நாட்டின் விவசாயிகளுக்கு 400 ஆற்றல்மிக்க இரயில்கள்!! அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2022 பட்ஜெட்!
2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். நாட்டிற்கு நன்மை விளைவிக்கும் வகையிலும், டிஜிட்டல்மயமாக்கலை பல்வேறு துறைகளில் புகுத்தும் பொருட்டும் இந்த பட்ஜெட் உள்ளதாக பலதரப்பட்டோரிடம் இருந்து வாழ்த்துகள் கிடைத்துள்ளன.

அதேநேரம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் அனைத்தும் வெற்றிக்கரமாக நிறைவு செய்யப்படுமா என்கிற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. இதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வழக்கம்போல் இந்த பட்ஜெட்டிலும் நாட்டில் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான திட்டங்களும் அடங்கியுள்ளன.

அதேநேரம் இரயில்வே துறையிலும் சில புதிய திட்டங்கள் புகுத்தப்பட உள்ளன. இதில் முக்கியமானதாக, மத்திய அரசாங்கம் விரைவில் 400 ஆற்றல்மிக்க வந்தே பாரத் இரயில்களை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க 3 ஆண்டுகள் நிர்ணயித்து கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய இரயில்வே துறையில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" என்கிற திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது. நாட்டில் இரயில்வே பார்சல் துறை சில முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இதனை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைய உள்ளது.

ஏனெனில் பெரிய கம்பெனிகளை தாண்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிறு சிறு தொழில் முனைவோர்களது தயாரிப்புகளும் இரயில்களில் எடுத்த செல்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தான் புதியதாக தயாரிக்கப்படும் 400 வந்தே பாரத் இரயில்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

பிரதமர் காடி சக்தி -இன் கீழ் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு கட்டமைப்பு மேம்பாட்டிற்கான திட்டமாக இந்த 400 வந்தே பாரத் இரயில்கள் விளங்குவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த 400 புதிய வந்தே பாரத் இரயில்கள் இரும்பிற்கு பதிலாக எடை குறைவான அலுமினியத்தில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுமினியமே இரயில்பெட்டியை தயாரிக்க தற்சமயம் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. மொத்தம் 16 பெட்டிகளுடன் ஒரு வந்தே பாரத் இரயில் உருவாக்கப்பட உள்ளது. அலுமினியத்தில் தயாரிப்பதன் மூலமாக ஒவ்வொரு இரயிலின் எடையும் கிட்டத்தட்ட 50 டன்கள் வரையில் வழக்கத்தை காட்டிலும் குறைவாக இருக்குமாம். இரயில் எடை குறைகிறது என்றால் அதனை இயக்க தேவையான ஆற்றலும் குறையும்.

இதனால் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் இரயிலை உருவாக்க, இரும்பு இரயில்களை உருவாக்க தேவையான தொகையை காட்டிலும் ரூ.25 கோடி வரையில் அதிகமாக தேவைப்படுமாம். இரும்பு இரயில் ஒன்றை உருவாக்க சராசரியாக ரூ.106 கோடி வரையில் செலவாகிறது.

அதேபோல் பிற தொடர்புடைய செலவுகளும் வந்தே பாரத் இரயில்களில் சற்று அதிகமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒத்து கொண்டிருப்பதினால், குறைந்த இயக்க ஆற்றல் வழங்குவதன் மூலம் சேமிக்கப்படும் தொகை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். வருவாய் அதிகம் கிடைத்தால் ஓகே தான்.

புதிய வந்தே பாரத் இரயில்கள் மிக அதிக வேகத்திற்கும், தற்போதைய லோக்கல் இரயில்களின் சராசரி வேகத்திற்கும் இடைப்பட்ட வேகத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும். இதன் ஒவ்வொரு பெட்டியை இயக்கவும் தற்போது உள்ளது போல் தனித்தனியாக என்ஜின் தேவைப்படாது. மற்ற பெட்டிகள் உராய்வு ஆற்றலின் மூலம் இயங்கும். முதற்கட்டமாக 44 வந்தே பாரத் இரயில்களை உருவாக்கும் பணியில் மத்திய இரயில்வே அதிகாரிகள் ஏற்கனவே இறங்கிவிட்டனர்.

இதனால் 2023 ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்திற்கு உள்ளாக குறைந்தது 75 வழித்தடங்களிலாவது வந்தே பாரத் இரயில்களை காணலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் சுதந்திர தினத்தின் போது கூட பிரதமர் நரேந்திர மோடி 2023ஆம் ஆண்டிற்குள்ளாக 75 வந்தே பாரத் இரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கக்கூடியதாக செயல்பாட்டில் இருக்கும் என தனது உரையாடலில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான திட்டங்களுடன் மொத்தம் 1 லட்ச கோடி வரையில் இரயில்வேயில் செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, "கவாச்" என பெயர் மாற்றப்பட்டுள்ள இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு நாட்டில் 2000கிமீ தொலைவிற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த அமைப்பானது கடந்த சில வருடங்களாக நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications