40கிமீ-க்கு எந்த நெரிசலும் கிடையாது! மாநகராட்சி எல்லாத்தையும் தயார் செஞ்சிடுச்சி... ரூ.19,000 கோடி திட்டம்!!
பெங்களூர் (Bengaluru) எதற்கு பிரபலமானதோ இல்லையோ அதன் போக்குவரத்து நெரிசலுக்கு பிரபலமானது. சென்னையில் இருந்து பெங்களூர் விமான பயண நேரம் 1 மணிநேரம், ஆனால் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு பயண நேரம் 2 மணிநேரம் என பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதனை சமாளிக்க பெங்களூர் மாநகராட்சியும் என்னென்னமோ செய்து வருகிறது. ஆனால், ஒன்றும் நடந்தப்பாடில்லை. அந்த வரிசையில் 40கிமீ-க்கு சுரங்கச்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கிறோம்.
பெங்களூரின் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரை நோக்கி வரும் பிற மாநிலத்தவர் மற்றும் மற்ற கர்நாடக மக்களின் எண்ணிக்கை ஆகும். பெங்களூரில் வருமானத்தை ஈட்ட ஆரம்பித்துவிட்டாலே விரைவாக பொருளாதாரத்தில் முன்னேறிவிட முடிவதால் சொந்த பயன்பாட்டிற்காக ஆளாளுக்கு 2- 3 வாகனங்களை வாங்கிவிடுகின்றனர்.

வாகனங்களில் எண்ணிக்கை அதிகரிக்க, தானாக சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விடுகிறது. இதனை குறைக்கும் முயற்சியாகவே மெட்ரோ இரயில் சேவையை கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் பெங்களூர் மாநகராட்சி கொண்டுவந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து 2-அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதாவது, பாலத்தில் வாகனங்கள் செல்ல, அதற்கு மேலே அமைக்கப்பட்ட பாலத்தில் மெட்ரோ இரயில் செல்கிறது.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் கொண்டுவரப்பட்ட இந்த வகையான 2-அடுக்கு மேம்பாலம் சமீபத்தில்தான் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றுமொரு முயற்சியாக, 40கிமீ தொலைவிற்கு சுரங்கச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்டத்தை பெங்களூர் மாநகராட்சி தயார் செய்து வைத்துள்ளதாம்.

வடக்கே ஹெப்பால் மேம்பாலம் (Hebbal Flyover)-இல் இருந்து தெற்கே சில்க் போர்டு (Silk Board) வரையில் 18கிமீ தொலைவிற்கும், மேற்கே மைசூர் சாலை (Mysore Road)-இல் இருந்து கிழக்கே கே.ஆர் புரம் (KR Puram) வரையில் 22கிமீ தொலைவிற்கும் என மொத்தமாக 40கிமீ தொலைவிற்கு இந்த சுரங்கச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இவ்வளவு தொலைவிற்கு மேம்பாலத்தை கூட கட்டிவிடலாம்; ஆனால் சுரங்கப்பாதை அமைப்பது மிகவும் சவாலானது ஆகும். குறிப்பாக, இதற்கு அதிக செலவாகும். இதில், வடக்கு-தெற்கு சுரங்கச்சாலைக்கு மட்டுமே தற்போதைக்கு விரிவான திட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.19 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தலுக்கு மட்டும் ரூ.2,500 கோடி செலவாகும் கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு- கிழக்கு சுரங்கச்சாலை ஆனது 2ஆம் கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் திட்டத்தை விட கூடுதல் தொலைவிற்கான சுரங்கச்சாலையை கொண்ட 2ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ.25,000 கோடி செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இரு துளைகளை போடாமல், ஒரே துளையை போட்டு அதன் வழியாக எதிரெதிர் திசையில் வாகனங்களை இயங்க அனுமதிக்கலாம் என்கிற திட்டத்தில் பெங்களூர் மாநகராட்சி உள்ளது.
கர்நாடக அரசு சமீபத்தில்தான் 73கிமீ தொலைவிற்கான புறவெளி வட்ட சாலைக்கான அனுமதியை வழங்கியது. ரூ.27,000 கோடி செலவில் இந்த சாலை பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில்தான், பெங்களூர் மாநகராட்சி இந்த 40கிமீ சுரங்கச்சாலை திட்டத்துக்கு அனுமதி கேட்டு மாநில அரசாங்கத்திடம் நிற்கிறது. சென்னைக்கு அருகேயும் இவ்வாறான புறவெளி வட்ட சாலை 132கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் வருவதற்கு முக்கியமான காரணம், காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கான போக்குவரத்துக்கு ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கச்சாலை ஆனது சரியான திட்டமாகும். பல பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் இதனை பின்பற்றி உள்ளன. பெங்களூரில் இந்த சுரங்கச்சாலைகள் வருவதற்கு இன்னும் பல வருடங்களாகிவிடும் என்பது உறுதி. சுரங்கச்சாலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நெருடலான கட்டமைப்பை கொண்டிருப்பினும், சுரங்கச்சாலைகளில் அதிகமாக விபத்துகள் நடைபெறுவது இல்லை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications









