அத்தன புது காரையும் குப்ப மாதிரி போட்டு வச்சிருக்காங்க! விஜய் மாதிரி ஆளுங்க வந்தாதான் இந்த ஆட்டம்லாம் அடங்கும்
இந்தியாவில் அவசர சூழல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான தேவை அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆம்புலன்ஸ்களுக்கான பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இருப்பதால், அவசர சூழல்களில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ்கள் வரவில்லை என்பதால், நோயாளிகளை கட்டிலில் தூக்கி சென்ற நிகழ்வுகளை, தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றயை காலகட்டத்திலும் நாம் செய்திகளில் பார்த்து கொண்டிருப்பது வேதனையான விஷயம். நிலைமை இப்படி இருக்கும்போது தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
22 நகரங்களில் டயல் 112 சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்காக வாங்கப்பட்ட 400 மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) கார்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி கொண்டுள்ளன என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல். டயல் 112 திட்டத்தின் கீழ், அவசர சூழல்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களை மருத்துவமனையில் சேர்க்கலாம்.

அத்துடன் இயற்கை சீற்றம் போன்ற பேரழிவுகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் பெறலாம். இது போன்ற ஆகச்சிறந்த ஒரு திட்டத்திற்காக வாங்கப்பட்ட 400 மஹிந்திரா பொலிரோ கார்கள் தற்போது துருப்பிடித்து வீணாகி கொண்டுள்ளன. சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில்தான் இந்த கொடுமை நிகழ்ந்து கொண்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பூபேஷ் பாகல் (Bhupesh Baghel) முதல் அமைச்சராக இருந்தார். இவர் காங்கிரஸ் (Congress) கட்சியை சேர்ந்தவர். இவரது ஆட்சி காலத்தின் கீழ் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒட்டுமொத்தமாக 400 மஹிந்திரா பொலிரோ கார்கள் வாங்கப்பட்டன.

ஆனால் கடந்த 2023ம் ஆண்டின் இறுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி மாறியது. பாரதிய ஜனதா கட்சியை (BJP) சேர்ந்த விஷ்ணு டியோ சாய் (Vishnu Deo Sai) முதல் அமைச்சராக பதவியேற்றார். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறுவது ஒன்றும் இந்திய அரசியலில் புதிதல்ல.
விஷ்ணு டியோ சாய் முதல் அமைச்சராக பதவியேற்றது முதலே இந்த 400 மஹிந்திரா பொலிரோ கார்களும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துர்க் பகுதியில் உள்ள சத்தீஸ்கர் பாதுகாப்பு படையின் 3வது பட்டாலியன் வளாகத்தில் அவை நிறுத்தப்பட்டுள்ளன.
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய 400 மஹிந்திரா பொலிரோ கார்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த காட்சியை காணும் பொதுமக்கள், சத்தீஸ்கர் மாநில அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி கவலைப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கார் ஆர்வலர்களுக்கு இந்த காட்சிகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்போது இந்த விவகாரம் பெரிதாகியுள்ளதால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து, 400 மஹிந்திரா பொலிரோ கார்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கார்களை இயக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு காருக்கும் சுமார் 20 ஆயிரம் ரூபாயை செலவு செய்ய வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பொலிரோ இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு கார் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 9.79 லட்ச ரூபாய் என்ற விலையில் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.91 லட்ச ரூபாயாக இருக்கிறது. பொலிரோ தவிர, மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) என்ற பெயர்களிலும் 2 மாடல்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில் மஹிந்திரா பொலிரோ நியோ கார் 9.95-12.15 லட்ச ரூபாய் என்ற விலையிலும், மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார் 11.39-12.49 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
மஹிந்திரா பொலிரோ இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஒரு எஸ்யூவி ரக காராக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு காரை 400 என்ற எண்ணிக்கையில் வாங்கி விட்டு வீணடித்து கொண்டிருப்பது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். எனவே அரசாங்கம் உடனடியாக இந்த கார்கள் அனைத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையே இந்த நிகழ்விற்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவே 400 புதிய கார்களும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆளுமை மிக்க புதிய தலைவர்கள் களத்திற்கு வந்தால்தான், இது போன்ற மோசமான அரசியல் கலாச்சாரங்கள் முடிவுக்கு வரும் என்பதும் நெட்டிசன்களின் கருத்து.


Click it and Unblock the Notifications








