26 ஆண்டுகள் ஆன பின்பும் இதை மறக்கல! தந்தைக்காக மகன் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்... யாராலும் சுத்தமா நம்ப முடியல!
தந்தை பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று எந்தவொரு மகனுக்கும் ஆசை இருக்கும். ஆனால், அது சில சமயங்களில் முடியாமல் கூட போகலாம். ஏனெனில், ஒருவர் அவரது இளம் வயதில் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை அவரது மகன் வளர்ந்து ஆளாகும் வரையில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பது சிரமமான வேலையாகும். பைக்கை மூலையில் போட்டு வைப்பது கடினமான வேலையல்ல, ஆனால் அதனை 20 வருடங்களுக்கும் மேலாக முறையாக பராமரிப்பது கடினமானது மற்றும் செலவு மிகுந்ததாகும். அதுமட்டுமின்றி, தான் பயன்படுத்திய பழைய காலத்து பைக்கை தனது மகனும் பயன்படுத்துவாரா என்கிற சந்தேகத்தில் பெரும்பாலானோர் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது இளமை கால பைக்கை விற்றுவிடுகின்றனர்.
அவ்வாறுதான் இங்கு ஒருவர் தனது பழைய ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கை விற்றுவிட்டார். ஆனால், அவரது மகன் பல வருடங்களுக்கு முன் விற்கப்பட்ட அந்த பைக்கை எப்படியோ கண்டுப்பிடித்து, அவரது தந்தை கண்முன் நிறுத்தியுள்ளார். கேட்போரை நெகிழ்ச்சி அடைய வைக்கும் இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

பெரும்பாலும் கேரளாவில் தான் இவ்வாறான நிகழ்வுகள் அதிகம் நடைபெறுகின்றன. ஏனெனில், பொதுவாகவே கேரள மக்கள் பைக் & கார்கள் மீது ஆர்வமிக்கவர்களாக விளங்குகின்றனர். இன்னும் சொல்லப்போனால், இதேபோன்று கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவில் ஒருவர் தனது தந்தையின் நிலைகுலைந்து கிடந்த பழைய ராயல் என்ஃபீல்டு பைக்கை ரெடி செய்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
ஆனால், இந்த செய்தியில் நாம் பார்க்க போகும் நபர் 26 வருடங்களுக்கு முன் விற்கப்பட்ட தனது தந்தையின் பழைய ராயல் என்ஃபீல்டு பைக்கை டிராக் செய்து, அடையாளம் கண்டு வாங்கி தனது தந்தை முன் நிறுத்தியுள்ளார். கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 35கிமீ தொலைவில் உள்ளது கூட்டூர். நகர்புற வாழ்க்கையில் இருந்து முற்றிலும் ஒதுங்கிய ஓர் அழகிய சிறு கிராமம் தான், கூட்டூர் ஆகும். எங்கு பார்த்தாலும் மரங்களும், அடர்ந்த செடி, கொடிகளும் தான் தென்படக்கூடிய இடம்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், தென்னிந்தியாவின் மிக பெரிய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம். இந்த அளவிற்கு இயற்கையோடு கலந்துள்ள கூட்டூர் கிராமத்தில் புதுமண தம்பதியாக ஒரு ஜோடி 1970ஆம் காலக்கட்டத்தில் நுழைந்தது. இந்த தம்பதிக்கு பிறந்தவர், ஜோஜோ. இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்து பார்த்ததில் பல் மருத்துவர் போன்று தெரிகிறது.
இவர்தான் தனது தந்தையின் பழைய ராயல் என்ஃபீல்டு பைக்கை கண்டுப்பிடித்து மீண்டும் வாங்கியுள்ளார். 1979ஆம் ஆண்டில் இந்த பைக்கை தனது தந்தைக்கு தாய் பரிசாக வழங்கியதாக கூறும் ஜோஜோ, பைக் வாங்கிய சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும், தற்போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ஒரு படத்தில் சிறுவனாக இருக்கும் ஜோஜோவை காணலாம்.
இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை ஜோஜோவின் தந்தை மற்றும் தாயார் பாலக்காட்டில் உள்ள அவர்களது தோட்டங்களை பார்வையிடுவதற்காக அந்த சமயத்தில் அடிக்கடி கொண்டு செல்வார்களாம். கணவன், மனைவி இருவரும் பைக்கின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, ஜோஜோ மட்டுமே பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்து பயணிப்பாராம். கூட்டூர்- பாலக்காட்டு சாலையில் வனப்பகுதிக்கு நடுவே, பறவைகளின் கூக்குரல் இசையில் மனைவி மற்றும் குழந்தை உடன் பயணிப்பது எந்தவொரு கணவருக்கும் பிடித்தமான விஷயமாகும்.
சுமார் 19 வருடங்களாக இந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்துவந்த இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை 1998ஆம் ஆண்டில் விற்றுவிட்டனர். 26 வருடங்களுக்கு முன் விற்கப்பட்ட அந்த பைக்கை ஜோஜோ எப்படியோ இணைய வசதியை பயன்படுத்தி கண்டுப்பிடித்துவிட்டார். பைக் இன்னமும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது ஜோஜோவுக்கு சந்தோஷமான செய்தியாக அமைந்தது. பின்னர், பைக்கின் அப்போதைய உரிமையாளரை கண்டுப்பிடித்து அவரிடம் தனக்கும் இந்த பைக்கிற்கும் உள்ள பிணைப்பை எடுத்துக்கூறி அவரை விற்க சம்மதிக்க வைத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜோஜோவை மாதிரி நம்மில் நிறைய பேருக்கு தந்தையின் பழைய பைக்கை எப்படியாவது கண்டுப்பிடித்து அவரை மீண்டும் ஓட்டி பார்க்க வைக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், அந்த பைக்கை இப்போது கண்டறிவதே சிரமம். அப்படியும் சிரமப்பட்டு கண்டுப்பிடித்தாலும் அது இன்னும் ரன்னிங்கில் உள்ளதா என்பது சந்தேகம். ஒருவேளை ரன்னிங்கில் இருந்தாலும், அதன் அப்போதைய ஓனர் அதனை விற்பாரா என்பது பெரிய கேள்வி. ஆனால், இந்த சந்தேகங்கள், கேள்விகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஒரே முயற்சியாக பணியாற்றியதன் மூலமாக ஜோஜோ இதனை நிஜமாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications








