மேட்-இன்-இந்தியா இரயில்கள் தான் இனி எல்லா இடமும்!! மத்திய அரசின் டார்க்கெட் இதுதான்... அமைச்சரின் பேச்சு!
இந்தியாவில் 2047ஆம் ஆண்டிற்குள் 4,500 வந்தே பாரத் இரயில்களை வைத்திருப்போம் என மத்திய அமைச்சர் ஒருவர் உறுதியாக தெரிவித்துள்ளார். யார் அந்த மத்திய அமைச்சர் என்பதையும், வந்தே பாரத் இரயில்கள் ஏன் இவ்வளவு முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன என்பதையும் பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வந்தே பாரத், முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் மினி-ஹை ஸ்பீடு இரயில். அதிவேகமாக இயங்கும் அதேநேரம், வந்தே பாரத் இரயில்கள் பாதுகாப்பு தரத்திலும் சிறப்பானதாக உள்ளன. எல்லாவற்றையும் விட முக்கியமாக, முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு சென்னை ஐசிஎஃப்-இல் இந்த இரயில்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனால், உள்நாட்டுக்கான இரயில்கள் உற்பத்தியில் அயல் நாடுகளை சார்ந்திருக்கக் வேண்டிய தேவை நீங்கியுள்ளது. இதன் காரணமாகவே, வந்தே பாரத் இரயில்கள் விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் சுமார் 4,500 வந்தே பாரத் இரயில்கள் இயக்கத்தில் இருக்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமான போக்குவரத்து துறையின் அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "தற்போதைய 2023இல், 23 வந்தே பாரத் இரயில்கள் நாடு முழுவதும் இயக்கத்தில் உள்ளன. 2047ஆம் ஆண்டிற்குள் 4,500 வந்தே பாரத் இரயில்களை இயக்க வேண்டும் என்பது நமது திட்டம்" என்றார். அமைச்சர் கூறுவதை போல், இந்தியா முழுவதும் 23 வந்தே பாரத் இரயில்கள் தற்சமயம் செயல்பாட்டில் உள்ளன.

சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களுக்கு வந்தே பாரத் இரயில் சேவை உள்ளது. இதில் சென்னை- பெங்களூர் இரயில் சேவை ஏற்கனவே வந்தவிட்ட நிலையில், சென்னை -கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் இரயில் சேவையை கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மேலும், 2026 -27ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது முதல் ஹை-ஸ்பீடு புல்லட் இரயில் சேவையை பெறும் எனவும் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "இந்தியன் இரயில்வே சிஸ்டம் உலகிலேயே வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகிலேயே மிக உயரத்தில் இரயில்வே மேம்பாலம் ஜம்மூ & காஷ்மீரில் உருவாக்கப்பட்டு வருகிறது" என்றார்.

விமான போக்குவரத்தை பற்றி பேசிய மத்திய அமைச்சர், நவி மும்பையில் 2வது விமான நிலையம் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படும் என்றார். இவ்வாறு நாடு முழுவதும் புது புது விமான நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த வருடத்தில், நொய்டா மற்றும் அயோத்யாவிலும் புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, விமான கட்டணத்தை உயர்த்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிந்தியா, குறிப்பாக இயற்கை பேரழிவுகளின் போது ஏற்படும் சேதாரங்களை குறைக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு விரும்புவதாகவும் அமைச்சர் சிந்தியா தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் கூறுவதை போல், 2047ஆம் ஆண்டிற்குள் 4,500 வந்தே பாரத் இரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், இந்திய இரயில்வேயில் பழைய ஆங்கிலேயன்-ஸ்டைல் இரயில்களை காண்பது மிகவும் அரிதாகிவிடும். மொத்தமாக பழைய இரயில்கள் அனைத்தும் அகற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2047 சமயத்தில், அருகில் இருக்கும் நகரங்களுக்கு கூட வந்தே பாரத் இரயில் சேவை இருக்கும்.


Click it and Unblock the Notifications









