குஜராத்தில் இருந்து ராஜஸ்தான் வர ஒரு வருஷமா? இந்த ராட்சத லாரியில் என்ன இருக்குனு தெரியுமா?
1148 டன் எடையுடன் 448 வீல்கள் கொண்ட ஒரு வெறும் 540 கி.மீ தூரத்தை 11 மாதங்களாக கடந்து வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்

நாம் சாலைகளில் செல்லும் போது அதே சாலையில் பல விதமான வாகனங்கள் செல்வதை பார்த்திருப்போம், கார், பைக், பஸ், லாரி, எல்லாம் செல்லும், ஆனால் சரக்குகளை ஏற்றி செல்லும் பெரிய பெரிய லாரிகள் எல்லாம் பகல்நேரத்தில் பயணிப்பதை பார்ப்பது கடினம் இரவு நேரங்களில் தான் இந்த வாகனங்கள் எல்லாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்.

இதற்கு முக்கியமான காரணம் போக்குவரத்து நெருக்கடி, பகல் நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் இப்படியான வாகனங்கள் எல்லாம் இரவு நேரங்களில் தான் அதிகம் பயணிக்கும். அந்தநேரத்தில்மற்ற வாகனங்களில் பயன்பாடு இருக்காது என்பதாலும் போக்குவரத்து நெருக்கடி குறைவாக இருக்கும் என்பதாலும் அந்த நேரத்தில் தான் கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.

பொதுவாக இப்படியாக பயணிக்கும் வாகனங்கள் எல்லாம் ஒரு இடத்திலிருந்து வெகுதூரம் தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்திற்கு தூரம் அதிகமாக இருக்கும். இப்படியாக சரக்குகளுடன் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள் பெரும்பாலும் ஒரே இரவில் 500 கி.மீ தூரம் வரை கூட கடந்து செல்லும் இதனால் பெரும்பாலும் ஒரு வாகனம் அதிகபட்சம் 2-3 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்யும். இது தான் தற்போது இந்தியாவில் உள்ள நிலைமை.

ஆனால் வெறும் 500 கீ.மீ தூரத்தை ஒரு வாகனம் 11 மாதமாக கடந்து கொண்டிருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா இப்படியான ஒரு சம்பவம் தற்போது இந்தியாவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பஞ்சபத்ரா அருகே உள்ள பார்மர் பகுதியில் எச்பி நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு மையத்திற்கு பாய்லர் ஒன்றை ஆர்டர் செய்திருந்தனர்.

இந்த பாய்லர் வெளிநாட்டிலிருந்து கடல் வழியாக முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து இந்த பாய்லர் பெறப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திற்கு செல்ல வேண்டும். முந்த்ரா துறைமுகத்திலிருந்து இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம் வெறும் 540 கி.மீ தொலைவில் தான் உள்ளது. இங்கு செல்ல சாதாரமாக 11-12 மணி நேரம் தான் ஆகும்.

ஆனால் இந்த பாய்லரை ஏற்றி செல்லும் லாரி கிளம்பி 11 மாதங்கள் ஆகிறது. இன்னும் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்று சேரவில்லை. இதற்கு முக்கியமான காரணம் அந்த பாய்லரின் எடை தான்.அந்த பாய்லர் சுமார் 1148 டன் எடைகொண்டது. அதை தனித்தனியாக பிரித்தும் எடுத்து செல்ல முடியாது என்பதால் மொத்தமாகவே எடுத்து செல்கின்றனர்.

இதற்காக வால்வோ எஃப்எம்எக்ஸ் சிரீஸ் ஹெவி டூட்டி டிரக்கை பயன்படுத்துகின்றனர். அத்துடன் டிரைலர்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள டிரைலரில் மட்டும் மொத்தம் 448 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அத்தனை டயர்களும் இயங்கினால் மட்டுமே இந்த டிரைலரை எடுத்து செல்ல முடியும். இதை எடுத்து செல்லும் போது வழியில் நிறுத்தி நிறுத்தி தான் பயணிக்கின்றனர். இடை இடையே பல்வேறு தடங்கல்களும் இருக்கின்றன.
இதனால் இதை கொண்டு செல்லும் குழு அந்த அந்த பகுதி மின் வாரிய ஊழியர்களிடம் பேசி இடையில் ஏதாவது மின்சார கம்பியிருந்தால் அதை தற்காலிகமாக அகற்றிவிட்டு பயணிக்கின்றனர். இந்த லாரி எந்த பாலங்களிலும் பயணிப்பதில்லை. பாலங்கள் இவ்வளவு எடையை தாங்காது என்ற காரணத்தால் தற்காலிகளாக இதற்கு மாற்று பாதை அமைக்கப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இந்த டிரக்கை ஓட்டி செல்ல இதன் பாதுகாப்பு மற்றும் இதர பணிகளுக்கு மொத்தம் 25 பேர் பணியாற்றுகின்றனர். இந்த லாரி சராசரியாக ஒரு நாளுக்கு 10-15 கி.மீ தான் அதிகபட்சமே பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








