வாலை நறுக்கீட்டாங்க! டிரைவிங் ஸ்கூல்களின் ஆட்டத்தை அடக்கிய ஆர்டிஓ அதிகாரிகள்! இப்பதான்யா சந்தோஷமா இருக்கு!
கார் ஓட்டி பழகுவதற்கு நாம் பெரும்பாலும் டிரைவிங் ஸ்கூல்களைதான் (Driving Schools) சார்ந்துள்ளோம். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் கார்களில் அவ்வப்போது ஓட்டி பழகினாலும், அங்கீகாரம் பெற்ற டிரைவிங் ஸ்கூல்களில் முறையான பயிற்சி (Training) பெறுவதைதான் நம்மில் பலரும் விரும்புகின்றனர். எனவே இந்தியாவில் அதிக அளவிலான டிரைவிங் ஸ்கூல்கள் திறக்கப்படுகின்றன.
டிரைவிங் ஸ்கூல்களில் நமக்கு பயிற்சி அளிப்பதற்காக ட்யூயல் கண்ட்ரோல் கார்களை (Dual Control Cars) பயன்படுத்துவார்கள். டிரைவிங் ஸ்கூல்களுக்கு சென்றவர்களுக்கு இந்த வித்தியாசமான கார்களை பற்றி தெரியும். தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். பொதுவாக வழக்கமான கார்களில் டிரைவர் இருக்கைக்கு கீழே மட்டும்தான் பெடல்கள் இருக்கும். ஆனால் ட்யூயல் கண்ட்ரோல் கார்களில் முன் பக்க பயணியின் இருக்கைக்கு கீழேயும் பெடல்கள் காண முடியும்.

புதிதாக கார் ஓட்டுபவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டாலோ அல்லது அவர்களால் காரை திடீரென கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, முன் பக்க பயணியின் இருக்கையில் அமர்ந்துள்ள நபர் (டிரைவிங் கற்று தருபவர்) இந்த கூடுதல் பெடல்கள் மூலம் காரை உடனடியாக கட்டுப்படுத்தி விடுவார். எனவே புதிதாக கார் ஓட்டி பழகுபவர்களால் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த கூடுதல் பெடல்கள் உதவி செய்கின்றன.
இந்த சூழலில் டிரைவிங் ஸ்கூல்களின் ட்யூயல் கண்ட்ரோல் கார்களில் விதிமுறைகள் மீறப்படுவதாக ஆர்டிஓ என சுருக்கமாக அழைக்கப்படும் வட்டாரா போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO - Regional Transport Office) தொடர்ச்சியாக புகார்கள் சென்று வருகின்றன. இந்த புகார்களின் பேரில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தற்போது அதிரடி சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறிய டிரைவிங் ஸ்கூல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாக்பூரின் பல்வேறு சாலைகளில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் துணை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு டிரைவிங் ஸ்கூல்களின் ட்யூயல் கண்ட்ரோல் கார்களின் எஃப்சி எனப்படும் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் (FC - Fitness Certificate) காலாவதியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இன்சூரன்ஸ் (Insurance) மற்றும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC - Pollution Under Control Certificate) ஆகியவை இல்லாமலும் அவை இயக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் முறையான அனுமதி இல்லாமலும், பயிற்சி பணிகளுக்காக ட்யூயல் கண்ட்ரோல் கார்களை டிரைவிங் ஸ்கூல்கள் பயன்படுத்தி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விதிமுறை மீறல்கள் தொடர்பாக 4 ட்யூயல் கண்ட்ரோல் கார்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளுக்கு எதிராக ஒரு சில கார்களில் மாடிஃபிகேஷன்களும் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக பல்வேறு டிரைவிங் ஸ்கூல்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அதிரடியாக அபராதமும் விதித்துள்ளனர்.
இதுபோன்ற விதிமுறை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக டிரைவிங் ஸ்கூல்களை நடத்துபவர்களுக்கும், வட்டாரா போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கும் இடையே கூட்டணி இருக்கும் எனவும், எனவே டிரைவிங் ஸ்கூல்களை நடத்துபவர்கள் விதிமுறைகளை மீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
எனவே பொதுமக்கள் பலரும் இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர். அத்துடன் முறையான அங்கீகாரம் பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு டிரைவிங் ஸ்கூல்களை நடத்தி வருபவர்களும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். அத்துடன் விதிமுறைகளை மீறும் டிரைவிங் ஸ்கூல்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அங்கீகாரம் பெற்ற டிரைவிங் ஸ்கூல்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications