியில் 3,446 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் இதே கால கட்டத்தில் 3.34 லட்சம் பியூசி சர்டிஃபிகேட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் டெல்லியில் இன்னும் நடவடிக்கை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் தற்போது 50க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மட்டுமல்லாது, பியூசி சர்டிஃபிகேட் குறித்த விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.

டெல்லியில் தற்போது வாகனத்தின் எரிபொருள் வகையை குறிப்பிடும் வகையில் கலர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற உத்தரவும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாகனம் என்ன எரிபொருளில் இயங்குகிறது? என்பதை அதிகாரிகள் எளிதாக தெரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். எனவே வாகன உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாகனம் பெட்ரோல் அல்லது சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கினால் நீல நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அதே நேரத்தில் டீசல் மூலம் இயங்கினால் ஆரஞ்ச் நிற ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது அவசியம். இதன் மூலம் வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், எந்த எரிபொருளில் வாகனம் இயங்குகிறது என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு தற்போது அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனினும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள், குறிப்பாக பழைய வாகனங்கள்தான் மிக முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் டெல்லி மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் படிப்படியாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








