கௌம்பி ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் இன்னும் போய் சேரல! இந்த ராட்சத லாரியில் என்ன கொண்டு போறாங்க தெரியுமா?
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் (National Highways) தரம் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே போகிறது. வரும் காலங்களில் அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைகளை காட்டிலும், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் உயர்வானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) கூறி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக தற்போதே நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் பளிச்சென இருக்கின்றன. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மிகவும் எளிமையான ஒரு விஷயமாக மாறி வருகிறது. தொலைதூர பயணங்களை கூட நம்மால் தற்போது சில மணி நேரங்களில் நிறைவு செய்து விட முடிகிறது.
ஆனால் இந்தியாவில் ஒரு லாரி சுமார் 1,150 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்காக ஓராண்டுக்கும் மேலாக பயணம் செய்து வருகிறது. புறப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகி விட்ட சூழலிலும், அந்த லாரி இன்னும் இலக்கை சென்று சேரவில்லை. அதற்கு இன்னமும் 2-3 மாதங்கள் வரை ஆகலாம்!

இந்த லாரி இவ்வளவு மெதுவாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், சாலைகள் மோசமாக இருப்பதால் அல்ல. மாறாக அதில் கொண்டு செல்லப்படும் பொருளே இதற்கு காரணம். நாம் இங்கே பேசி கொண்டுள்ள ராட்சத லாரியில், கோக் ட்ரம்மை (Coke Drum) கொண்டு சென்று கொண்டுள்ளனர்.
கோக் ட்ரம் என்பது, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் (Oil Refineries) பயன்படுத்த கூடிய ஒரு முக்கியமான கருவி ஆகும். இதன் எடை சுமார் 8 லட்சம் கிலோ என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராட்சத லாரியில் வைத்து, மிகவும் மெதுவாக கொண்டு சென்று கொண்டுள்ளனர்.

குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் (Kandla Port) இருந்து சுமார் 1,150 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியானா (Haryana) மாநிலத்தில் உள்ள பானிபட் (Panipat) நகருக்கு இந்த ராட்சத லாரி சென்று கொண்டுள்ளது. இந்த ராட்சத லாரியில் 400 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பயணம் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் கடந்து விட்ட நிலையில், வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் 200 டயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த ராட்சத லாரி ஒரு நாளைக்கு சுமார் 25 கிலோ மீட்டர் மட்டுமே பயணம் செய்யும். ஒரு சில நாட்களில் லாரியை இயக்காமல் நிறுத்தி வைத்து விடுவார்கள்.
ஒரு சில இடங்களில் இந்த லாரி செல்வதற்கு என பிரத்யேகமாக அதிக எடையை தாங்க கூடிய வகையிலான பாலங்களையும் கூட கட்டியுள்ளனர். இந்த ராட்சத லாரியை இயக்கும் பணியில் சுமார் 250 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது வால்வோ (Volvo) நிறுவனத்தின் லாரி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த ராட்சத லாரியின் பயணத்தை விளக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையிலேயே இந்த பயணம் மிகவும் சவாலானது ஆகும். இது போன்ற சவாலான பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டுமென்றால் தெளிவான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவை எல்லாம் மிகவும் அவசியம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








