45 வருஷம் பழைய பைக் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!! ராயல்-என்பீல்டு பைக்கில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்
சுமார் 45 வருடங்கள் பழமையான தந்தையின் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை மகன் ரீ-ஸ்டோர் செய்து புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். எங்கு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதையும், இந்த ரீ-ஸ்டோர் ராயல் என்ஃபீல்டு பைக் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பொதுவாகவே உரிமையாளர்களுடன் ஓர் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திவிடும் என்பதை பலர் கூற கேள்விப்பட்டு இருப்போம். அதாவது, மற்ற பைக் கஸ்டமர்களை காட்டிலும், ராயல் என்ஃபீல்டு கஸ்டமர்கள் அவர்களது பைக் உடன் அதிக பிணைப்புடன் இருப்பார்கள். இதனாலேயே, பல வருடங்களாக ராயல் என்ஃபீல்டு பைக்கை பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர்.

ஆனால், நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 45 வருடங்கள் பழமையான ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை பற்றி ஆகும். கேரளாவில் உள்ள இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் வாங்கியுள்ளார். சில வருடங்கள் உபயோகித்த அவர் பின்னர் அதனை பயன்படுத்த முடியாமல் ஓரங்கட்டி உள்ளார்.
அந்த நபருக்கு திருமணம் ஆகிவிட்டது, அவரது மகன்கள் வளர்ந்து பெரிய ஆகிவிட்டனர். அவரது ஒரு மகன் தற்போது, 45 வருடங்களுக்கு பிறகு தனது தந்தையின் புல்லட் பைக்கை தூசி தட்டி, பழுதுப் பார்த்து ஓட வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
இந்த பழமையான ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை வாங்கியவர் பெயர் என்.எஸ்.ஜோஷி. 1979ஆம் ஆண்டில் தனது முதல் பைக்காக இதனை ஜோஷி வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த சமயத்தில் ஜோஷியின் ஏரியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை முதலாவதாக வாங்கியவர் இவர்தானாம். இதன் காரணமாகவே, ஏரியாவில் இவரை என்ஃபீல்டு ஜோஷி அழைக்கின்றனர்.
இந்த பைக்கை எந்த விலையில் இவர் வாங்கினார் என தெரிந்தால், இன்னும் நீங்கள் ஆச்சிரியப்படுவீர்கள். ஏனெனில் இந்த புல்லட் 350 பைக்கை 1979இல் வெறும் ரூ.11,399க்கு ஜோஷி வாங்கியுள்ளார். ஜோஷி 2006ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இருப்பினும், இந்த பைக்கை வாங்கிய ரசீதை இப்போதும் என்.எஸ்.ஜோஷியின் குடும்பத்தினர் வைத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

1990ஆம் காலக்கட்டம் வரையில் இந்த புல்லட் பைக்கை ஜோஷி பயன்படுத்தி வந்துள்ளார். கடைசியாக 1990ஆம் ஆண்டில் இந்த பைக்கை ஜோஷி சர்வீஸ் செய்துள்ளார். அதன்பின் 8 வருடங்களுக்கு, அதாவது 1998 வரையில் இந்த பைக்கை ஜோஷி பயன்படுத்தி உள்ளார். ஜோஷியின் மறைவுக்கு பிறகு இந்த பைக்கை முறையாக பராமரிக்க ஆள் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது. ஜோஷிக்கு கெல்வின் மற்றும் கெவின் என இரு மகன்கள் உள்ளனர்.
ஆனால் இவர்கள் இருவரும் சிறு வயதில் தந்தையின் ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்து பயன்படுத்தவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் ஜோஷியின் குடும்பத்தினரிடம் இவ்வாறான பழமையான புல்லட் பைக் இருப்பதை தெரிந்து, பலரும் பைக்கை வாங்க இந்த குடும்பத்தை அணுகியுள்ளனர். ஆனால், ஜோஷியின் 2வது மகன் கெவின் பைக்கை ரீ-ஸ்டோர் செய்யும் ஐடியாவில் இருந்ததால் விற்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிட்டத்தட்ட சுமார் 26 வருடங்களுக்கு பிறகு ஜோஷியின் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் புதிய தோற்றத்தில் சாலைக்கு வந்துள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஜோஷியின் மகன் மூலமாகவே இந்த பைக் புதிய உயிர் பெற்றிருப்பதுதான். இந்த பைக்கை ஒருவேளை இறந்துப்போன ஜோஷி பார்க்க நேர்ந்தால், பூரிப்பில் ஆனந்த மகிழ்ச்சி அடைவார்.


Click it and Unblock the Notifications









