சும்மா குடுத்தா கூட ஒரு சிலர் சிஎன்ஜி காரை வாங்க மாட்டாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா
இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் (CNG Cars) வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறைவான மாசுபாடு, அதிக மைலேஜ் போன்றவையே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆனால் சிஎன்ஜி கார்களில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. அந்த பிரச்னைகள் என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
ரொம்ப காஸ்ட்லி: பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களை காட்டிலும் சிஎன்ஜி கார்களை இயக்குவதற்கு சற்று குறைவான செலவு மட்டுமே ஆகலாம். ஆனால் இதற்கு நீங்கள் ஆரம்பத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆம், பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி கார்களின் விலை (Price) மிகவும் அதிகம்.

பெர்ஃபார்மென்ஸ் மோசம்: பெட்ரோல், டீசல் இன்ஜின்களின் பவர் அவுட்புட் உடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி இன்ஜின்களின் பவர் அவுட்புட் மிகவும் குறைவு. எனவே சிஎன்ஜி கார்களின் செயல்திறன் (Performance) மந்தமாக இருக்கும். நீங்கள் ஒரு சில வருடங்கள் ஓட்டிய பிறகு, சிஎன்ஜி கார்களின் செயல்திறன் மேலும் குறைந்து விடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
லக்கேஜ் கொண்டு போக முடியாது: கார் வாங்கும் பலர் என்னென்ன வசதிகள் இருக்கிறது? எவ்வளவு விலை? என்பதுடன், பூட் ஸ்பேஸ் (Boot Space) எவ்வளவு? என்பதையும் பார்க்கின்றனர். பூட் ஸ்பேஸ் அதிகமாக இருந்தால்தான், அதிக லக்கேஜ்களை எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் கொண்டு செல்ல முடியும்.

ஆனால் சிஎன்ஜி கார்களின் பின் பகுதியில் டேங்க் இருக்கும் என்பதால், அது இடத்தை அடைத்து கொள்ளும். எனவே உங்களுக்கு போதுமான அளவில் பூட் ஸ்பேஸ் கிடைக்காது. இதன் காரணமாக லக்கேஜ்களை கொண்டு செல்வதில் நீங்கள் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
தேடணும்... தேடிகிட்டே இருக்கணும்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் பங்க்குகள் அளவிற்கு இன்னும் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. எனவே உங்கள் காரில் சிஎன்ஜி தீர்ந்து விட்டால், மறுபடியும் அதனை நிரப்புவதில் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ்நாடு (Tamil Nadu) உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இதுதான் தற்போதைய கள யதார்த்தம்.
இது வேறயா: இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சிஎன்ஜி கார்களை விற்பனை செய்கின்றன. அதிலும் ஒரு சில கார்களில் மட்டுமே சிஎன்ஜி வேரியண்ட்கள் (Variants) கிடைக்கின்றன. அதாவது ஆப்ஷன் குறைவு. எனவே குறிப்பிட்ட ஒரு சில கார்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், சிஎன்ஜி கார்களில் நன்மைகளும் இருக்கின்றன. தீமைகளும் இருக்கின்றன. எனவே நீங்கள் சிஎன்ஜி கார்களை வாங்க போவதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்து விட்டு வாங்குவது நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து. தீமைகள் தெரியாமல் வாங்கி விட்டு, நீங்கள் பின்னால் சிரமப்பட கூடாது என்பதற்காகவே இந்த செய்தி.


Click it and Unblock the Notifications








